You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு இனி பொது நுழைவுத்தேர்வு - என்ன விளைவு?
இந்தியாவின் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கு, பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு மூலமே வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
இந்த பொது நுழைவுத் தேர்வு ஆங்கிலத்தில் Common University Entrance Test (CUET) என்று அழைக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 45 மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் இளநிலைப் படிப்பில் சேர்வதற்கான கட்டாய பொது நுழைவுத் தேர்வு, ஜூலை முதல் வாரத்தில் நடைபெறும் என்று யுஜிசி தலைவர் எம் ஜெகதேஷ் குமார் கடந்த திங்கள்கிழமை அறிவித்தார்.
இந்த நுழைவுத் தேர்வை ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, பெங்காலி, பஞ்சாபி, அசாமி, ஒடியா உள்ளிட்ட 13 மொழிகளில் தேசிய தேர்வு முகமை நடத்த உள்ளது.
இந்தியாவில் உள்ள எல்லா மத்தியப் பல்கலைக்கழகங்களும் இந்தக் கல்வியாண்டு முதல், பொதுவான நுழைவுத் தேர்வின் மூலம் மாணவர்களைச் சேர்க்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும்.
மூன்றரை மணிநேரம் நடைபெறவுள்ள இந்த தேர்வில் உள்ள அனைத்து கேள்விகளும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே கேட்கப்பட்டிருக்கும். எனவே மாணவர்கள் என்சிஇஆர்டி பாட நூல்களில் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
தேர்வு எழுதுபவர்களுக்கு 27 பாடங்கள் அளிக்கப்படும். அதில் ஆறு பாடங்களைத் தேர்வுசெய்து பதிலளிக்க வேண்டும். மூன்றாவது பிரிவில் பொது அறிவுக் கேள்விகள் இடம்பெற்றிருக்கும். இந்த பொது நுழைவுத் தேர்வு முன்பே இருப்பதுதான். ஆனால், இதுவரை 14 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இதனை பின்பற்றி வந்தன.
புதிய கல்விக் கொள்கையின் கீழ் எல்லா மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அத்துடன் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களுக்கு எந்த வெயிட்டேஜும் இந்த மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் சேர்க்கையில் தரப்படாது. அதாவது பொது நுழைவுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும்.
'மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு பாதகம்'
இந்த சேர்க்கைக்கு பிளஸ்டு மதிப்பெண்கள் எந்த வகையிலும் பயன்படாது என்பதால் இது தமிழ்நாட்டில் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. மத்திய பல்கலைக்கழகத்தில் கொண்டுவந்துள்ள இந்த இளநிலை பொது நுழைவுத் தேர்வு குறித்து கல்வியாளர் பேராசிரியர் பிரபா.கல்விமணியிடம் கருத்து கேட்டார் பிபிசி தமிழின் லட்சுமி காந்த் பாரதி.
"இந்த பொது நுழைவுத் தேர்வு என்பது ஒரு மோசமான மத்திய மயமாக்கும் நடைமுறை. இந்தியா என்பது பல மொழிகள், பல மாநிலங்கள் கொண்டது. 13 மொழிகளில் இந்த தேர்வு நடை பெற்றாலும், 12 ஆண்டுகள் மாநில பாடத்திட்டத்தில் படித்த ஒருவர், எப்படி மத்திய பல்கலைக்கழகத்தில் சிபிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் பங்கேற்க முடியும்?
அடிப்படையிலேயே இந்த முறை தவறானது. மேலும் தற்போது அறிவித்துள்ள இந்த முறை, தனியார் நிறுவனங்கள் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி அளிக்கும் முறைக்கு வழிவகுக்கும்," என்று தெரிவித்தார் கல்விமணி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்