You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பள்ளிகளில் வாழைப்பழம்: விவசாயிகளின் புதிய யோசனைக்கு செவி சாய்க்குமா தமிழக அரசு?
- எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
உலகளவில் வாழை பயிரிடப்படும் பரப்பளவு மற்றும் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மொத்தம் 4,90,700 ஹெக்டர் பரப்பளவில், 168,13,500 மில்லியன் டன்கள் ஆண்டிற்கு உற்பத்தி செய்யப்படுகிறது. உலகளவிலான உற்பத்தியில் 17% இந்தியாவிலிருந்து கிடைக்கிறது.
இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வாழை அதிகம் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் அதிகமாகவும் கரூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர், நாமக்கல், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாகவும் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.
முக்கனிகளில் ஒன்றாக முக்கியத்துவம் பெற்றுள்ள வாழை சாகுபடியை மேம்படுத்தி, உழவர்களுக்கு வழிகாட்டும் வகையில் திருச்சி மாவட்டம் போதாவூரில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் தேசிய வாழை ஆராய்சி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு புதிய ரகங்கள், அதிக உற்பத்தி, சந்தை வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு வழிகாட்டப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படு வாழை மற்றும் அது சார்ந்த பொருட்கள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு லாபமளிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டும் வருகின்றன.
இந்நிலையில், வாழை விவசாயிகளுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் உதவிடும் வகையிலான கோரிக்கையை விவசாயிகள் மீண்டும் முன்வைத்துள்ளனர்.
காப்பீட்டில் ஆர்வம் இல்லை
இது குறித்து வேளாண் தொழில்முனைவோராக உள்ள திருச்சி மாவட்டம் போதாவூரைச் சேர்ந்த ஒண்டிமுத்து பிபிசி தமிழிடம் கூறிகையில்,
''தமிழ்நாட்டுல் வாழைப்பழம் உற்பத்தி அதிகளவில் நடைபெறுகிறது. ஓராண்டு பயிரான வாழைக்கு ஏக்கருக்கு 1.50 லட்ச ரூபாய் வரை சாகுபடி செலவாகிறது. நல்ல மகசூல் கிடைத்தால் ஏக்கருக்கு 3 லட்ச ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும்.
ஆனால், திடீர் மழை, வெள்ளம், சூறைக்காற்றினால் வாழை சேதமடைந்தால், மகசூல் இழப்பு ஏற்பட்டு, ஏக்கருக்கு ஒரு லட்சத்திற்கு மேல் வருவாய் இழப்பும் ஏற்படும். அதிக மகசூல் கிடைத்தால், கொள்முதல் விலையும் குறைந்து விடும். நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் போல், வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய ஆர்வம் காட்டுவதும் இல்லை. ஆகையால், அடிக்கடி இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.
ஆகையால், விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தில் வாழைப்பழமும் வழங்க வேண்டும். இதனால், மாணவர்களுக்கு சத்தான பழம் கிடைக்கும். விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும்'' என்கிறார் ஒண்டிமுத்து.
தொடரும் கோரிக்கை
பள்ளி சத்துணவில் வாழைப்பழத்தை சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கையை முதல்முறையாக இப்போது வைக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்று வாழை விவசாயிகள் கூறுகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அஜிதன் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''வாழை விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்துள்ள வாழைப்பழத்தை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
கோரிக்கையாக மட்டும் வைக்காமல், தமிழ்நாடு முழுவதும் 44 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு வாரம் இரு முறை, எந்தெந்த பகுதிகளில் இருந்து விநியோகம் செய்வது. பள்ளிகளுக்கு கொண்டு செல்வது உள்ளிட்டவை குறித்தெல்லாம் விரிவான திட்ட அறிக்கையையும் அரசிடன் வழங்கியுள்ளோம். ஆனாலும் ஏனோ நடைமுறைக்கு வரவில்லை.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோரிக்கையை வைத்த போது, ஒரே தரத்தில், ரகத்தில் வாழைப்பழம் கிடைக்காது என்று அரசு அதிகாரிகள் காரணம் சொன்னார்கள். ஆனால், இப்போது ஓரே ரகத்தில் ஓரே தரத்தில் வழங்கும் வசதி உள்ளது. ஆகையால், திட்டத்தை கொண்டு வர எந்த தடையும் இருப்பதாக தெரியவில்லை'' என்கிறார்.
சாத்தியமா?
தொடர்ந்து அவர் கூறுகையில், ''விவசாயிகளுக்கு உதவி, மாணவர்களின் உடல் நலன் இரண்டையும் கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம், மதிப்பு கூட்டப்பட்ட, வாழைப்பழ உலர் அத்தியை வழங்கவாவது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்,'' என்கிறார் அஜிதன்.
தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நிறைவேற்றப்படவில்லையே என்பது குறித்து அரசுத் துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டதற்கு, ''பள்ளி மதிய உணவு திட்டத்தில் வாழைப் பழத்தையும் வழங்குவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. ஆகையால், பள்ளி மாணவர்களுக்கு வாழைப்பழம் வழங்குவது தற்போது சாத்தியம் இல்லை,'' என்கின்றனர்.
பிற செய்திகள்:
- ரஷ்ய படையெடுப்பு: யுக்ரேனின் எதிர்காலம் என்ன?
- யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி: நாடகத்தில் அதிபரானவர், நாட்டில் அதிபரான கதை
- யுக்ரேன் தலைநகர் கீயவ் தெருக்களில் கடும் சண்டை: வெடிகுண்டு சத்தம் - நேரலை செய்தி
- யுக்ரேனில் ரஷ்யாவின் நுழைவு குறித்து ரஷ்யர்களின் மனநிலை என்ன?
- யுக்ரேன்: ரஷ்யா மீது விதிக்கப்படும் தடைகள் என்ன? சர்வதேச உறவுகளில் தடைகளின் பொருள் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்