வேளாண் மசோதா: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் தீர்மானம்

மத்திய அரசு அறிமுகப்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து அ.தி.மு.க., பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்தார்.

"மூன்று வேளாண் சட்டங்களும் வேளாண்மையை அழிப்பதாகவே இருக்கின்றன என்றே வேளாண் பெருங்குடி மக்கள் சொல்லிவருகிறார்கள். அதனை உணர்த்துவதற்காக கடந்த ஆண்டு முதல் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

சுதந்திர இந்தியாவில் இவ்வளவு எழுச்சிமிகு போராட்டம் நடந்தது இல்லை; இவ்வளவு நீண்ட காலம் நீடித்ததும் இல்லை என்று சொல்லத்தக்க அளவில் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது.

மக்களாட்சிக் காலத்தில் மக்களுக்கு அளிக்கும் மரியாதை இதுதானா என்று கேள்வியும் எழுந்திருக்கிறது. இத்தகைய சூழலில் ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாக எதிர்க்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.

உழவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய நாம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களை நாம் வைத்துள்ளோம். இதன் நோக்கத்தையும் செயல்பாட்டையும் சிதைக்கும் நோக்கத்தோடு இந்த சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ளது.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைக்கு, எந்த மாநில அரசுடனும் ஆலோசனை செய்யாமல் சட்டம் கொண்டுவந்துள்ளது கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமானது. இதனால் மாநில அரசின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன.

கூட்டாட்சித் தத்துவம் கேள்விக்குள்ளாகிறது. ஜனநாயக அமைப்பு சிதைகிறது. இதனால்தான் இதனை நிராகரிக்க வேண்டியிருக்கிறது," என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், "உழவர்கள் இந்த நாட்டில் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். நான் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதுதான் அவர்களது கோரிக்கை.

ஆனால் குறைந்தபட்ச ஆதார விலையை வாய் வார்த்தைக்குக்கூட பேசாத சட்டங்கள்தான் இந்த மூன்று சட்டங்கள்.

விவசாயிகள் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வாணிபம் ஊக்குவிப்பு மற்றும் உதவுதல் சட்டமானது பல ஆண்டுகளாக விளைபொருட்களை விற்பனை செய்துதரும் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தின் வர்த்தகப் பகுதியை வெகுவாக குறைக்கிறது.

இது மாநில அரசின் உரிமைகளில் தலையிடுகிறது. இதனால், உழவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க முடியாத நிலை ஏற்படும். இந்தச் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என்பது உறுதியாகிறது.

விவசாயிகள் அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாத்தல் விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைகள் ஒப்பந்தச் சட்டமானது தனியார் நிறுவனங்களை மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கிறது.

இதனால் விவசாயிகள் லாபகரமான விலையைக் கேட்டுப்பெற முடியாத நிலை ஏற்படும். இது தனியாருக்கே சாதகமாக இருக்கும். இடுபொருள் விலையும் விற்பனை விலைக்கு இணக்கமாக இருக்காது. மரபணு மாற்றப்பட்ட பயிர்களை தடுக்கவும் முடியாது. இது தனியாருக்கு சாதகமாகவே இருக்கும்.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தின்படி சேமிப்புக் கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் எந்தப் பயனும் அடையப்போவதில்லை.

இவை உழவருக்கும் நுகர்வோருக்கும் பாதகமாக அமைந்துள்ளன. இந்தச் சட்டங்களால் வேளாண்மை, பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிடும். ஆகவே இந்தச் சட்டங்களை நீக்க வேண்டுமென்ற தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டும்.

விவசாயிகள் இந்தச் சட்டங்களை எதிர்த்து 385 நாட்களாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது அறவழி போராட்டத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் அரசு இந்தத் தீர்மானத்தை முன்மொழிகிறது." என்று கூறி தீர்மானத்தை வாசித்தார் ஸ்டாலின்.

தீர்மானம்

"கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றிய அரசு விவசாயிகள் நலனுக்கு எதிராக கொண்டுவந்த சட்டங்கள் முறையே

1. விவசாயிகள் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வாணிபம் ஊக்குவிப்பு மற்றும் உதவுதல் சட்டம் 2021

2. விவசாயிகள் அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாத்தல் விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைகள் ஒப்பந்தச் சட்டம் 2021

3. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2021

ஆகிய மூன்று சட்டங்களும் நமது நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும் விவசாயிகளுக்கும் உகந்ததாக இல்லை என்பதால் அவை ஒன்றிய அரசினால் ரத்துச்செய்யப்பட வேண்டும் என இந்த சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது" என அந்தத் தீர்மானம் கூறியது.

யார் யார் தீர்மானத்துக்கு ஆதரவு?

இந்தத் தீர்மானத்தை காங்கிரஸ், வி.சி.க., இடதுசாரிக் கட்சிகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்தன.

பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்புச் செய்தனர். அவைக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், "மாநில அரசு உள்நோக்கத்தோடு தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கிறது. இது விவசாயிகளுக்கு எதிரான தீர்மானம்" எனத் தெரிவித்தார்.

அ.தி.மு.கவும் இந்தத் தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்தது. முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும். அவசர கோலத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு இருக்கிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

இதற்கிடையில், 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். வேல்முருகன், ஜவாஹிருல்லா ஆகியோரின் கோரிக்கைகளை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :