கொரோனா தொற்று: மன்மோகன் சிங் உடல்நிலை எப்படி உள்ளது?

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து திங்கட்கிழமை மாலையில் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவரது உடல் மருத்துவ அளவீடு நிலையாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 89 வயதாகும் மன்மோகன் சிங் மிதமான கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் இருந்ததையடுத்து அவரது வயோதிகம், இணை உடல் பிரச்னைகளை கருத்தில் கொண்டு மருத்துவமனையில் சேருமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதற்கிடையே, மன்மோகன் சிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தகவலறிந்ததும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவர் குணம் பெற வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மிகவும் சிக்கலான நேரத்தில் இந்தியாவுக்கு உங்களுடைய ஆலோசனை அவசியம் என்று கூறி அவர் விரைவில் குணம் அடைய தமது ட்விட்டர் பக்கம் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது சக்தியை பயனபடுத்தி அவர் இந்த கொரோனா வைரஸை எதிர்கொள்ள பிரார்த்தனைகள் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காநதி தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங் பூரண குணம் அடைய பிரார்த்தனைகள் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தகவலறிந்து மிகவும் துயரம் அடைந்ததாகவும் அவர் விரைவில் குணம் பெற வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

இன்று இரவு 8.30 மணி நிலவரப்படி டாக்டர் மன்மோகன் சிங்கின் உடல்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை மன்மோகன் சிங் ஏற்கெனவே போட்டுக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: