You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா நெருக்கடி மத்திய பிரதேசத்தில் அதிரடியாக 60 மணி நேர தொடர் பொதுமுடக்கம்
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து நகர் புறங்களிலும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 9) மாலை 6 மணி முதல், ஏப்ரல் 12 காலை 6 மணி வரை பொது முடக்கம் அமல்படுத்துவதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார் அம்மாநிலத்தின் முதல்வர் சிவ ராஜ் சிங் செளஹான்.
நெருக்கடி கால மேலாண்மை குழுவோடு ஆலோசனை செய்த அவர், மத்திய பிரதேசத்தில் கொரோனா அதிகம் பரவும் பெரு நகரங்களில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார். அத்துடன் பெரு நகரங்களில் கட்டுப்பாட்டு மண்டலங்களையும் உருவாக்கி வருவதாக கூறினார்.
"கொரோனாவை பொருத்தவரை, தொடர்ந்து முக கவசத்தைப் பயன்படுத்துங்கள், சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள், கைகளை அடிக்கடி சானிடைசர் கொண்டு சுத்தம் செய்யுங்கள். கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருப்பதே, இன்றைய தேதிக்கு நீங்கள் மாநிலத்துக்குச் செய்யும் மிகப் பெரிய சேவை" என முதல்வர் சிவ ராஜ் சிங் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசின் கொரோனா வலைதளத் தரவுகளின்படி, மத்திய பிரதேசத்தில் இதுவரை மொத்தம் 3.18 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தற்போது 26,059 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 4,086 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.
மத்திய பிரதேசத்தின் இந்தூர், போபால், ஜபல்பூர், குவாலியர், உஜ்ஜைன் ஆகிய நகரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றன.
ஏப்ரல் 7ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் ஒரே நாளில் 4,043 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
நரேந்திர மோதிக்கு இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி: எய்ம்ஸ் மருத்துவமனையில் புதுச்சேரி, பஞ்சாப் செவிலியர் செலுத்தினர்
பிரதமர் நரேந்திர மோதி இன்று வியாழக்கிழமை புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
மார்ச் 1-ம் தேதி அவர் கோவேக்சின் தடுப்பூசியின் முதல் டோசை செலுத்திக்கொண்டார்.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசி இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டது ஆகும்.
பிரதமருக்கு புதுச்சேரியை சேர்ந்த செவிலியர் நிவேதா, பஞ்சாபை சேர்ந்த செவிலியர் நிஷா ஷர்மா ஆகியோர் தடுப்பூசி செலுத்தினர்.
தடுப்பூசி சப்ளை தொடர்பாக வாக்குவாதம்
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி சப்ளை தொடர்பாக சில மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே வாக்குவாதம் நடந்துவருகிறது.
கொரொனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வயது வரம்பை தளர்த்தும்படி மகாராஷ்டிரா அரசு கேட்டது. ஒடிஷா அரசாங்கமோ 10 நாளைக்குத் தேவையான அளவு கோவிஷீல்டு தடுப்பூசி சப்ளை வேண்டுமென்று கேட்டுள்ளது.
மகராஷ்டிராவில் மூன்று நாளைக்குத் தேவையான தடுப்பூசி மட்டுமே இருப்பதாகவும் மத்திய அரசு கூடுதல் தடுப்பூசிகளை தங்கள் மாநிலத்துக்கு அனுப்பவேண்டும் என்றும் மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோபே கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் சில மாநில அரசுகள் முன்னுரிமையில் யாருக்கு ஊசி போடவேண்டுமோ அவர்களுக்கு போதிய அளவில் போடாமல் கவனத்தைத் திருப்புவதாக கூறி கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
தங்கள் சொந்த தோல்வியை மறைப்பதற்காக அந்த மாநில அரசுகள், மக்களிடம் பீதியைக் கிளப்புவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தான் பேசாமல் இருப்பது தனது பலவீனம் என்று எடுத்துக்கொள்ளப்படக்கூடாது என்பதால் தாம் பேசுவதாகவும் அவர் தெரிவித்தார். கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்கு மகாராஷ்டிர அரசு போதிய பொறுப்போடு நடந்துகொள்ளவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
பிற செய்திகள்:
- இலங்கையில் 11 இஸ்லாமியவாத அமைப்புகளுக்கு தடை: 'இனவாத சிங்கள அமைப்புகளுக்கு தடை இல்லை'
- ரஃபால் விமானம்: இடைத்தரகருக்கு பிரெஞ்சு நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியதாக சர்ச்சை
- ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற மலேசிய முன்னாள் பிரதமருக்கு திவால் நோட்டீஸ்
- தமிழக அரசு வழங்க வேண்டிய கடன்; ஆட்சியர் அலுவலக சொத்துகளை ஜப்தி செய்ய வந்தவர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: