You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவில் தேர்தல் பிரசாரம் முடிவு: கடைசி நாளில் யார், எங்கு பரப்புரை?
ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும் இன்று, ஞாயிற்றுக்கிழமை, மாலை 7 மணியுடன் தேர்தல் பரப்புரை முடிவடைந்தது.
மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவை ஏப்ரல் 6ஆம் எதிர்கொள்ளும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரையும் இதே நேரத்தில் முடிந்தது.
வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுப்பதற்காக ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நீட்டிக்கப்படும் என்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
வாக்குப்பதிவு முடியும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன் தேர்தல் பரப்புரை முடியவேண்டும் என்பது இந்தியாவின் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதியாகும். அதன்படி இன்று, ஏப்ரல் 4ஆம் தேதி, இரவு 7 மணிக்கு பரப்புரை முடிந்தது.
இன்று இரவு 7 மணியில் இருந்து 'சைலன்ஸ் பீரியட்' தொடங்குகிறது. இதன்போது பிரசார ஊர்வலங்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்துவது தேர்தல் விதிமீறல் ஆகும்.
தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகள், கேரள மாநிலத்தில் 140 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் 30 தொகுதிகள் ஒரே நாளில் தேர்தலைச் சந்திக்கின்றன.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, அவர் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
தமிழக முதலமைச்சரும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி, பிரசாரம் நிறைவு பெறும் 7 மணி ஆவதற்கு 20 நொடிகளுக்கு முன்புவரை தான் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் வாகனத்தில் நின்றவாறு பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் நாளை மறுநாள் நடைபெற உள்ள தேர்தலில் வென்று அதிமுக ஆட்சியமைத்தால் நிறைவேற்றுவதாக அளித்துள்ள வாக்குறுதிகளை மக்களுக்கு நினைவூட்டினார்.
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் அவர் போட்டியிடும் போடிநாயக்கனூர் தொகுதியில் வாக்கு சேகரித்தார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர் களமிறங்கும் கொளத்தூர் தொகுதியிலும் சென்னையில் உள்ள வேறு சில தொகுதிகளிலும் இன்று தேர்தல் பரப்புரை செய்தார்.
ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார். அங்கு இன்று மாலை நடைபெற்ற பிரசார கூட்டம் ஒன்றில் சுமார் ஆறரை மணியுடன் தனது பேச்சை முடித்துக்கொண்ட அவர், பாரம்பரிய வழக்கப்படி வீடு வீடாக நடந்துச் சென்று வாக்கு சேகரித்தார். மேலும், அங்கு குவிந்த வாக்காளர்களுடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.
கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையில் கடைசி இரண்டு நாட்களான நேற்றும் இன்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அகில இந்தியத் தலைவரும், கேரளத்தில் உள்ள வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி அங்கு பரப்புரை செய்தார்.
இன்று பிரியங்கா காந்தி தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை செய்யத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரது கணவர் ராபர்ட் வத்ராவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் கடைசி நேரத்தில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.
கேரள மாநிலத்துக்கு இருநாள் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜவுக்கு ஆதரவாக மாநிலத் தலைநகர் திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் பரப்புரை செய்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று நடந்த மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் இந்திய பாதுகாப்புப் படையினர் 22 பேர் கொல்லப்பட்டாதால், அசாம் மாநிலத்துக்கு பாரதிய ஜனதா கட்சிக்காக பரப்புரை செய்யச் சென்றிருந்த இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு இன்று தலைநகர் புதுடெல்லிக்கு திரும்பினார்.
பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா கடைசி நாளான இன்று புதுச்சேரியிலும், அதை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளிலும் பரப்புரை மேற்கொண்டார்.
நான்கு மாநிலங்களுக்கும் ஓர் ஒன்றிய பிரதேசத்துக்கு நடக்கும் இந்தத் தேர்தல்தான், சென்ற ஆண்டு தொடக்கத்தில் அவர் தேசிய தலைவராக பதவியேற்றபின் பாஜக எதிர்கொள்ளும் பெரிய தேர்தலாகும்.
பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே கடும் அரசியல் மோதல் உள்ள மேற்கு வங்க மாநிலத்தில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று பரப்புரை செய்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: