You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி விவசாயிகள் போராட்டக் களத்தில் தடியடி - 10 முக்கிய தகவல்கள்
இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி - உத்தரப் பிரதேச எல்லையில் அமைந்துள்ள காசிப்பூரில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்று காசியாபாத் மாவட்ட நிர்வாகம் நேற்று (வியாழன்) இரவு அறிவுறுத்தியது.
இதனால் அங்கு உண்டான பதற்றமான சூழல், டெல்லி-ஹரியானா இடையில் உள்ள சிங்கு, டிக்ரி ஆகிய மாநில எல்லைகளுக்கும் பரவியுள்ளது.
சிங்கு, டிக்ரி பகுதிகளில் போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்த, உள்ளூர்வாசிகள் என்று கூறிக்கொள்ளும் கும்பல் விவசாயிகள் இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்று கூறி வருகிறது. அந்த இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
போராட்டங்களின் முக்கிய மையங்களாக விளங்கும் காசிப்பூர், சிங்கு, டிக்ரி ஆகிய மாநில எல்லைகளில் நேற்று மாலை முதல் இதுவரை நடந்தது என்ன என்பதை பிபிசி 10 முக்கிய புள்ளிகளாகத் தொகுத்து வழங்குகிறது.
1. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133-இன் கீழ், காசிப்பூர் எல்லையில் உள்ள கூட்டத்தை கலைக்குமாறு காசியாபாத் மாவட்ட நிர்வாகம் காசிப்பூரில் போராடும் விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்கியது. ஆனால், அதற்கு விவசாயிகள் மறுத்துவிட்டனர்.
2. சட்டவிரோதமான வழிகளில் தொல்லை செய்யும் அல்லது தடையை ஏற்படுத்தும் நபர்கள், பொருட்கள் அல்லது கட்டடத்தை நீக்க, தொடர்புடைய மாவட்ட நிர்வாகத்துக்கு இந்தச் சட்டப்பிரிவு அதிகாரம் வழங்குகிறது. இது மாவட்ட நிர்வாகத்தின் முடிவு என்றும், முதல்வர் உத்தரவல்ல என்றும் பிபிசியிடம் பேசிய உத்தரப் பிரதேச மாநில கூடுதல் தலைமைச் செயலர் நவ்நீத் சேகல் தெரிவித்தார்.
3. "பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்து போராடும் விவசாயிகளை தாக்குவதற்காக வந்துள்ளனர். இங்கு போராட்டம் நடத்துபவர்கள் சுடப்பட்டால், காவல் துறைதான் அதற்கு பொறுப்பு," என்று காசிப்பூரில் போராடிவரும் பாரதிய கிசான் யூனியனின் மூத்த தலைவர் ராகேஷ் திகைத் அழுதுகொண்டே கூறினார்.
4.இதனிடையே அங்கு அதிகமான எண்ணிக்கையில் டெல்லி காவல்துறையினர், உத்தரப் பிரதேச காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டனர்.
5.ராகேஷ் திகைத் கண்ணீர்விட்ட காணொளி உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் வைரலாகப் பரவியது. இதனால் வியாழன் இரவு முதல் போராட்டம் நடந்துவரும் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் குவியத் தொடங்கினர்.
6. காசிப்பூர் எல்லையில் பதற்றமான சூழல் உண்டான பின்பு டிக்ரி மற்றும் சிங்கு ஆகிய எல்லைப் பகுதிகளிலும் வியாழன் இரவு முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவது தொடங்கியது.
7. இணையதளம் மற்றும் செல்பேசி சேவைகளும் டிக்ரி மற்றும் சிங்கு ஆகிய எல்லைகளில் இயங்காததால், இந்தப் பகுதிகளில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு செய்திகள் வந்து சேர்வது மிகவும் மெதுவாகவே இருக்கிறது. இதனால் இங்கு வதந்திகளை பரப்புகிறார்கள் என்று அங்குள்ள விவசாயிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
8. குடியரசு நாள் டிராக்டர் பேரணியின் போது வன்முறை ஏற்பட்ட சமயத்தில் செங்கோட்டையில் சீக்கிய மதக் கொடியை ஏற்றியதற்காக பஞ்சாபி நடிகர் தீப் சித்துவை குருநாம் சிங் உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் என பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்கத்தினரும் கடுமையாக விமர்சித்தனர். தீப் சித்து மத்திய அரசின் தரகர் என்று பாரதிய கிசான் யூனியனின் ஹரியானா மாநில தலைவர் குருநாம் சிங் சதுனி கூறினார்.
9. சிங்கு எல்லையில் விவசாயிகள் போராடும் இடத்தில் , உள்ளூர்வாசிகள் என்று சொல்லக்கூடியவர்கள் சிலர் தங்களின் இடம் காலி செய்யப்பட வேண்டும் என்று கூறி வெள்ளி மதியம் தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றம் உண்டானது.
10.இந்த கும்பல் எப்படி வந்தது என்று தெரியவில்லை என்று கூறும் காவல்துறை, கண்ணீர் புகைக்குண்டை வீசி மற்றும் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முயன்று வருகிறது. இதன்போது அங்குள்ள காவல்துறையினர் சிலரும் காயமடைந்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: