You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நரேந்திர மோதியை விமர்சிக்கும் ராகுல் காந்தி: 'கொரோனா வைரஸ் பரவலுக்கு முடக்கநிலை காரணம்'
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி இந்திய பிரதமர் நரேந்திர மோதியை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தனது அலுவல்பூர்வ இல்லத்தில் மயில்களுக்கு உணவளிக்கும் காணொளி ஒன்றை தனது சமூக ஊடகப் பக்கங்களில் நரேந்திர மோதி சென்ற மாதம் பகிர்ந்திருந்தார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பது குறித்த தனது ட்விட்டர் பதிவில், அதையும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி.
இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் வழக்கமாக நடக்கும் தேதியை விட இந்த ஆண்டு தாமதமாக இன்று தொடங்கியுள்ள சூழலில், இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் அவர் ஒரு பதிவிட்டுள்ளார்.
"இந்தியாவின் கொரோனா வைரஸ் பாதிப்புகள் இந்த வாரம் 50 லட்சத்தை கடக்கும். தற்போது 10 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திட்டமிடப் படாமல் அமல்படுத்தப்பட்ட முடக்கநிலை ஒரு தனி மனிதரின் அகங்காரத்தால் நடந்தது. இது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு வழிவகுத்தது. தற்சார்பு என்று மோதி அரசாங்கம் கூறுவது உங்கள் வாழ்க்கையை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்றுதான். ஏனென்றால் பிரதமர் மயில்களுடன் பிசியாக இருக்கிறார்," என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
இதனிடையே இன்று நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, "நாம் பாதுகாப்பு நடவடிக்கைகளை தளர்த்தக் கூடாது; வைரஸ் தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்," என்று கூறினார்.
"மாறுபட்ட சூழ்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவல், நமது கடமை ஆகிய இரண்டுமே இப்போது நம் முன் உள்ளன. கொரோனா காலத்தில் தங்களது கடமையை செய்யும் பாதையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்துள்ளனர்," என்று தமது உரையில் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: