"தற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா பேச்சு போலித்தனமானது" - நீதிபதிகள் அதிருப்தி

இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

இந்து தமிழ் திசை: "மத்திய அரசின் தற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா பேச்சு போலித்தனமானது" - நீதிபதிகள் அதிருப்தி

நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் பயணிகளுக்கான சேவை, சரக்குகளை கையாளும் சேவை போன்றவற்றுக்கான ஏலத்தில் போட்டியிடும் நிறுவனங்களுக்கான தகுதியை மாற்றியிருக்கும் மத்திய அரசின் செயல், அதிருப்தி அளிப்பதாகவும். உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் பேச்சு போலித்தனமாக இருக்கிறது என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் சரக்குகள் கையாளுதல், விமானங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சேவைகளுக்கான நிறுவனங்களைத் தேர்வு செய்யும் ஏலம் நடத்தப்பட உள்ளது.

இந்த ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான தகுதியை சமீபத்தில் இந்திய விமான ஆணையம் மாற்றி அமைத்து, ஆண்டுக்கு ரூ.35 கோடி வருமானம் கொண்ட நிறுவனங்கள்தான் பங்கேற்க முடியும் என புதிய விதியைக் கொண்டுவந்தது.

இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள், உங்கள் அரசியல் தலைமைப் பதவியில் உள்ளவர்கள் மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா பற்றிப் பேசுகிறார்கள். உள்நாட்டு தொழில்களை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், உங்களின் செயல்பாடு அவர்களின் வார்த்தைக்குப் பொருத்தமாக இல்லையே. நீங்கள் முழுமையாக போலித்தனமாக இருக்கிறீர்கள்.

இது போன்று சிறிய நிறுவனங்களை வெளியேற்றும் விதத்தில் நடந்துகொண்டால், எதற்காக மேக் இன் இந்தியா பற்றி உங்கள் அரசியல் தலைவர்கள் பேசுகிறார்கள். இதுபோன்று நடப்பது அவர்களுக்கு தெரியுமா?

மத்திய அரசும், இந்திய விமான ஆணையமும் சிறு நிறுவனங்களை ஏலத்திலிருந்து வெளியேற்ற விரும்பினால், வெளிப்படையாக அவர்களுக்கு வாய்ப்பில்லை என்று சொல்லுங்கள். இதுபோன்று போலித்தனமாகப் பேசாதீர்கள். இதுதான் உங்கள் கொள்கையாக இருந்தால், துணிச்சலாகச் சொல்லுங்கள். இதுகுறித்து மத்திய அரசு, இந்திய விமான ஆணையம் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்" என்று நீதிபதிகள் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: "ஜெகத்ரட்சகன் எம்.பி.க்கு கொரோனா தொற்று"

அரக்கோணம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

திமுக எம்.பி.யான ஜெகத்ரட்சகன் பொது முடக்க காலத்தில் நலத் திட்டப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், அவருக்கும், அவரது மனைவிக்கும் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், இருவருக்குமே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மனைவியின் உடல் நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி: "பேஸ்புக்கில் அதிக செலவில் விளம்பரம்: பா.ஜனதா முதலிடம்"

பேஸ்புக்கில் அதிக செலவில் விளம்பரம் செய்த இந்திய அரசியல் கட்சிகளில்,பா.ஜனதா முதலிடத்தில் உள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

பேஸ்புக்கில் அதிக செலவில் அரசியல் விளம்பரம் செய்த இந்திய அரசியல் கட்சிகளில், மத்தியில் ஆளும் பா.ஜனதா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் நடப்பு ஆகஸ்ட் வரையிலான ஒன்றரை ஆண்டுகளில் மொத்தம் 4 கோடியே 61 லட்சம் ரூபாயை பாஜக விளம்பரங்களுக்காக செலவழித்துள்ளது.

ஒரு கோடியே 84 லட்சம் ரூபாய் செலவழித்துள்ள காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதிகம் செலவு செய்ததில் முதல் 10 இடங்களில் உள்ள மற்ற 4 விளம்பரதாரர்களும் பாஜகவுடன் தொடர்புடையவை தான்" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: