விநாயகர் சிலை விவகாரம்: தடையை மீறினால் அரசு நடவடிக்கை எடுக்கும் என உயர் நீதிமன்றம் கருத்து

விநாயகர் சதுர்த்தியன்று தடையை மீறி விநாயர் சிலைகள் நிறுவப்படும் என்ற இந்து அமைப்புகளின் அறிவிப்பின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தடை மீறப்பட்டால் மாநில அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 28ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக, அந்த நிகழ்வை கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, பொது இடங்களில் விநாயகர் சிலையை நிறுவுவதையோ, சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதையோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதையோ, அச்சிலைகளை நீர்நிலையில் கரைப்பதையோ ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க முடியாது என தமிழக அரசு தெரிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணி அமைப்பு, தடையை மீறி தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகள் நிறுவப்படும் என அறிவித்தது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்பழகன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

"இந்து முன்னணியினர் ஒன்றரை லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவோம் என்று கூறியுள்ளனர். அதனைத் தடுக்க வேண்டும். தடையை மீறி ஊர்வலம் செய்பவர்களைக் கைது செய்ய வேண்டும்" என்று தனது மனுவில் அன்பழகன் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி - செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கவும் ஊர்வலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தடையை மீறுவோம் என இந்து முன்னணி கூறியிருப்பது குறித்து மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

அரசின் தடை மீறப்பட்டால் அதை தமிழக அரசு கவனித்து கொள்ளும். அது தொடர்பாக நீதிமன்றம் எதையும் கூற முடியாது. அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று நம்புவதாகக் கூறிய நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

இதேபோல, இந்து முன்னணி அமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும் மாநில காவல்துறை தலைவருக்கும் உத்தரவிடக் கோரி இளஞ்செழியன் என்பவர் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் சுந்தரேஷ் - ஹேமலதா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

ஏற்கனவே தலைமை நீதிபதி அமர்வு முன்பாக வந்த இதே போன்ற வழக்கு முடித்துவைக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், புதிய உத்தரவு ஏதும் தேவையில்லை என்று கூறி இந்த வழக்கையும் முடித்துவைத்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: