You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கைதிகளை தாக்கக்கூடாது: போலீசாருக்கு சென்னை ஆணையர் அறிவுரை
காவல்நிலையத்திற்கு கைது செய்து அழைத்துவருபவர்களை அடிப்பதும், துன்புறுத்துவதும் சட்டப்படி தவறு என்றும் யாருடைய மனதை துன்புறுத்தக்கூடாது என்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், வாகனத் தணிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினார். செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் விஸ்வநாதன், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை-மகன் வன்முறைக்கு ஆளாகி சிறையில் இறந்தது குறித்த குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த அவர் '' காவல் நிலையத்திற்கு வருபவர்களை தாக்குவதும், துன்புறுத்துவதும் சட்டப்படி தவறு.
யாருடைய மனதையும் புன்படுத்துவது போல் பேசக்கூடாது என காவல்துறையினருக்கு கூறியுள்ளோம். காவல்நிலையத்திற்கு வருபவர்களை தவறான முறையில் கையாளக் கூடாது என அனைத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளோம். கைதாகி காவல்நிலையத்திற்கு கொண்டுவருபவர்களை எப்படி நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் அளித்துள்ளது. அதனை பின்பற்றவேண்டும்,'' என்று அவர் தெரிவித்தார்.
மேலும், காவலர்கள் யாருக்கும் உடல்நிலை சிறிது சரியில்லை என்றாலும் அவர்கள் பணிக்கு வரவேண்டாம் என்று தெரிவித்துள்ளதாகவும், அவர்களை வீட்டிலேயே ஒய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தாலும் அவர்கள் பூரண குணமடைந்த பின்பு தான் பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம் என்றும் அவர் கூறினார்.
ஊரடங்கு குறித்து பேசிய அவர் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே வாகன அனுமதி அளிக்கப்படு வருகிறது என்றார். போலி இ-பாஸ் பயன்படுத்தி சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஊரடங்கின்போது, பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
ஊரடங்கின்போது வாகன சோனையில் 52,234 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: