You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Donald Trump India Visit: டெல்லி வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
இரண்டு நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) முற்பகல் குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன் பங்கேற்ற 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்வையடுத்து ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலை தனது குடும்பத்தினருடன் பார்வையிட்ட டிரம்ப், இரவு ஏழரை மணியளவில் டெல்லி வந்தடைந்தார்.
டெல்லியிலுள்ள இந்திய விமானப் படை தளத்தில் வந்திறங்கிய டிரம்ப் அருகிலுள்ள தனியார் விடுதியில் இன்றிரவு தங்குகிறார்.
அதிபா் டிரம்புடன், அவரது மனைவி மெலானியா டிரம்ப், மகள் இவாங்கா, மருமகன் ஜேரட் குஷ்னா் ஆகியோரும் வந்துள்ளனா். மேலும், டிரம்ப் நிா்வாகத்தைச் சோ்ந்த அமைச்சா்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவும் இந்தியா வந்துள்ளது.
அந்தக் குழுவில் அமெரிக்க நிதியமைச்சா் ஸ்டீவன், வா்த்தகத் துறை அமைச்சா் வில்பா் ராஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ராபா்ட் ஓபிரையன், எரிசக்தித் துறை அமைச்சா் டேன் புரூலியெட் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
ஆக்ரா நிகழ்வுகள்:
6.50: உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சுமார் ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக தனது குடும்பத்தினருடன் பார்வையிட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அங்கிருந்து டெல்லிக்கு புறப்பட்டார்.
5.35: "தாஜ்மஹால் பிரமிப்பைத் தூண்டுகிறது. இந்திய கலாச்சாரத்தின் செழிப்பான மற்றும் பன்முக அழகுக்கு சான்றாக இது விளங்குகிறது! நன்றி, இந்தியா" என்று தாஜ்மஹாலில் நுழைவதற்கு முன்பு அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
5.25: அமெரிக்க அதிபர் டிரம்ப் - மெலானியாவுடன் அவர்களது மகள் இவான்கா மற்றும் மருமகன் ஜாரெட் ஆகியோரும் தாஜ்மஹாலை பார்வையிட்டு வருகின்றனர்.
5.15: தாஜ்மஹால் வளாகத்திலுள்ள பல்வேறு பகுதிகளை தனது மனைவி மெலானியாவுடன் பார்வையிட்டு வருகிறார் டிரம்ப்.
5.00: தாஜ்மஹால் வந்தடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நுழைவு வாயிலில் உள்ள பார்வையாளர் புத்தகத்தில் பதிவிட்ட பிறகு, அங்குள்ள பகுதிகளை தனது மனைவி மெலானியாவுடன் பார்வையிட்டு வருகிறார்.
4.40: ஆக்ரா விமான நிலையத்தில் இருந்து தாஜ்மஹாலை நோக்கி புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
4.25: டிரம்புக்கு ஆக்ரா விமான நிலையத்தில் உத்தரப்பிரதேச மாநில பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோர் கண்டுகளித்தனர்.
4.15: டிரம்பை வரவேற்ற யோகி ஆதித்யநாத்
ஆக்ரா விமான நிலையம் வந்தடைந்த அமெரிக்க அதிபர் அதிபர் டொனால்டு டிரம்பை உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றனர்.
4.10: அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆக்ரா வந்தடைந்தார்.
2.55: அகமதாபாத்தில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவுக்கு கிளம்பினார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
2. 30: டிரம்ப் - மோதி பேசிக்கொண்டிருக்கும் போதே அரங்கத்திலிருந்து வெளியேறிய மக்கள்
2.29: இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து பயங்கரவாதத்தை தடுக்கும் பணியில் ஈடுபட கடமைப்பட்டுள்ளது. இதன் காரணமாக நான் பதவியேற்றதிலிருந்து பாகிஸ்தானுடன் நேர்மறையான வழயில் செயல்பட்டு, பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள் மற்றும் தீவிரவாதிகளை கண்டறிய பணிபுரிந்து வருகிறேன்.
2.20: மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புமிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற உபகரணங்களை இந்திய ஆயுதப் படைக்கு விற்கும் ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகும்.
2. 18: உலகின் மிகச்சிறந்த மற்றும் அச்சம் தரக்கூடிய ராணுவ உபகரணங்களை இந்தியாவிற்கு வழங்க அமெரிக்கா ஆர்வமாக உள்ளது. நாங்கள் மகத்தான ஆயுதங்களை உருவாக்குகிறோம்.
2. 17: இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளுமே பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்க இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடும். ஐஎஸ் அமைப்பு முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது.
2.14: உலகம் முழுவதும் உள்ள மக்கள் பாலிவுட் படங்கள், பாங்க்ரா நடனம் மற்றும் தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே மற்றும் ஷோலே போன்ற மகத்தான படங்களை பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர்.
2.13: நீங்கள் குஜராத்தின் பெருமை மட்டுமல்ல; நீங்கள் கடின உழைப்பால் இந்தியர்கள் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டு நீங்கள்.
2.01: "`டீ வாலா` வாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் பிரதமர் மோதி. அவர் டீ விற்கும் பணி செய்தார். அனைவரும் அவரை நேசிக்கின்றனர். ஆனால் நான் சொல்கிறேன் அவர் மிகவும் கடினமானவர்." - டிரம்ப்
1. 59: "மொடெரா அரங்கம் மிக அழகாக உள்ளது. மெலானியா மற்றும் எனது குடும்பத்தினர் இந்த மகத்தான வரவேற்பை என்றும் மறக்கமாட்டோம். இந்த நிமிடத்திலிருந்து இந்தியா எங்கள் இதயத்திற்கு நெருங்கிய நாடு," : டிரம்ப்
1.54: இரண்டு வருடங்களுக்கு முன் இவான்கா டிரம்ப் இந்தியா வந்தார். அப்போது அவர் மீண்டும் இந்தியா வர விரும்புவதாக தெரிவித்திருந்தார். தற்போது மீண்டும் இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இவான்காவை வரவேற்கிறேன் என்று மோதி கூறினார்.
1:53: இந்த நிகழ்ச்சியின் பெயர் `நமஸ்தே` - இது உலகின் பழமையான மொழியான சமஸ்கிருதமாகும். இதன் பொருள் நாங்கள் அந்த மனிதருக்கு மற்றும் மரியாதை வழங்கவில்லை. அவருக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையையும் மதிக்கும் என்று பொருள்.
1.50 : கேரளாவில் டொனால்ட் டிரம்ப் மற்றும் மோதி ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.
1.43: நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் உரையாற்ற மேடைக்கு வந்த டிரம்ப் மற்றும் மோதி ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர். இருநாட்டு தேசிய கீதமும் ஒலிக்கப்பட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
1. 40: மொடெரா அரங்கத்திற்கு வந்த டிரம்பின் மகள் இவான்கா டிரம்புடன் மக்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
1. 35: இன்னும் சற்று நேரத்தில் மொடெரா அரங்கத்தில் நடைபெறும் `நமஸ்தே டிரம்ப்` நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார் டொனால்ட் டிரம்ப்.
இந்த அரங்கத்தில் சுமார் 1.10 லட்சம் பேர அமரலாம். அரங்கம் முழுவதும் மக்கள் நிறைந்திருக்கும் காட்சிகளை தூர்தர்ஷன் நேரலையில் காண முடிகிறது.
1.22: "நமஸ்தே டிரம்ப்"
டொனால்ட் டிரம்ப் வரவேற்பு கமிட்டி என்ற ஒரு கமிட்டியே நமஸ்தே டிரம்ப் நிகழ்வை ஒருங்கிணைத்துள்ளது. நான்கு நாட்களுக்கு முன்பு வரை இந்த கமிட்டி குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. நகரின் அனைத்து பகுதிகளிலும், இந்த நிகழ்ச்சி குறித்த பதாகைகள் இருந்தபோதிலும், இதை ஒருகிணைப்பவர்கள் குறித்த எந்த ஒரு தகவலும் இல்லாமல் இருந்தது கேள்விக்குள்ளானது.
இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு உள்ளதா என்று, அக்கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, டொனால்ட் டிரம்ப் வரவேற்பு கமிட்டி இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துகிறது, அவர்கள் எங்களுக்கு அழைப்பு விடுப்பார்களா என்று தெரியவில்லை என அவர் தெரிவித்தார். அப்போதுதான், இந்த கமிட்டியின் பெயரே வெளியே வந்தது.
இதற்கிடையே பலமுறை முயன்றபோதும், இந்த கமிட்டி குறித்த எந்த தகவலும் பிபிசியால் பெற முடியவில்லை.
24 மணிநேரங்களுக்கு முன்புதான், அகமதாபாத் மாநகராட்சி இந்த கமிட்டி உருவாக்கப்பட்டது குறித்த தகவலை வெளியிட்டது. அதன் மேயர், பிஜில் படேல், இந்த கமிட்டியின் தலைவர் தானே என டிவிட்டரில் பதிவிட்டார்.
நிகழ்ச்சியை நடத்துவது இந்த கமிட்டிதான் என்பது இப்போது வெளிவந்த தகவல் என்றாலும், இந்நிகழ்ச்சிக்கு செலவாகும் தொகையை கமிட்டிக்கு அளிப்பது மாநில அரசா, மத்திய அரசா என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1.20: பிரதமர் மோதி மற்றும் டொனால்ட் டிரம்ப் மொடெரா அரங்கத்திற்கு வந்தடைந்தனர்.
1.05: நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் சர்தார் பட்டேல் அரங்கம்தான் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கமாகும். இதில் சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்கள் அமரலாம்.
1.00: சபர்மதி ஆசிரமத்திலிருந்து மொடேரா அரங்கம் செல்லும் வழி நெடுகிலும் டிரம்பை வரவேற்கும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
12.48: மொடெரா அரங்கத்தில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் `நமஸ்தே டிரம்ப்` நிகழ்ச்சியை பார்க்க கூடியுள்ளனர் என தூர்தர்ஷன் தொலைக்காட்சி.
12.46: இந்த பயணத்திற்கு மிக்க நன்றி என சபர்மதி ஆசிரமத்தின் வருகை பதிவில் எழுதியுள்ளார் டொனால்ட் டிரம்ப்
12.45: சபர்மதி ஆசிரமத்திலிருந்து மொடெரா அரங்கத்திற்கு புறப்பட்டனர் டிரம்ப் மற்றும் மோதி.
12.44: அசாம் மாநிலம் கெளஹாத்தியில் டிரம்புக்கு எதிரான பதாகைகளை ஏந்தி ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
12. 39: வருகை பதிவேட்டில் தனது கருத்தை பதிந்த டிரம்புக்கு, மகாத்மா காந்தியின் மூன்று குரங்குகள் குறித்து விவரித்தார் பிரதமர் மோதி.
12.35: சபர்மதி ஆசிரமத்தை சுற்றிப் பார்த்த டிரம்ப், அங்குள்ள ராட்டையில் மனைவி மெலானியா டிரம்புடன் நூல் நூற்பது குறித்து கேட்டறிந்தார்.
12.31: சர்வதேச அளவில் #trumpinindia என்ற ஹாஷ்டேக் டிரண்டிங் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. அதேபோல் #GoBackTrump என்ற ஹாஷ்டேகும் டிரண்டாகி வருகிறது.
12. 30: சபர்மதி ஆசிரமம் வந்தடைந்தார் டிரம்ப்
12.20: மொடெரா அரங்க நிகழ்ச்சிக்கு பிறகு ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலை பார்வையிடவுள்ளார் டிரம்ப். அதன்பிறகு அங்கிருந்து அவர்கள் டெல்லிக்கு பயணம் மேற்கொள்வர்.
12.18: டிரம்ப் மற்றும் மோதி மொடேரா அரங்கத்திற்கு வரவுள்ளனர். அவர்களை காண பெருந்திரளாக கூட்டம் திரண்டுள்ளது என இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
12.15: வழிநெடுகிலும் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதனை ரசித்தப்படியே சபர்மதி ஆசிரமம் செல்கிறார் டிரம்ப்.
12.05: டிரம்ப் மோதிவுடன் சபர்மதி ஆசிரமம் நோக்கி செல்கிறார். இரு பக்கமும் மக்கள் இந்திய தேசிய கொடி மற்றும் அமெரிக்க கொடியை கைகளில் ஏந்தி வரவேற்பு தருகின்றனர்.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 2 நாள் சுற்றுப் பயணமாக திங்கள்கிழமை முதல் முறையாக இந்தியா வந்தார். குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகருக்கு அவா் நேரடியாக வருகை தருவதையொட்டி அந்நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
டிரம்பை வரவேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆமதாபாத் விமான நிலையத்தில் உள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய டொனால்ட் டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்கிறார். அமெரிக்க அதிபரை வரவேற்கும் வகையில் இன்று காலை 10.30 மணியளவில் ஆமதாபாத் சர்வதேச விமான நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை வந்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: