டிரம்ப் வருகை: ஆமதாபாத்தில் அமர்க்களமான ஏற்பாடுகள் - அரசின் செலவு எவ்வளவு தெரியுமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மனைவி மெலானியா டிரம்புடன் பிப்ரவரி 24ஆம் தேதி (இன்று) குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகருக்கு வருகை தருகிறார்.

பிரதமர் நரேந்திர மோதி மற்றும் டிரம்ப் ஆகிய இரு தலைவர்களும் விமான நிலையத்திலிருந்து மொடேரா அரங்கம் வரை 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்களை பார்த்து கையசைத்தவாறு செல்ல முடிவு செய்துள்ளனர்.

டிரம்பின் இந்த வருகை பல காரணங்களுக்காக தலைப்புச் செய்தியில் இடம்பிடித்துள்ளது. அதில் ஒன்று, அதற்கான செலவுத் தொகை. இந்த வருகைக்கான ஏற்பாட்டிற்காக 80-85 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த தொகை குஜராத் உள்துறை அமைச்சகத்தின் ஒரு ஆண்டிற்கான பட்ஜெட்டாகும். இதில் பாதி தொகை அதிபரின் பாதுகாப்பிற்காக செலவிடப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகையின்போது 25 ஐபிஎஸ் அதிகாரிகள், 65 காவல் துணை ஆணையர்கள், 200 ஆய்வாளர்கள், 800 துணை ஆய்வாளர்கள் மற்றும் 10,000 போலீஸார் பணியில் இருப்பர்.

மொடேரா பகுதி மாநகராட்சி ஆணையர் விஜய் நேர்ரா, சாலைகள் மற்றும் பிற கட்டுமானங்களுக்காக ஏற்கனவே 30 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக ராயட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார். மேலும் நகரை அழகுபடுத்த 6 கோடி ரூபாய் செலவு செய்யப்படும்.

3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள மலர்களால் நகரம் அலங்கரிக்கப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. புதிதாக கட்டப்பட்டுள்ள மொடேரா அரங்கம் எனப்படும் சர்தார் பட்டேல் அரங்கத்தை தொடங்கி வைக்கவுள்ளார் டிரம்ப்.

குஜராத் கிரிக்கெட் கூட்டமைப்பும் இந்த நிகழ்ச்சிக்காக சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்யவுள்ளது. ஆமதாபாத் நிகழ்ச்சிக்கு பிறகு அவர்கள் டெல்லிக்கு செல்லவுள்ளனர். இதுதான் டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்பின் முதல் இந்திய வருகை.

பிறகு, இருவரும் தாஜ்மஹாலுக்கு செல்வர் என்றும் கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: