You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக ஆளும் கட்சி எம்எல்ஏ ஊழல் குற்றச்சாட்டு
ஆளும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர், புதுச்சேரி அரசிற்கு எதிராகவும், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராகவும் சுமத்தியுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
புதுச்சேரி பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு மற்றும் அவசர வாகனத்தை இயக்க ஓட்டுனர்கள் இல்லை என்பதை கண்டித்து இதற்கு உடனடி தீர்வுக்கான வேண்டுமென்று அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு தலைமையில் பொதுமக்கள் ஆரம்பசுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு கடந்த இருதினங்ளுக்கு முன்பு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் தனவேலு மற்றும் பொதுமக்களிடம், மருத்துவ அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இதற்காக உடனடி நடவடிக்கையை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.
அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு குறித்து முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், "தனவேலு தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைமை இதற்கான நடவடிக்கை எடுக்கும்," என தெரிவித்தார்.
இதற்கிடையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு கூறுகையில், "புதுச்சேரி பாகூர் தொகுதிக்கு முதல்முறையாக காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு மக்களால் தேர்தெடுக்கப்பட்டுள்ளேன். இந்த அரசாங்கம் நடப்பதற்கு மூன்று ஆண்டுகளாக துணையாக இருந்து கொண்டிருக்கிறேன்.
கட்சியின் மூலமாக பல்வேறு அச்சுறுத்தல்கள் இருந்ததன் காரணமாக எனது பிரச்சனைகளை வெளியே சொல்வதற்கு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. முதல்வர் தவறான போக்கை கடைபிடிக்கின்ற காரணத்தினாலும், அமைச்சர்கள் அதிகப்படியான ஊழலில் ஈடுபடுவதின் காரணத்தினாலும் ஒவ்வொரு துறையும் அழித்துக்கொண்டு வருகிறது.
புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகள் ஏதும் இல்லை, பொதுவாக எங்களது பாகூர் பகுதியில் விஷக்கடிக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் எதுவுமே அங்கே இல்லை, மேலும் மிகவும் அச்சுறுத்தும் சக்கரை நோய், இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கும் மருந்துகள் இல்லை" என்றார் தனவேலு.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த ஆட்சி மோசமாக உள்ளது. மருந்து பற்றாக்குறை மற்றும் ஊழல் குற்றச்சாட்டு குறித்து முதல்வரும், அமைச்சர்களும் நேருக்கு நேர் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் என்னுடன் விவாதிக்க தயாராக இருக்கிறார்களா? எனது செயல்பாடுகள் குறித்து கட்சி தலைமையில் கூறுவதாக முதல்வர் சொல்லியிருக்கிறார். அதை நானும் விரும்புகிறேன். இந்த ஆட்சியின் முதல்வர், அமைச்சர்களின் ஊழல் பட்டியலை தயாரித்து வைத்துள்ளேன், இதை நேரில் சென்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையிடம் சமர்ப்பிப்பேன்" என்றார்.
வரும்காலத்தில் 2021ல் முதல்வரே பதவியில் நீடித்தால் காங்கிரஸ் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, "வரும் காலங்களில் அமைச்சர்கள் ஏமாற்றியது நிரூபிப்பேன், கோடிக்கணக்கான ரூபாய்கள் நிலம் பதிவேடுகளில் ஏமாற்றப்பட்டுள்ளது, அதற்கான அனைத்து ஆதாரங்களும் வைத்துளேன். கூடியவிரைவில் அமைச்சர்களின் ஊழலை ஆதாரத்துடன் தோளுரித்து காட்டுவேன். இந்த ஆட்சியை நடத்துபவரே நில மோசடியின் உச்ச கட்டமாக செய்துவருகிறார். ஊழலின் காரணமாக பாப்ஸ்கோ, பாசிக், அமுதசுரபி, சர்க்கரை ஆலையை உள்ளிட்ட பல துறைகள் மூடப்பட்டுவிட்டன. இந்த புதுச்சேரி ஆட்சி அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது" என்றார்.
இதுகுறித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம் கூறுகையில், "தனவேலு சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் அவர் மீது உடனடி நடவடிக்கை ஏதும் எடுக்கமுடியாது. அவர் என்னென்ன விஷயங்கள் பேசினார் என்ற முழு விவரம் சேகரிக்கப்படுகிறது. அதை வைத்து காங்கிரஸ் கட்சி மேலிடத்திற்கு முழு அறிக்கை அனுப்பப்படும். இது தொடர்பாக கட்சி மேலிடம் எடுக்கும் முடிவை செயல்படுத்துவோம்," என தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: