You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மங்களூர் துப்பாக்கிச்சூடு: எடியூரப்பாவுக்கு முன்னதாக நிதியுதவி செய்த மம்தா
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசிக்காக
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அறிவித்து 48 மணி நேரத்திற்குள், அவருடைய கட்சி பொறுப்பாளர்கள், கர்நாடகா மாநிலம் மங்களூரில் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்ட இரண்டு பேரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலையைக் கொடுத்துள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி மற்றும் நதிமுல்லா ஹாக் ஆகிய அமைச்சர்கள் மங்களூரில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த முகமது ஜலீல் மற்றும் நௌஷீன் ஆகியோரின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்தனர்.
"இந்த சந்திப்பு மனிதாபிமானத்தின் அடிப்படையில் நடந்தது. இதில் அரசியல் எதுவும் இல்லை. பாஜக அரசு இவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அறிவித்தது. ஆனால் இழப்பீடு வழங்கவில்லை. இது அவர்களது காயங்களை அதிகரிப்பது போன்றதாகும். மம்தா பானர்ஜி அனைவருக்கும் ஆதரவளிப்பார்" என பிபிசியிடம் திரிவேதி கூறினார்.
"திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நேரில் வந்து எங்களுக்கு ஆறுதல் கூறியதுடன், நாங்கள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டனர்" என பிபிசியிடம் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் கூறினார்கள்.
முகமது ஜலீலின் சகோதரி முகமது யாஹ்யா, "அருகில் இருக்கும் மீன் சந்தையில் தினக்கூலியான என் சகோதரர், சம்பவம் நிகழ்ந்த அன்று, தனது இரு குழந்தைகளையும் வீட்டில் விட்டுவிட்டு அருகில் உள்ள மசூதிக்குத் தொழுகைக்காக சென்றார். சுமார் 5 மணியளவில், 50 முதல் 100 மீட்டர் தொலைவில் என் சகோதரர் சுடப்பட்டார். அவரை ஏன் சுட்டார்கள் என எனக்குத் தெரியவில்லை" என்று கூறுகிறார்.
நௌஷீனின் சகோதரர் நௌஃபல் நௌஷீன் அருகில் இருக்கும் ஒரு வெல்டிங் கடையில் பணிபுரிகிறார். அந்த நேரத்தில் நௌஷீனின் முதலாளி அவரை மசூதிக்கு சென்று தொழுகை செய்து வரும்படி கூறியிருந்தார். மசூதிக்கு செல்லும் வழியில் அவர் கொல்லப்பட்டார் என பிபிசியிடம் அவர் மேலும் கூறினார்.
"ஆம், நாங்கள் பணம் வாங்கினோம். ஆனால், எங்களுக்குப் பணம் முக்கியமில்லை, நியாயம் கிடைக்க வேண்டும் என்று எங்கள் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்தபோது கூறினோம். அவர் எங்களுக்கு இழப்பீடு தருவதாகக் கூறினார்."
"என் சகோதரர் தன் இரண்டு குழந்தைகளுடன் நிதி பிரச்சனையில் தவித்து வந்தார். இந்நிலையில், இந்த சம்பவத்துக்குப் பிறகு, முதல்வர் எங்களுக்கு இழப்பீடு வழங்குவதாகக் கூறினார். ஆனால் அதன்பிறகு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை" யாஹ்யா கூறுகிறார்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களுக்கும் 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்திருந்தார். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகத்தான் அவர்கள் சுடப்பட்டார்கள் என போலீசார் தெரிவித்ததும் அந்த இழப்பீட்டை நிறுத்திவைத்தார். சிஐடி மற்றும் நீதிமன்ற விசாரணையில் இவர்கள் இருவரும் பொதுச் சொ த்திற்கு பாதிப்பு ஏற்படுத்தவில்லை என நிரூபணம் ஆனதும் இந்த இழப்பீடு அவர்களுக்கு வழங்கப்படும் எனக் கர்நாடக முதல்வர் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மங்களூர் போராட்டத்தின்போது போலீசாரால் சுடப்பட்டு உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தவுடன், கர்நாடகாவில் இருக்கும் பாஜக தலைவர்கள் மம்தா அரசியல் விளையாட்டு விளையாடுவதாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிலையில், இதுகுறித்த விளக்கம் அளித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தினேஷ் திரிவேதி, "அவர்கள் என்ன நினைக்கிறார்களோ நினைக்கட்டும். காயமடைந்தவர்களை சந்திப்பதற்காக நாங்கள் மருத்துவமனைக்கு சென்றோம். காவல்துறையினர் கூட்டத்தை கலைப்பதற்காக சுட்டதுபோல் இல்லை. மருத்துவமனையில் இருந்தவர்கள் அனைவருமே மாணவர்கள் மற்றும் சாதாரண வேலை செய்பவர்கள். மாணவர்களின் படிப்பு இதனால் பாதிக்கப்படக்கூடாது. நாங்கள் எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை. அவர்களுக்கு என்ன தேவையோ, அதை நாங்கள் வழங்குவோம். அவர்களுக்கு அவ்வாறு உதவி வழங்கும்போது அவர்கள் என்ன மதத்தை சேர்ந்தவர்கள், என்ன உடை அணிகிறார்கள் என்பதை நாங்கள் பார்ப்பதில்லை" எனக் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: