குடியுரிமை திருத்த சட்டம்: உத்தரப் பிரதேசத்தில் போராடிய 5 பேர் பலி

தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமைச் திருத்த சட்டத்தை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அந்த மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் குமார் அஸ்வதி தெரிவித்துள்ளார் என ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

அவர்கள் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில்தான் உயிரிழந்தனரா என்பது இதுவரை தெளிவாகவில்லை.

நேற்று லக்னோவில் போராட்டத்தின்போது இறந்த ஒருவருடன் சேர்த்து, அந்த மாநிலத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

''நாங்கள் போராட்டக்காரர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தவில்லை. ஒரு துப்பாக்கி தோட்டாவைக் கூட பயன்படுத்தவில்லை,'' என்று அந்த மாநில காவல் துறையின் தலைவர் ஓ.பி.சிங் தெரிவித்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று ஒரு போராட்டக்காரர் இறந்தது பற்றி "எங்கள் தரப்பில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை. எப்படி மரணம் நடந்தது என்று எனக்குத் தெரியாது. போராட்டத்தாலோ, போலீஸ் நடவடிக்கையாலோ அது நடந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை" என்று அவர் கூறியிருந்தார்.

வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று போராட்டம் தீவிரமடைந்தது.

மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலாக்கப்பட்டதுடன், இணையதள சேவைகளும் முடக்கப்பட்டன.

உத்தரப் பிரதேசத்தின் புலந்த்சாகர் நகரில் வாகனங்களுக்கு தீ வைத்த சம்பவமும் நடந்துள்ளது.

பாக்ராச்சில் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் காவல்துறையினர் மீது கல்லெறிந்து தாக்கினர்.

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெறும் போராட்டத்தில் காவல்துறையினரும் போராட்டக்கார்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தும் காணொளி வெளியாகியுள்ளது.

மாநிலத் தலைநகர் லக்னௌ மட்டுமல்லாது பிரதமர் நரேந்திர மோதியின் மக்களவைத் தொகுதியான வாரணாசி, பிரோசாபாத், பிஜ்னோர் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

மாநிலத்தின் பல பகுதிகளில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதால் நீதிமன்ற நடவடிக்கைகளும் சேர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்றம் இது குறித்து உத்தரப் பிரதேச மாநில அரசு மற்றும் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

டெல்லியிலும் போராட்டம்

இன்று மதியம் டெல்லியில் உள்ள ஜாமா மசூதி அருகே பெரும் கூட்டம் கூடியதாகவும், அவர்கள் ஜந்தர் மந்தர் பகுதியை நோக்கி பேரணியாக செல்ல விரும்பியதாகவும் டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் திடீரென சமூக விரோத சக்திகள் ஊடுருவின. தடுப்புகளை மீறி செல்ல பேரணியாகச் செல்ல முயன்றவர்கள் காவல்துறையினர் மீது கற்களையும் வீசினர். அவர்களைத் தடுக்க தண்ணீரை பீச்சி அடித்ததாகவும் டெல்லி காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி கேட் பகுதியில் தனியார் கார் ஒன்று தீ வைக்கப்பட்ட உடன் காவல் துறையினர் உடனடியாக அதை அணைத்தனர். கற்களை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் உயர் அதிகாரிகள் உள்பட சில காவல் துறையினர் காயமடைந்தனர். அங்கு சுமார் 40 பேர் தடுப்புக்காவலில் எடுக்கப்பட்டன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: