தீபாவளி தினத்தன்று சென்னையில் மாசுபாடு அதிகரித்ததா?

பட்டாசு வெடித்ததால் தீபாவளி தினத்தன்று சென்னையில் மாசுபாட்டின் அளவு அபாயகரமான அளவைத் தாண்டி அதிகரிக்கவில்லையென தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ஒட்டி காற்றில் உள்ள மாசின் அளவும் ஒலி அளவும் எவ்வளவு அதிகரிக்கின்றன என்பதை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளவிட்டு வெளியிடுகிறது. தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவும் தீபாவளி தினத்தன்றும் காற்று மாசுபாடு அளவிடப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டும் அக்டோபர் 20ஆம் தேதியன்றும் 27ஆம் தேதியன்றும் சென்னையின் ஐந்து இடங்களில் - பெசன்ட் நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சௌகார்பேட்டை - காற்று மாசின் அளவும் ஒலி மாசின் அளவும் கணக்கிடப்பட்டது.

காற்று மாசுபாட்டைப் பொறுத்தவரை காற்றில் உள்ள மிதக்கும் நுண் துகள் (PM10), மிதக்கும் நுண்துகள் (PM 2.5), கந்தக டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு ஆகியவை கணக்கிடப்பட்டன.

இதில் மிதக்கும் நுண்துகள் (PM10)ஐப் பொறுத்தவரை, அதிகபட்சமாக காற்றில் 100 mg/m3 அளவுக்கு இருக்கலாம். சென்னையின் சௌகார்பேட்டை பகுதியில் மட்டும் இந்த நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி 128 mg/m3 அளவுக்கு இந்தத் துகள் இருந்தது. ஆனால், 2018ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், இது நான்கு இடங்களில் கூடுதலாக இருந்தது.

மிதக்கும் நுண்துகள் (PM2.5)ஐப் பொறுத்தவரை, அதிகபட்சமாக காற்றில் 60 mg/m3 அளவுக்கு இருக்கலாம். சௌகார்பேட்டை பகுதியில் மட்டும் இது 62 mg/m3 என்ற அளவுக்கு இருந்தது. ஆனால், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் ஐந்து இடங்களிலுமே மாசின் அளவு அதிகரித்திருத்திருக்கிறது.

கந்தக டை ஆக்ஸைடு காற்றில் 80 அளவுக்கு இருக்கலாம் என்ற நிலையில், சென்னையின் எந்த இடத்திலும் அந்த அளவைத் தாண்டவில்லை. ஆனால், பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம் தவிர்த்த பிற இடங்களில் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் கந்தக டை ஆக்ஸைடு அதிகரித்திருந்தது.

நைட்ரஜன் டை ஆக்ஸைடும் அபாய அளவைத் தாண்டவில்லை என்றாலும் பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம் தவிர்த்த பகுதிகளில் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் அளவு அதிகரித்திருக்கிறது.

ஒலி மாசுபாட்டைப் பொறுத்தவரை பெசன்ட் நகர், சௌகார்பேட்டை ஆகிய இடங்களைத் தவிர, பிற இடங்களில் சத்தம் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் குறைவாகவே இருந்தது. ஆனால், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவைவிட எல்லா இடங்களிலும் ஒலி மாசு அதிகரித்திருந்தது.

"கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் பல இடங்களில் மாசுபாடு அதிகரித்திருப்பதற்குக் காரணம், குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்க வேண்டும் என்ற உத்தரவுதான். இதனால், குறிப்பிட்ட நேரத்தில் மாசுபாடு தீவிரமடைகிறது. நாள் முழுவதும் வெடிக்க அனுமதித்திருந்தால் இப்படி இருந்திருக்காது" என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.

நிர்வாண ஓவியங்களை நான் வரைவது ஏன்: ஓவியர் ரம்யா சதாசிவம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :