You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா - சீனா மாமல்லபுரம் சந்திப்பு: பேனர் வைக்க அனுமதி கோரி தமிழக அரசு நீதிமன்றத்தில் மனு
இம்மாதம் தமிழகத்திற்கு வரும் இந்தியப் பிரதமரையும் சீன அதிபரையும் வரவேற்று பேனர்களை வைக்க அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் ஃப்ளக்ஸ், பேனர்கள் வைக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. சில நாட்களுக்கு முன்பாக, சென்னையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் செல்லும்போது, சாலையின் நடுவில் கட்டப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் இறந்தார்.
அந்த நிகழ்வுக்குப் பிறகு அரசியல் கட்சிகள் அனைத்தும் பேனர்கள் வைக்கக்கூடாது என தம் தொண்டர்களுக்கு கட்டளையிட்டன. பேனர்கள் வைப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளும் அனுமதி தருவதையும் நிறுத்தின.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் பிராமணப் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பேனர்கள் வைக்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படாதது குறித்துச் சுட்டிக்காட்டியிருக்கும் அந்த பிரமாணப் பத்திரத்தில், வரும் அக்டோபர் 11-12ஆம் தேதிகளில் இந்தியப் பிரதமரும் வெளிநாடு ஒன்றின் தலைவரும் இருதரப்புப் பேச்சுவார்த்தைக்காக சென்னைக்கு வரவிருக்கிறார்கள்; அந்தத் தருணத்தில் வெளியுறவுத் துறை அவர்களை வரவேற்று பேனர்கள் வைப்பது வழக்கமான நடவடிக்கை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் தலைவர்கள் தமிழகத்திற்கு வருகை தருவதால், தமிழக அரசின் சார்பிலும் அவர்களை வரவேற்று குறிப்பிட்ட இடங்களில் பேனர் வைக்க வேண்டும்; இந்த பேனர்கள் அனைத்தும் குறிப்பிட்ட இடங்களில் ஏற்கனவே உள்ள விதிமுறைகளின் அடிப்படையில் பொதுமக்களுக்கு தொந்தரவில்லாத வகையில் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வெளியுறவுத் துறை அமைச்சகத்தைப் பொறுத்தவரை சென்னையில் 14 இடங்களிலும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒன்பது இடங்களிலும் மாமல்லபுரத்தில் இரண்டு இடங்களிலும் பேனர்கள் வைக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசைப் பொறுத்தவரை சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை மொத்தம் 16 இடங்களில் வரவேற்பு பேனர்களை வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த பேனர்கள் அக்டோபர் 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதிவரை ஐந்து நாட்களுக்கு வைக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, வெளியுறவுத் துறை அமைச்சகமும் தமிழ்நாடு அரசின் செய்தி விளம்பரத் துறையும் வரவேற்பு பேனர்களை வைக்க ஏதுவாக நீதிமன்றம் ஆணையிட வேண்டுமென அந்த பிரமாணப் பத்திரத்தில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த எம். சத்யநாராயணா, என். சேஷசாயி அடங்கிய அமர்வு, பேனர் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வழக்குத் தொடர்ந்திருக்கும் டிராஃபிக் ராமசாமி உள்ளிட்டோர் தங்கள் கருத்தை பதிவுசெய்யும்படி கோரியிருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்