You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஷ்மீரில் இனி வரக்கூடிய நாட்களில் வன்முறை வெடிக்கலாம் - களத்திலிருந்து பிபிசி செய்தியாளர்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமலில் இருந்த அரசியல் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை எதிர்த்து மத்திய அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் தாக்கல் செய்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இச்சுழலில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் பதற்றம் அதிகரித்து வருவதாகவும், வரும் நாட்களின் வன்முறை சம்பவங்கள் நிகழலாம் என்றும் காஷ்மீரில் இருக்கும் பிபிசி செய்தியாளர் ஆமிர் பீர்ஸாடா தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமைகளைப் பறிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த உத்தரவு மற்றும் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்குவதற்கான மசோதாவை மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
கடந்த இருதினங்களாகவே, ஜம்மு மற்றும் காஷ்மீரில் அதிகப்படியான இந்திய படையினர் குவிக்கப்பட்டனர். மேலும், உள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டன.
தற்போது, ஜம்மு காஷ்மீரில் இணையத் தொடர்பும், தொலைபேசித் தொடர்புகளும் முற்றிலும் துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் பிபிசி செய்தியாளர் ஆமிர் பீர்ஸாடாவின் காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.
நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இணையம், தொலைப்பேசிகள் அனைத்தும் சரியாக இயங்கி வந்ததாகவும், இன்றைய தினம் (திங்கட்கிழமை) தொலைத்தொடர்புகள் எதுவும் வேலை செய்யவில்லை என்றும் ஆமிர் குறிப்பிட்டிருந்தார்.
"இதன் காரணமாக பலரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர். இந்திய ராணுவ படையினர் அதிகளவில் தெருக்களின் குவிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் முன்னறிவில்லாத தடை உத்தரவு அமலில் இருக்கிறது," என்கிறார் அவர்.
காஷ்மீர் தெருக்களில் இந்திய துணை ராணுவ படையினர் அதிகளவில் நடமாடுவதாகவும், இன்னும் அதிக எண்ணிக்கையில் படைகள் குவிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் வரலாற்றில் முதல்முறையாக தரைவழி தொலைத்தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருப்பதாக கூறும் ஆமிர், தொலைத்தொடர்பு வசதி இல்லாததால் காஷ்மீரின் பிற பகுதிகளில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்றும், அரசு அதிகாரிகளின் செல்போன்களும் வேலை செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
"அரசு அதிகாரிகள் சேட்டிலைட் ஃபோனை பயன்படுத்தி வருகின்றனர். காஷ்மீரின் மைய நீரோட்டத் தலைவர்கள் இன்னும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியவில்லை. காஷ்மீர் வந்த சுற்றுலா பயணிகள் அனைவரையும் மாநிலத்தைவிட்டு வெளியேறும்படி கூறப்பட்டுள்ளனர்." என்கிறார் ஆமிர்.
காஷ்மீரில் பிகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பணியாளர்கள் சிலரிடம் பேசியதாக கூறும் ஆமிர், அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல உரிமையாளர்கள் பணம் தரவில்லை என்று கூறியதாக நம்மிடம் தெரிவித்தார்.
தற்போது காஷ்மீரில் ஏற்பட்டிருக்கும் பதற்றநிலை நாளுக்குநாள் அதிகரிக்கும் என்றும், இனி வரக்கூடிய நாட்களில் வன்முறை சம்பவங்கள் நிகழலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் விமான நிலையத்துக்கு அருகேயிருக்கும் ஒரு கடையிலிருந்து தரைவழி தொலைத்தொடர்பு போன் மூலம் ஆமிர் இந்த தகவல்களை நம்மிடையே தெரிவித்தார்.
Article 370 ரத்து; ஜம்மு & காஷ்மீர் இரண்டாகிறது - நாடாளுமன்றத்தில் இன்று என்ன நடந்தது?
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்