You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஷ்மீர்: "தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?" - திருச்சி சிவா
"தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?" என்று மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி எழுப்பினார்.
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமைகளைப் பறிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த உத்தரவு மற்றும், காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்குவதற்கான மசோதா ஆகியவற்றை திமுக உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் எதிர்த்தனர்.
தேர்ந்தெடுத்த அரசு இல்லை
மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா "இதை நான் எதிர்க்கிறேன். இந்த சட்டத் தீர்மானமும், மசோதாவும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தேவையற்றது. நீங்கள் இந்த மாற்றங்களை உருவாக்க நினைத்தாலும், ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் ஒப்புதலோடுதான் அதைச் செய்யவேண்டும். இப்போது அங்கு மக்களால் தேர்ந்தெடுத்த அரசு இல்லை. குடியரசுத் தலைவர் ஆட்சிதான் இருக்கிறது. எனவே, தொடர்புடைய மாநில மக்களின் கருத்து கேட்கப்படவில்லை.
சம்பத் பிரகாஷ் எதிர் ஜம்மு காஷ்மீர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு, உறுப்புரை 370 தற்காலிகமானது அல்ல. அது நிரந்தரமானது என்று தீர்ப்பளித்துள்ளது" என்று குறிப்பிட்டார்.
"அரசமைப்புச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கிய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். வல்லுநர்களான அவர்கள் ஆழமான விவாதங்களுக்குப் பிறகுதான் காஷ்மீருக்கு சிறப்புரிமை தரும் 370-வது சட்டப் பிரிவுக்கு ஒப்புதல் தந்தனர்".
இப்போது எங்களுக்குள்ள அச்சம், இந்த அதிகாரத்தை கையில்வைத்துக்கொண்டு இத்தோடு நிற்பீர்களா? நாளை எந்த மாநிலத்தையும் யூனியன்பிரதேசமாக ஆக்க முடியும். தமிழ்நாடு, பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் போன்ற ஏதோ ஒரு மாநிலம் யூனியன் பிரதேசம் ஆக்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?" என்று கேள்வி எழுப்பினார் திருச்சி சிவா.
ப. சிதம்பரம்
இதைப் போலவே, முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரமும் இந்த நிலை வேறு எந்த மாநிலத்துக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- LIVE ஜம்மு காஷ்மீரை 2-ஆக பிரிக்க மசோதா, 370ன் சிறப்புரிமைகளை ரத்து செய்த குடியரசுத் தலைவர்
- காஷ்மீரில் பதற்றம், ஜம்முவில் ஊரடங்கு: வீட்டு சிறையில் முன்னாள் முதல்வர்கள் ஒமர், மெஹபூபா
- சட்டப்பிரிவு 370 என்றால் என்ன? எப்படி அமலுக்கு வந்தது?
- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 35ஏ சட்டப்பிரிவு என்ன? 5 கேள்வி - பதில்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்