யோகி ஆதித்யநாத்: “முருங்கைக்காய் தவறாமல் சாப்பிடுங்கள்” - முதல்வரின் அறிவுரை

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ்: 'முருங்கைக்காய் சாப்பிட உத்தர பிரதேச முதல்வர் யோகி அறிவுரை'

உத்தரபிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத் கடந்த சில மாதங்களாக பலரிடம் முருங்கைக்காய் மற்றும் அதன் கீரைகளை சமைத்து உண்ணுமாறு கூறி வருகிறார். இதை தனது அரசு அதிகாரிகளின் கூட்டங்களிலும் அவர் வலியுறுத்தி வருகிறார்.

இதன் பின்னணியில் முருங்கை காய் மற்றும் அதன் கீரை குழந்தைகளுக்கான அதிக ஊட்டச்சத்தை அளிப்பது காரணமாக உள்ளது. உ.பி.யில் ஊட்டச் சத்து குறைவான குழந்தைகள் அதிகம் இருப்பதாக அம்மாநில அரசின் மருத்துவ புள்ளிவிவரங்களில் பதிவாகி வருகின்றன. இதை ஈடுகட்டும் வகையில், முருங்கை மரத்தின் பலன் அதிக உதவியாக இருக்கும் என முதல்வர் யோகிக்கு சொல்லப் பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து, அவர் தாம் செல்லும் அரசு விழாக்களில் முருங்கையின் பலனை தவறாமல் கூறி வருகிறார். அத்துடன், அவ்விழாவில் பொதுமக்களுக்கு முருங்கை மரக்கன்றுகளை இலவசமாக அளித்து வருகிறார். இவர் எம்.பி.யாக இருந்த தொகுதியான கோரக்பூரில் கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கியுள்ளார்.

இதுகுறித்து 'இந்து தமிழ்' நாளேட்டிடம் கோரக்பூரின் மாவட்ட ஆட்சியரும், தமிழருமான கே.விஜயேந்திர பாண்டியன் கூறும்போது, "முதல்வர் கலந்து கொள்ளும் மரம்நடும் விழாக்களில் முருங்கையையும் அளிப்பதுடன் அதன் பலன்களைத் தவறாமல் எடுத்துரைக்கிறார். இதை உயிர் காக்கும் ஒன்றாகக் கூறப்படும் கல்பவிருட்சம் என முதல்வர் கூறி வருகிறார்.

ஆப்பிரிக்காவில் அதிகப் பிரச்சனையாக ஊட்டச்சத்து குறைவு இருந்த போது அந்நாட்டினர் முருங்கைக் கீரைகளால் பலனடைந்ததாகவும் அவர் கூறுவதால் உ.பி.யில் முருங்கை மரம் முக்கியமானதாகி வருகிறது" எனத் தெரிவித்தார்.

இந்த வருடம் ஒரு கோடி மரங் களை கோரக்பூரில் நட முதல்வர் யோகி முடிவு செய்துள்ளார். இதில் முருங்கை மரங்கள் அதிகமாக இருக்கவும் ஆட்சியர் விஜயேந்திரபாண்டியனுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால், அதிக எண்ணிக்கையில் முருங்கை மரக்கன்றுகளை சேர்க்கும் பணியில் அதிகாரிகள் இறங்கி உள்ளனர். மேலும், மூலிகைச் செடிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வரும் முதல்வர் யோகி, அவற்றை நெடுஞ்சாலைகளின் நடுவில் உள்ள 'மீடியன்'களில் நடவும் உத்தரவிட்டுள்ளார்.

வட மாநிலங்களில் 'சஹஜன்' என்றழைக்கப்படும் முருங்கை மரம் ஒரு வேண்டத்தகாத மரமாக கருதப்படுகிறது. ஆங்காங்கே பல இடங்களில் தானாகவே வளரும் இந்த மரத்தின் காயும், கீரையையும் ஆடு, மாடு களுக்கு மட்டும் அதிகம் வழங்கப் பட்டு வருகிறது.

டெல்லி, பிகார், உ.பி.க்கு இடம்பெயரும் தமிழர்கள் அதன் பலனை அறிந்திருப்பதால் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

தினத்தந்தி: 'ஏ.டி.எம். எந்திரத்தில் 'ஸ்கிம்மர்' கருவி பொருத்தி பணம் திருட முயற்சி'

துரைப்பாக்கம் கண்ணகிநகரில் ஏ.டி.எம். எந்திரத்தில் 'ஸ்கிம்மர்' கருவி பொருத்தி பணம் திருட முயன்றதாக பல்கேரியா நாட்டை சேர்ந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகிநகர் பகுதியில் இன்ஸ்பெக்டர் வீரக்குமார் தலைமையில் கண்ணகிநகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அங்குள்ள தனியார் ஏ.டி.எம். மையம் அருகே சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த வெளிநாட்டை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர்கள், பல்கேரியா நாட்டை சேர்ந்த நெக்கோலேய்(வயது 32), போரீஸ்(29), லுயுபேமீர்(30) என்பது தெரிந்தது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னை வந்த இவர்கள், காரப்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளனர். கண்ணகிநகர் பகுதியில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் 'ஸ்கிம்மர்' கருவியை பொருத்தி, வெளிநாட்டு வங்கி வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருட முயற்சி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் கண்ணகிநகர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட போலி ஏ.டி.எம். கார்டுகள், ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள இந்திய பணம் மற்றும் பத்தாயிரம் அமெரிக்க டாலர்கள், 'ஸ்கிம்மர்' கருவி, மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைதான 3 பேரையும் மேல் விசாரணைக்காக சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் கண்ணகிநகர் போலீசார் ஒப்படைத்தனர். மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸ் உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவீந்திரன் தலைமையிலான போலீசார் பல்கேரியா நாட்டை சேர்ந்த 3 பேரிடமும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

- இவ்வாறாக அந்நாளிதழ் விவரிக்கிறது.

தினமணி: 'ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை'

மத்திய அரசின் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட 1,282 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை.

ஆசிரியர்களுக்கு மாதம்தோறும் எந்தவித தாமதமும் இல்லாமல் ஊதியம் கிடைக்க அவர்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணையை நிரந்தரமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்எஸ்ஏ) கடந்த 2000-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது. தொடக்கக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம் 10 ஆண்டுகள் நீடிக்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 2010-ஆம் ஆண்டு இந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு மூலம் ஆண்டுதோறும் ரூ.1,400 கோடி அளவுக்கு நிதி வந்து கொண்டு இருக்கிறது.

இதையடுத்து, 2010-ஆம் ஆண்டுக்கு பிறகு மத்திய இடைநிலைக் கல்வி திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) என்னும் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி 9, 10-ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வித்திட்டம் நடைமுறைக்கு வந்தது. அதில் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி உள்ளே வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு "சமக்ர சிக்ஷா' என்னும் புதிய திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டம் வந்ததற்கு பிறகு தமிழகத்தில் ஏற்கெனவே இருந்து எஸ்எஸ்ஏ, ஆர்எம்எஸ்ஏ ஆகிய இரண்டு திட்டங்களும் ஒன்றாக இணைத்து "சமக்ர சிக்ஷா'வின் கீழ் கொண்டு வரப்பட்டது.

முன்னதாக, எஸ்எஸ்ஏ, ஆர்எம்எஸ்ஏ திட்டங்களில் தற்காலிகப் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதன்படி எஸ்எஸ்ஏவில் 1,282 இடங்களும், ஆர்எம்எஸ்ஏவில் 8,462 இடங்களும் தற்காலிக இடங்களாக அறிவிக்கப்பட்டன. இந்த இடங்களில் நிரந்தர ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர். அவர்களும் கடந்த 2011-2012-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கான மாத சம்பளம் என்பது ஒவ்வொரு மாதமும் மேற்கண்ட திட்ட அதிகாரிகள் மூலம் பட்டியல் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக தொடரும் சிக்கல்: மேற்கண்ட இரண்டு திட்டங்களின் கீழ் செயல்படும் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் போது, அந்தப் பள்ளிகளில் புதியதாக தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் அல்லது அதில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் முறையாக நடைபெறவில்லை. அதனால் சம்பளம் வழங்கும் போது பட்டியல் தயாரிப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் நிரந்தர ஆசிரியர்களுக்கு, தற்காலிகப் பணியிடத்துக்கான தொகையை கணக்கிட்டு சம்பளமாக வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் தலைவர் இளமாறன் கூறியது: இந்தச் சம்பளம் பல்வேறு கணக்குத் தலைப்புகளில் வழங்கப்படுவதால், எப்போது சம்பளம் வரும் என்று தெரியாது. அதேபோல, அந்தப் பணியில் இருப்பார்களா என்ற நம்பிக்கையும் இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். இதனால் அந்தப் பணியில் நீடிக்கிறார்களா இல்லையா என்பதை பார்த்த பின்பே அதிகாரிகள் சம்பளம் பட்டியல் தயாரிக்கின்ற நிலை உள்ளது. அதனால் குறிப்பிட்ட தேதியில் இந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில்லை.

பிரச்னைக்குத் தீர்வு என்ன?: கடந்த ஏப்ரல் மாதம் ஆர்எம்எஸ்ஏ திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட 8,462 ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது எஸ்எஸ்ஏ மூலம் பணியமர்த்தப்பட்ட 1, 282 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூன் மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. அதற்கான தொடர் நீட்டிப்பு உத்தரவும் வழங்கப்படவில்லை.

இதுபோல் "சமக்ர சிக்ஷா' திட்டத்தின் கீழ் பணியாற்றும் சுமார் 50 ஆயிரம் பேர் ஒவ்வொரு மாதம் சம்பளம் பெறவே போராட வேண்டிய நிலை உள்ளது. அதனால் மேற்கண்ட பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி உத்தரவிட வேண்டும்.

இல்லையெனில் மாதம்தோறும் தொடர் பணி நீட்டிப்பு ஆணை வழங்குவதற்கு பதிலாக ஆண்டுக்கு ஒருமுறை என்ற அடிப்படையில் தொடர் பணி நீட்டிப்பு ஆணை வழங்கினால் இந்த பிரச்னை இருக்காது என்றார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'பத்திரிகையாளருக்கு முன் ஜாமீன் மறுப்பு'

சென்னையை சேர்ந்த நடிகை ஒருவர் கொடுத்த புகாரில் பிரகாஷ் எம் சுவாமிக்கு முன் ஜாமீன் மறுத்தது சென்னை உயர்நீதி மன்றம். பத்திரிகையாளர் பிரகாஷ் எம் சுவாமி 2018ம் ஆண்டு தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துக் கொண்டார் என அவர் புகார் அளித்தார். 2018ம் ஆண்டு அளித்த புகாரில் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அவர் பெருநகர மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தை அணுகினார் என்கிறது அந்நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :