பாஜகவுக்கு சவால்விடும் காங்கிரஸ் தலைவர் - யார் இந்த டி.கே. சிவகுமார்?

மும்பை போலீஸ் அதிகாரிகளுடன் விவாதம் செய்து சவால் விடுத்ததால் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரின் முகம் தொலைக்காட்சி மூலம் நாட்டில் பிரபலமாகி உள்ளது.

''ஒரு லட்சம் பேர் என்னை எதிர்த்து முழங்கினாலும் நான் அதற்கெல்லாம் பயப்படமாட்டேன். நான் தனியாக வந்தேன், தனியாகவே செல்வேன்'' என்று டி.கே.சிவகுமார் கூறியது வைரலாக பரவியது.

மிகவும் அதிரடியாக இருக்கிறது அல்லவா? இதுதான் கர்நாடகாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் "டிகே" என்று அறியப்படும் டி.கே.சிவகுமாரின் அறிமுகம்.

டி.கே.சிவகுமார் குறித்த பிம்பத்தை உறுதிபடுத்தும்விதமாக பாஜக தலைவர் மற்றும் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் கூற்று உள்ளது.

கர்நாடக அரசை கலைக்கக் கோரி போராட்டம் நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா "இது போன்ற விஷயங்களை திறம்பட கையாள்வதில் கைதேர்ந்த எதிர்மறை பிரபலமான சிவகுமாரை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்” என கூறியுள்ளார்.

தன்னுடைய கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றிகொள்ள குஜராத் மற்றும் மஹாராஷ்ர சட்டசபை உறுப்பினருக்கு அடைக்கலம் அளித்தாரென அவரைப்பற்றி குறிப்பிட்டுள்ளார் எடியூரப்பா.

அவர் குழம்பி போயுள்ள மத சார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் இருந்தாலும் பாதுகாப்பான இடத்தில் இருப்பதை விட்டுவிட்டு போராட்டத்தில் வந்து கலந்துக் கொள்வார். அங்கே டிகே தனியாகத்தான் இருப்பார்.

இதுதான் அவரை மற்ற தலைவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தி காட்டுவதாகும். அவருடைய ஆற்றல் சிறப்பு வாய்ந்தது. அவர் கருத்து வேறுபாட்டுடன் விவாதங்களில் திறம்பட செயல்படுவார். கட்சியின்மேல் அவருடைய விசுவாசம் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது என காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் கொண்டாஜி மோகன் பிபிசியிடம் கூறியுள்ளார்.

காங்கிரஸ் பிரசார கமிட்டியின் பொதுச்செயலாளர் மிலிந்த் தர்மசென், நான் பள்ளியில் படித்த காலத்தில் இருந்து அவரைப் பார்த்திருக்கிறேன். நாங்கள் இருவரும் சாந்தனூரின் கிராமத்தை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் பிரச்சனையைப்பற்றி சிந்திப்பார்கள். ஆனால் அவர் எதற்கும் கவலைக்கொள்ளமாட்டார். ஒரு விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டால் அதை அவ்வளவு எளிதாக விட்டுவிடமாட்டார்.

அவர் நாட்டின் இரண்டாவது பலம் மிக்க அரசியல்வாதியான அமித் ஷாவிடம் நாடாளுமன்ற தேர்தலில் குஜராத்தில் மோதியதே இந்த கூற்றுக்கு சான்றாகும்.

"அது அமித் ஷா மற்றும் நரேந்திர மோதியுடன் நேரடியான மோதலாகும். இது மிகப்பெரிய ஆபத்து என்று எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் அவருக்கு இன்று இந்த நிலைமை. ஆனால் அதுதான் அவர்" என அவருடைய ஆதரவாளர் ஒருவர் கூறினார்.

அவர் ஏன் இப்படி?

அவர் வாழ்க்கையில் ஒரு பிடிப்புமிக்க நபர். அவருடைய இலக்கு முதல்வர் ஆக வேண்டும் என்பதாகும். நீங்கள் அவருக்கு என்ன செய்தாலும் அவர் அந்த நாற்காலியை அடைய என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வார். அது அவருக்கென எழுதப்பட்டுள்ளது என்று நம்புகிறார் என அவருக்கு நெருக்கமான ஒருவர் கூறினார்.

அவருடைய இந்த குணத்தை அவர் முதன்முதலில் தேர்தலில் நின்றபோது பார்த்ததாக தர்மசென் கூறினார். "தன்னுடைய நிலத்தை அடகு வைத்து அந்த பணத்தை தேர்தலுக்கு செலவு செய்தார். 1985 ல் காங்கிரஸ் வேட்பாளராக சாந்தனூரில் இளைஞர்களை ஒருங்கிணைத்தார். ஆனால் அந்த தேர்தலில் தேவகவுடாவிடம் தோற்றுவிட்டார்" எனக் கூறினார்.

ஐந்து வருடங்கள் கழித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆனால் அந்த தேர்தலில் சுயேட்ச்சையாக நின்று சாதனை படைத்தார். ஒக்கலிக சமூகத்தின் பலம் வாய்ந்த தலைவரான தேவ கவுடாவை வீழ்த்தினார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சிவகுமார் தேவகவுடாவின் மகனான குமாரசாமியை சட்டசபை தேர்தலில் தோற்கடித்தார். 2004ல் தேவகவுடா தோற்றவுடன் அவரின் மகள் தேஜஸ்வினி கவுடாவை புதிய அரசியல்வாதி ஆக்கியது அப்போதைய மிகப் பெரிய அரசியல் பேசுபொருளாக இருந்தது.

ஆனால், எப்போது மத சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் முடிவு செய்ததோ, அப்போதே அவர் தாம் கவுடாவுக்கு எதிரானவர், அவர்கள் குடும்பத்திற்கு எதிரானவர் மற்றும் ஒக்கலிக சமூதாயத்திற்கு எதிரானவர் என தன் மேல் படிந்த பெயரை துடைத்தெறிந்தார். இத்தனைக்கும் அவரும் ஒக்கலிக சமூகத்தைச் சேர்ந்தவரே. தேவைப்படும் நேரத்தில் கவுடா குடும்பம் அவர் பக்கத்தில் நிற்கும். இதுவே அவரின் முதலீடு ஆகும் என அவருடன் வேலை பார்த்த காங்கிரஸ் தலைவர் கூறினார்.

முதலீடு குறித்த அணுகுமுறை

எதிர்காலத்திற்கு முதலீடு செய்யும் எண்ணம் அவரிடம் எப்போதும் இருந்தது. "நிலத்தில் முதலீடு செய்யவில்லையென்றால் நான் ஒரு முட்டாள் என்று அவர் கூறுவார். நிலம்தான் நல்ல பலனைக் கொடுக்கும் என்று கூறுவார். ஒரு தொலைநோக்கு பார்வையில் தெரியாத இடத்தில் நிலம் வாங்குவார். சில வருடங்கள் கழித்து அது மிகப்பெரிதாக வளர்ந்து நிற்கும்" என தர்மசென் கூறினார்.

சிவக்குமாருக்கு ரியல் எஸ்டேட், கிரானைட் மற்றும் கல்வி போன்ற வியாபாரங்கள் செய்வதில் ஈடுபாடு அதிகம். "அவருடைய குடும்பம் கனகபுராவில் சில இடங்களில் நிலம் வைத்திருந்தது. ஆனாலும் 80களில் அவர் என்னிடம் உதவியாளராக வந்தபோது நன்றாக வேலை செய்வார். அவர் கடுமையான உழைப்பாளி. சிலர் அவரை ஒரு ரெளடி போல பார்ப்பார்கள். ஆனால் அவர் அப்படி கிடையாது. அவர் சற்று கடுமையாக பேசுவார் அவருக்கு எதிராக ஒரு வழக்கும் கிடையாது" என எல் என் மூர்த்தி கூறியுள்ளார். அதனால் மும்பை போலீஸிடம் அவர் என்னிடம் ஆயுதம் இல்லை, இதயம் தான் இருக்கிறது என கூறியபோது அவர்கள் அதை நம்பியிருக்கலாம்.

அவர் ஏன் இன்னும் பதவிக்கு வரவில்லை

பிறரையும் அவர் பதவிக்கு வர அனுமதித்திருந்தால் அவர் இந்நேரம் பதவிக்கு வந்திருப்பார். பிறர் முன்னேறுவதை அவரால் ஏற்றுகொள்ள முடியவில்லை. நான் என்னை பற்றி கூறவில்லை. யோகேஷ்வர் அல்லது எஸ்டி சோமசேகர் அவர்களை எடுத்துகொள்ளுங்கள். அவரால் தன்னுடைய அகந்தயை வெல்ல முடியவில்லை என தற்போது பாஜகவுடன் இருக்கும் தேஜஸ்வினி கவுடா கூறியுள்ளார்.

ஆனால் இன்னும் நிறைய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவர் முதல்வர் ஆவார் என நம்புகின்றனர். டிகே அதற்கு தயாராகிக்கொண்டிருக்கிறார். அவர் அரசியலில் நுழையும்போது 12வது படித்திருந்தார்.

வருடங்கள் செல்ல செல்ல அவர் அரசியலில் தன்னுடைய பட்டமேற்படிப்பை முடித்தார். சமஸ்கிருத ஸ்லோகங்களையும் கற்றார். பசவன்னா வாசகங்களை அவர் கற்றார். ஏனென்றால் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்கள் அவரையே பின்பற்றுவார்கள். அவர்களே வட கர்நாடகம் முழுவதும் இருக்கிறார்கள்.

டிகே அவருக்கு ஒரு நேரம் வரும் என நம்புகிறார். அவர் கூறுவததைப்போல அவர் இன்னும் 57 வயது இளைஞரே.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :