You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மக்களவை தேர்தலில் ஹர்திக் படேல் போட்டியிட முடியாது
மெஹ்சனா கலவர வழக்கில் தான் குற்றவாளி என்று வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹர்திக் பட்டேல் வைத்த கோரிக்கையை ஏற்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
இதனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் படி ஹார்திக் படேல் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட முடியாது.
குஜராத்தில் படேல் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தால் பிரபலமான ஹர்திக் பின்னர் படேல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவரது வழக்கறிஞர் சலீம் எம் சயீத், தீர்ப்பு விவரத்தை முழுமையாக பார்த்த பிறகு அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விரைவில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்றும் தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு, ஹர்திக் படேல் சுமார் 5000 ஆதரவாளர்களுடன், விஸ்நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரிஷிகேஷ் படேலின் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு கலவரம் ஏற்பட்டு ரிஷிகேஷ் படேலின் அலுவலக சொத்துகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக 17 பேர் மீது விஸ்நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஹர்திக் படேல், லால்ஜி படேல் மற்றும் ஏ.கே படேல் ஆகிய மூவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவரது சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டாலும், அவர் குற்றவாளி என்ற தீர்ப்பு ரத்து செய்யப்படவில்லை.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, தண்டனை பெற்ற நபர் தேர்தலில் போட்டியிட முடியாது.
குஜராத் உயர் நீதிமன்றத்தின் முடிவினை வரவேற்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஹர்திக் பட்டேல் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வரலாம் போகலாம், ஆனால், பாஜக அரசியல் சாசனத்திற்கு எதிராக பணியாற்றி வருகிறது. 25 வயது மதிக்கத்தக்க காங்கிரஸை பணியாளர் தேர்தலில் போட்டியிட முடியாமல் போவது ஏன்? இங்கு பல பாஜக தலைவர்கள் குற்ற வழக்குகளை சந்தித்து வருகிறார்கள். ஆனால், சட்டம் எல்லாம் எங்களுக்கு மட்டும்தான். எனக்கு அச்சமில்லை. மக்களுக்கு சேவை செய்யும் காங்கிரஸ் ஆட்சியமைக்கும். குஜராத் மட்டுமல்லாது நாடு முழுவதும் எனது கட்சிக்காக பிரசாரம் செய்வேன். நான் பாஜகவுக்கு தலை வணங்கவில்லை என்பதை நான் செய்த குற்றமாக பார்க்கப்படுகிறது. அதிகாரத்துக்கு எதிராக போரிட்டால் இதுதான் நிலைமை என்று தனது ட்விட்டர் பதிவில் ஹர்திக் படேல் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :