You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெய்ட்டி புயல் சென்னையை விடுத்து ஆந்திராவுக்கு சென்றது
கடந்த மாதம் கஜ புயல் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து தமிழகம் இன்னும் மீளாத நிலையில், தற்போது உருவாகியுள்ள பெய்ட்டி புயல் காரணமாக மீனவர்கள் இரண்டு நாட்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து சுமார் 430 கி.மீ தொலைவில் பெய்ட்டி புயல் நிலைகொண்டுள்ளது என்றும், அடுத்த 24 மணிநேரத்தில் அது தீவிர புயலாக மாறும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்கவேண்டும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊடகங்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பெய்ட்டி புயலால் வடதமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.
புயலின் பெயரில் குழப்பம்?
"இந்தப் புயலுக்கு பெயர் தாய்லாந்தில் சூட்டப்பட்டது. இது ஆங்கிலத்தில் 'Phethai' (பெத்தாய்) என்று எழுதப்பட்டாலும். அதன் உச்சரிப்பு 'payti' (பெய்ட்டி) என்றே வழங்கப்பட்டுள்ளது," என பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறினார்.
''ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ளது. வங்கக் கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 430 கி.மீ தொலைவில் இருந்து பெய்ட்டி நகர்ந்து வருகிறது. நாளை பிற்பகல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் - காக்கிநாடா இடையே பெய்ட்டி புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.''
வடதமிழகத்தில் மிதமான மழை
''இதனால் தமிழகத்தின் வடமாவட்டங்களில் மிதமான மழைபெய்யக்கூடும். தரைக் காற்றானது மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்படுவதால், மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு கடலுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்,'' என்று கூறினார்.
சென்னை நகரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்