You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எச்சில் துப்பினால் ஒரு லட்சம் அபராதம்
இன்று முக்கிய தமிழ் நாளேடுகளில் வெளியான செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.
தினமலர்: எச்சில் துப்பினால் ஒரு லட்சம் அபராதம்
பொது இடத்தில் அசுத்தம் செய்வோருக்கு, 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையிலான மசோதா, மேற்கு வங்க சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
"மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல், காங்., ஆட்சி நடக்கிறது. தலைநகர் கொல்கத்தாவில் உள்ள காளி கோவிலுக்கு செல்லும் வகையில், 60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நடை மேம்பாலத்தை, முதல்வர் மம்தா பானர்ஜி, சமீபத்தில் திறந்து வைத்தார்.
இரண்டு நாட்களுக்கு முன், அந்த மேம்பாலத்தில் சென்ற முதல்வர், அங்கு பல இடங்களில் அசுத்தம் செய்யப்பட்டுள்ளதை பார்த்து, கவலை அடைந்தார். இதையடுத்து, மேற்கு வங்கத்தில், பொது இடங்களில் அசுத்தம் செய்வோருக்கு, அதிகபட்சமாக, 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான மசோதா, சட்டசபையில், ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினத்தந்தி - சபரிமலை விவகாரம்: "பெண்கள் மட்டும் வழிபட 2 நாள் ஒதுக்கலாம்" - கேரள அரசு யோசனை
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் மட்டும் வழிபட 2 நாள் ஒதுக்கலாம் கேரள உயர்நீதிமன்றத்தில்அம்மாநில அரசு யோசனை தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி, 4 இளம்பெண்கள் கேரள ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். ரேஷ்மா நிஷாந்த், ஷனிலா சஜீஷ், தான்யா, எம்.சூர்யா என்ற அந்த 4 பேரும் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
அவர்கள் தங்கள் மனுவில், "நாங்கள் தீவிர அய்யப்ப பக்தர்கள். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து நாங்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடித்து வருகிறோம். ஆனால், அரசியல் கட்சியினரின் எதிர்ப்பால், நாங்கள் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை. எனவே, அனைத்து வயது பெண்களும் வழிபட வசதியாக பிரத்யேகமாக 2 அல்லது 3 நாள் ஒதுக்கலாம். அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் அளிக்க வேண்டும்" என்று கூறி இருந்தனர்.
இந்த மனு, தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "அனைத்து வயது பெண்கள் மட்டும் வழிபட 2 நாள் ஒதுக்கலாம்" என்று கேரள அரசு தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்து தமிழ் - ஆலையில் பணியாற்றியதால் புற்றுநோய் - தொழிலாளிகளிடம் மன்னிப்பு கேட்ட சாம்சங்
மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் விளங்கும் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் தனது தொழிலாளிகளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் செமி கண்டக்டர் ஆலையில் பணிபுரிந்த சிலருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக நிறுவனம் மீது வழக்கு தொடரப் பட்டது. ஏறக்குறைய 10 ஆண்டு களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த வழக்கில் இப்போது முடிவு எட்டப்பட்டது. நிர்வாகமும் பகிரங்கமாக தொழிலாளிகளிடம் மன்னிப்பு கோரியது. நிறுவனத்தின் இணை தலைவர் கிம் கி-நாம், தொழிலாளிகளிடமும் அவர்களது குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்டார்.
கொரியாவின் தென் பகுதியில் உள்ள சுவோன் எனுமிடத்தில் உள்ள இந்நிறுவனத்தின் செமி கண்டக்டர் மற்றும் எல்இடி ஆலையில் 240 பேர் தங்களது பணி சார்ந்த உடல் நலக்குறைவு பிரச்சினைகளை எதிர்கொண்டனர். இவர்களில் 80 பேர் உயிரிழந்தனர். புற்று நோய் மட்டுமின்றி 16 வகையான நோய்களைக் கண்டறிந்து இந்த நோய் பாதிப்புக்குள்ளான அனை வருக்கும் தலா 1.33 லட்சம் டாலர் இழப்பீடு தர நிர்வாகம் முன் வந்தது என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - நாட்டிலேயே அதிக விளம்பரம் செய்த பாஜக
பிரபல தனியார் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி தொலைக்காட்சி விளம்பரங்களில் பாஜக நாட்டிலேயே முதல் இடத்தை பெற்றுள்ளதாக தி நியூ எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது மத்தியில் ஆட்சியிலுள்ள பாஜக, எதிர்வரும் ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் கடந்த சில வாரங்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் குறித்த பட்டியலில் நெட்ப்ளிக்ஸ், அமேசான், கோல்கேட் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளி பாஜக 22,099 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மனிஷ் திவாரி, "எதிர்வரும் தேர்தல் காலத்தில் விளம்பரங்களுக்காக மட்டும் பாஜக எவ்வளவு செலவு செய்கிறது என்பதை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :