கஜவை எதிர்கொண்டது எப்படி?: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

இன்று முக்கிய தமிழ் நாளேடுகளில் வெளியான செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: கஜாவை எதிர்கொண்டது எப்படி?: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கஜா புயலால் நிறைய அனுபவங்கள் தங்களுக்குக் கிடைத்ததாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்ததாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, தினமணிக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் "கஜா புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தகவல்களை வழங்கிக் கொண்டே இருந்தது. கஜா சிறப்பே வானிலை ஆய்வு மையம் கணித்தபடி அது பயணித்ததுதான். அதன் ஒவ்வொரு நகர்வையும் இந்திய வானிலை மையம் சரியாகக் கணித்து நமக்கு அளித்தது.அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுத்ததற்குக் காரணமே, புயலின் மெதுவான நகர்வுகள்தான். அது மெதுவாக நகர்ந்து, நகர்ந்து கடலோர மாவட்டங்களுக்குள் வருவதற்கு முன்பே, தாழ்வான பகுதிகளில் உள்ள அனைத்து மக்களையும் வெளியேற்றி விட்டோம். மேலும், புயலால் ஏற்படும் சேதங்களை முன்பே கணித்து விட்டோம்.

எத்தனை மின் கம்பிகள், மின் கம்பங்கள் தேவைப்படும் போன்றவற்றை அந்தந்த துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் ஆய்வு செய்து தயார் நிலையில் வைத்திருந்தனர்.

கடந்த காலங்களில் புயல்கள் தாக்கும் போது, அதன் வேகமும், வீச்சும் வேகமாக இருக்கும். விரைவாக நகர்ந்து போய் விடும். ஆனால், கஜா புயல் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நமக்குப் போதிய கால அவகாசத்தை அளித்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் போதிய கால இடைவெளியுடன் மேற்கொள்ள முடிந்தது.

புயல் கடந்த உடனேயே இயல்பு நிலை திரும்ப வேண்டுமென விழைகிறோம். இதையும் சாத்தியப்படுத்த முடியும். காரணம், கடலோர மாவட்டங்களில் ஏற்கெனவே நிரந்தரமான மீட்பு மற்றும் நிவாரண மையங்கள் 124 ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையங்களிலேயே பொது மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே, கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பொது மக்கள் அதிகளவு தங்க வைக்கப்படுவதில்லை. இந்தக் காரணத்தால் பள்ளி, கல்லூரிகளை உடனடியாக விடுமுறையின்றி இயக்க முடியும். நிரந்தரமாக உள்ள மீட்பு மற்றும் நிவாரண மையங்களில் தங்கியுள்ள மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்" என்று அவர் கூறியதாக இந்நாளிதழ் செய்தி மேலும் விவரிக்கிறது.

தி இந்து (ஆங்கிலம்) - ஆவணக் கொலைகளை தடுக்க நடவடிக்கை

ஆவணக் கொலைகளை தடுக்கவும், சாதி மாறி திருமணம் செய்பவர்களை பாதுகாக்கவும், வன்முறையை தூண்டுபவர்களை ஒடுக்கவும் மாநில அரசு சிறப்புப் பிரிவை உருவாக்க வேண்டும் என்றும் திராவிடர் கழகம் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான வன்முறை குற்றவாளிகள் மீது மட்டுமல்லாமல், இதனை தூண்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக அச்செய்தி விவரிக்கிறது.

தினமலர்: 'தாஜ் மஹாலில் பூஜை'

'உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலில், முஸ்லிம்கள் தொழுகை நடத்தினால், நாங்களும் பூஜை நடத்துவோம்' என, இந்து அமைப்பு அறிவித்துள்ளதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ் மஹால் வளாகத்தில் உள்ள மசூதியில், வெள்ளிக் கிழமையை தவிர மற்ற நாட்களில் தொழுகை நடத்த, இந்திய தொல்லியல் துறை தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் இளைஞர்கள் சிலர், சமீபத்தில், தாஜ் மஹால் வளாகத்தில் உள்ள மசூதியில் தொழுகை நடத்தினர்.

நேற்று முன் தினம், தாஜ் மஹாலின் கிழக்கு மற்றும் மேற்கு நுழைவாயிலில், தொல்லியல் துறை ஒட்டிய அரசு அறிவிப்பில், 'வெள்ளிக் கிழமை பிற்பகலில் மட்டும் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவர்' என, கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, 'தாஜ் மஹால் வளாகத்தில், பூஜை, அபிஷேகம் செய்வதற்கு எங்களுக்கு அனுமதிக்க வேண்டும்' என, பஜ்ரங் தள் அமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து, அந்த அமைப்பின் தலைவர் கோவிந்த் பராசர் கூறுகையில், தாஜ் மஹால் அமைந்துள்ள இடம், பழமையான சிவன் கோவிலுக்கு சொந்தமானது. எனவே, முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதி தந்தால், சிவனுக்கு பூஜை, அபிஷேகம் செய்ய, எங்களுக்கும் அனுமதி தர வேண்டும் என்று கூறியதாக இச்செய்தி விவகிரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: