You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அலோக் வர்மா விவகாரம்: 2 வாரங்களுக்குள் விசாரித்து அறிக்கை தர உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்தியாவின் மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, இது தொடர்பான புலனாய்வை இரண்டு வாரங்களில் முடித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிவிசி எனப்படும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே. பட்நாயக் மேற்பார்வையில் இந்த விசாரணை நடக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது..
மேலும், இடைக்கால சிபிஐ இயக்குநரான நாகேஸ்வர ராவ் அப்பொறுப்பில் தொடர்வார் என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், ஆனால் அவர் கொள்கை ரீதியான முடிவு எதுவும் எடுக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மத்திய அரசுக்கும் இந்த ஒட்டுமொத்த விவகாரம் குறித்து விளக்கம் கோரி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 12-ஆம் தேதி நடக்க உள்ளது.
இந்த விசாரணை குறித்து மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், 'வர்மாவுக்கு பதிலாக அரசு நியமித்த தற்காலிக இயக்குநர் நாகேஸ்வர் ராவ் எந்தவிதமான பெரிய அல்லது கொள்கை ரீதியான முடிவுகளையும் எடுக்கக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அவரது நிர்வாக செயல்பாடுகளை கிட்டத்தட்ட முடக்கியுள்ளது'' என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் உச்சபட்ச புலனாய்வு அமைப்பான சிபிஐ-இன் மூத்த பொறுப்புகளில் இருந்த இரு அதிகாரிகள் இடையே உண்டாகியுள்ள அதிகாரப் போட்டியால், அதன் இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவருமே தற்போது விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.
தன்னை கட்டாய விடுப்பில் செல்ல மத்திய அரசு உத்தரவிட்டதை எதிர்த்தும், தனது அதிகாரங்களை நீக்கியதை எதிர்த்தும் அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அவரது சார்பில், மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் ஆஜரானார்.
சிபிஐ இயக்குநரை நியமிக்க, பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கொண்ட குழுதான் முடிவெடுக்க வேண்டும். அதேபோ, அவரை பதவியில் இருந்து அகற்றுவதற்கும் அந்தக் குழுதான் முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்று நாரிமன் வாதிட்டார்.
மேலும், முன்பு வினீத் நாராயண் வழக்கில், வெளிப்படைத் தன்மை தேவை என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ள நிலையில், அத்தகைய வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலும், சிவிசி சார்பில் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேதாவும் ஆஜரானார்கள்.
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை தேவையில்லை என்றும், நீதிமன்றம் சொல்வதைப் போல இரண்டுவாரங்களில் விசாரணையை முடிக்க முடியாது என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.
மத்திய கேபினட் செயலர், சிவிசிக்கு அனுப்பிய குறிப்பில் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில்தான், அலோக் வர்மாவின் அதிகாரங்களை சிவிசி நீக்கி, அவரை பொறுப்பில் இருந்து விலக்கியது.
அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து, தங்களால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. பட்நாயக் மேற்பார்வைில் விசாரணை நடத்தி, வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 12-ஆம் தேதி நடக்கும்போது சிவிசி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
நாகேஸ்வரராவுக்கு கட்டுப்பாடு
இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வர ராவைப் பொறுத்தவரை, அவர் எந்த முடிவு எடுத்தாலும், அதுபற்றி சீலிடப்பட்ட உறையில் நவம்பர் 12-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், வழக்கமான நிர்வாகப் பணிகள் தவிர கொள்கை முடிவுகள் எதையும் அவர் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரஃபால் ஒப்பந்தம், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கியமான விசாரணைகளை அலோக் வர்மா கவனித்து வந்தார்.
அப்போது சி.பி.ஐ-இன் பொறுப்பு இயக்குநராக, இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவ் தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.
மேலும், சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் அதன் சிறப்பு இயக்குநரான ராகேஷ் அஸ்தானா ஆகியோருக்கு இடையேயான பிரச்சனையால், நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசுக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வரலாற்றிலேயே முதன்முறையாக, சிபிஐ தனது சொந்த அலுவகத்திலேயே திங்கட்கிழமையன்று தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
இதனிடையே, தன் மீது வழக்குத் தொடரவும், அதிகாரங்களை விலக்கி, பணியிலிருந்து தடுத்து வைக்கவும் தன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை காழ்ப்புணர்ச்சியுடன் செய்யப்பட்டது என்றும், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் ராகேஷ் அஸ்தானாவும் உச்சநீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :