You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை-சேலம் எட்டு வழிச்சாலையை ஆறுவழியாக குறைப்பது பாதிப்பை குறைக்காது: விவசாயிகள் கருத்து
எட்டுவழிச் சாலை திட்டத்தை ஆறுவழியாக சுருக்கி நிறைவேற்றுவதுகூட தேவையில்லை, எட்டுவழிச் சாலையால் ஏற்படவிருந்த பாதிப்பை இது குறைக்காது என்கிறார்கள் விவசாயிகள்.
எந்த அளவில் பாதைகள் போடப்பட்டாலும் விவசாய நிலங்கள் பாதிப்படைவது மாறுமா என கேள்வி எழுப்புகின்றனர் சேலம் மாவட்ட விவசாயிகள். நிறைவான உறக்கம் , உடல்நிலை, மனநிலை என அனைத்திலும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கும் அவர்கள், தங்களை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிக்கும் அளவிற்கு தாங்கள் என்ன தீவிரவாதிகளா என கேள்வி எழுப்புகின்றனர்.
சேலம்-சென்னை அதிவிரைவு எட்டுவழிச் சாலைக்கு எழுந்த பரவலான எதிர்ப்புகளை அடுத்து சுற்றுச்சூழல், மற்றும் சமூக ரீதியான பாதிப்பை குறைக்கும் பொருட்டு அதனை 6 வழிச்சாலையாக சுருக்கிக் கொள்ளவும், பாதையை மாற்றவும் திட்டமிட்டு அதற்கான புதிய திட்ட அறிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சமர்பித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 21, செப்டம்பர் 11, 14 ஆம் தேதிகள் விசாரணை நடைபெற்ற நிலையில் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று டி.எஸ்.சிவஞானம், பவானிசுப்பராயன்ஆகியோர் அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற அமர்வு சேலம்-சென்னை விரைவுச் சாலை திட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படாததால் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாகத் தெரிவித்து. அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 20-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
மரங்கள் எங்கே?
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இம்முறையேனும் அரசு அதிகாரிகள் கட்டுப்பட வேண்டும் என்கிறார் சேலத்தைச் சேர்ந்த விவசாயி மோகன். எட்டுவழிச் சாலை அமைப்பதற்கு அப்பகுதியில் விவசாய நிலங்களில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்தக்கூடாது, மரங்களை வெட்டக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியும், அண்மையில் ஆச்சாங்குட்டப்பட்டி வனப்பகுதியில் நுற்றுக்கும் மேற்பட்ட பழமையான மரங்கள் வெட்டப்பட்டதாகவும் இப்பகுதிகளில் ஏராளமான குரங்குகள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இப்பகுதிக்கு காலையில் விவசாயிகள் சென்று பார்த்தபோது அனைத்தும் மரங்களும் அப்புறப்படுத்தபட்டிருந்தன என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
உணவு உற்பத்திபெருக்கம் குறித்த அரசு விளக்கம் என்ன?
"விரைவுச் சாலைகள் ஏழை மக்களுக்காக அல்ல. கார்பரேட் கம்பெனிக்காக போடப்படும் திட்டம். இதனை மிகக் கடுமையாக எதிர்ப்போம்" என்கின்றார் விவசாயி மோகன். மாற்று வழிகள் பல இருக்கும்போது மேலும் தேசிய நெடுஞ்சாலை அமைக்க முயல்வது எந்தவிதத்தில் நியாயம் என்று கேட்கிறார் அவர். மேலும் "விவசாயிகள் தங்கள் நிலங்களை அரசுக்கு தாமாகத் தருகின்றனர்", "இச்சாலையால் வாகன நெருக்கடி குறையும்" என அரசு கூறும் பல கூற்றுகளும் பொய் என்று வலியுறுத்தும் மோகன், 1 மரம் வெட்டினால் 10 மரம் நடுவதாக சொல்லும் அரசு, இத்திட்டத்தால் 8 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்படையும் நிலையில், அதனால் ஏற்படும் உணவு உற்பத்தியை இழப்பை ஈடுகட்ட என்ன செய்யும் என்று இதுவரை கூறாதது ஏன்று அவர் கேட்டார்.
4 ஆம் தேசிய சாலை அவசியமா?
தற்போது 6 வழிச் சாலையாக முன்வைக்கும் இத்திட்டத்தை அரசு நாளடைவில் 8 வழியாக ஆக மாற்றாது என்று சொல்ல முடியுமா? ஏற்கனவே சேலம் மாவட்டத்தின் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் 3 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன.
இந்நிலையில் நான்காவதாக தேசிய நெடுஞ்சாலை அவசியமா என சேலத்தை சேர்ந்த பல விவசாயிகளும் கேள்வி கேட்கின்றனர். சேலம் மாநகரத்தின் மையப்பகுதியில் இருந்து கடந்து செல்லும் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும் 10 நிமிடத்தில் சென்றடையும் வசதி உள்ளது.
சேலம் - கிருஷ்ணகிரி - சென்னை சாலை, சேலம்- கள்ளகுறிச்சி - திவண்ணாமலை சென்னை, சேலம் - கள்ளகுறிச்சி - விழுப்புரம் வழியாக சென்னை என மூன்று தேசிய நெடுஞ்சாலைகள், விமானபோக்குவரத்து, 2 இரயில் போக்குவரத்து உள்ள நிலையில், நான்காவதாக மற்றுமொரு நெடுஞ்சாலை அமைக்க முயல்வது அவசியம் இல்லாதது என்றும் ஏற்கனவே உள்ள சாலைகளை அகலப்படுத்தி போக்குவரத்தினை மேம்படுத்தினால் இன்னும் 150 வருடங்களுக்கு போதுமானதாக அமையும் என்று கூறுகிறார் அக்கரப்பள்ளியை சேர்ந்த கணேசன் என்னும் விவசாயி.
மனித உழைப்பே தொழில்வளர்ச்சிக்கு அவசியம்
சாலை அதிகம் தேவைப் படுவதைவிட மனித உழைப்பே தொழில் வளர்ச்சிக்கு முக்கியம் என்கிறார் விவசாயி மோகன். இதற்கு முன்னுதாரணம் திருப்பூர், சிவகாசி பகுதிகள் என்றும், இப்பகுதிகள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வெகு தூரம் தள்ளி இருந்தாலும் தொழில் துறையில் முன்னிலையில் உள்ளன என்கிறார்.
மக்கள் பயன்பாட்டுக்கான சாலை இதுவல்ல. இச்சாலை அமைக்கப்பட்டால் சாலைக்கு இருபுறமும் பிரிக்கப்படும் விவசாய நிலம் சென்று சேர்வதற்கான வழி குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதிலோ, வழித் தடங்களுக்கான வரைவுப் படமோ இதுவரை கிடைக்கவில்லை.
இவ்வாறு ஒவ்வொரு முறையும் விவசாயத்திற்கு சாலையை சுற்றி செல்ல பயன்படுத்தும் எரிபொருள், மக்களின் மன அழுத்தம் , காடுகள் அழிவதால் அழிக்கப்படும் விலங்குகள் ஆகியவற்றை பற்றி அரசு கருத்தில் கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.
எரிபொருள் குறைக்க இச்சாலை அவசியமா?
நூறு ஆண்டுகளுக்கு மேல் உழுது பக்குவப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களில், பல ஆண்டுகளாக, தலைமுறைகளாக வாழும் மக்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையான நிலத்தில் நேரம், எரிபொருள் குறைக்க என கூறி சாலை அமைக்க முற்படுவதால் பல ஆயிரக் கணக்கான குடும்பங்கள் ஆதரவற்றுப் போகும் என்கிறார் பாரப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீரங்கன் என்னும் விவசாயி.
வயோதிகர்கள், பள்ளி மாணவ மாணவிகள் செல்லவோ, சராசரி வேகத்தில் செல்லும் வாகனங்கள் , பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் தங்களுக்கான இடத்தில் இறங்க ஏற இயலாத வகையில் அமைக்கப்படும் இந்த விரைவுச் சாலையால் யாருக்கு என்ன பயன்?
இதற்குப் பதிலாக ஏற்கனவே போடப்பட்டு, இன்னும் ஒருவழிப் பாதையாகவே இருக்கும் அரூர் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தப்பட்டால் அதுவே இன்னும் 150 ஆண்டுகளுக்குப் போதுமானதாக அமையும் என்றும், நீதிமன்றத் தீர்ப்பு இயற்கையைக் காக்கும்படி அமையும் என நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்