You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வேதத்தில் உலக வெப்பமயமாதலை சமாளிக்கும் உத்திகள்: பிரதமர் மோதி
இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.
தினமணி: 'வேதத்தில் உலக வெப்பமயமாதலை சமாளிக்கும் உத்திகள்'
ஒவ்வொரு மொழிக்கும் என ஒரு மகத்துவம் இருக்கிறது. தமிழ் மொழி உலகின் மிகத் தொன்மையான மொழி என்பதில் பாரதத்தில் அனைவருக்குமே பெருமிதம் இருக்கிறது. அதேபோல வேதகாலம் தொடங்கி, இன்று வரை, சமஸ்கிருத மொழியும் ஞானத்தைப் பரப்ப மிகப்பெரும் பங்களிப்பை நல்கி வந்திருக்கிறது என்பதில் இந்தியர்களான நம் அனைவருக்கும் பெருமிதம் உள்ளது. உலக வெப்பமயமாதல் முன்வைக்கும் சவால்களை சமாளிக்கும் உத்திகள் நமது வேதங்களில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோதி மன் கீ பாத் (மனதின் குரல்) நிகழ்வில் பேசியதாக கூறுகிறது தினமணி நாளிதழ்.
இன்று இந்த கடினமான சூழ்நிலையில் தேசம் கேரளத்துக்குத் துணையாக நிற்கிறது. தங்கள் உடைமைகளை இழந்தவர்கள், வெள்ளமேற்படுத்திய துயரிலிருப்பவர்கள் ஆகியவர்களின் குடும்பங்களின் வேதனையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களின் துக்கத்தை நம்மால் முழுமையாக ஈடு செய்ய முடியாது என்றாலும், துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பங்களுக்கு நான் அளிக்கக்கூடிய நம்பிக்கை என்னவென்றால், 125 கோடி இந்தியர்களும் துக்கம் நிறைந்த இந்தக் கணத்தில் உங்களோடு தோளோடு தோள் நிற்கிறார்கள். இந்த இயற்கைப் பேரிடரில் காயமடைந்தவர்கள் விரைவாக நலம் பெற வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. மாநில மக்களின் பேரார்வமும், அளப்பரிய ஆற்றலும் கேரளத்தை மீண்டெழச் செய்யும் என்று நான் முழுமையாக நம்புகிறேன் என்றும் அவர் பேசியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
இந்து தமிழ்: 'பேரிடரின்போது நீளும் உதவிக்கரங்களை மறுதலிக்க வேண்டியதில்லை!'
மழை, வெள்ளத்தால் பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கும் கேரளத்துக்கு உதவ முன்வரும் வெளிநாடுகளின் நிதியைப் பெறுவது தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாடு விவாதத்துக்குரியது. தற்போதைய கொள்கையின்படி, பேரிடர்களின்போது வெளிநாடுகளின் நிதியுதவியை ஏற்பதில்லை என்றும், தேவையான உதவிகள் உள்நாட்டு முயற்சிகள் மூலம் நிறைவேற்றப்படும் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார். பேரிடரின்போது உதவி பெறுவது சகஜமாகயிருக்கும் நிலையில், நட்பு நாடுகளிடமிருந்து நீளும் உதவிக்கரங்களை மறுதலிப்பது ஆக்கபூர்வமான முடிவல்ல என்கிறது இந்து தமிழ் தலையங்கம்.
"கேரளம் சந்தித்திருப்பது வரலாற்றுத் துயரம். தனியார் அமைப்புகள், பொதுச் சமூகம், அனைத்து மாநிலங்கள் என்று ஒவ்வொரு தரப்பும் தன்னாலான உதவிகளை அம்மாநிலத்துக்கு அளிப்பது முக்கியம். மத்திய அரசு ரூ.600 கோடி இதுவரை அளித்திருக்கிறது. 'இது முதல் கட்ட நிதிதான், மதிப்பீடு செய்த பின்னர் தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதல் நிதி ஒதுக்கப்படும்' என்று உள்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது. மத்திய அரசு தன்னாலான முழு உதவிகளையும் செய்ய வேண்டும்.
உலகெங்கும் இருக்கும் ஜனநாயக அரசுகள் இன்னொரு நாட்டுக்குப் பேரிடர் என்றால் ஓடோடி உதவுவதுதான் வழக்கம். நாமும் அவ்வழக்கத்தைக் கொண்டிருக்கிறோம். இதில் கவுரவம் பிம்ப அரசியலுக்கு வேலையில்லை. நிதி உதவி, நிபுணர்களின் ஆலோசனை, மீட்பு நிவாரணத்துக்குத் தேவைப்படும் கருவிகள் கலன்கள் ஆகியவற்றைக் கேரளம் பெறத் தடையேதும் இருக்கக் கூடாது!" என்று விவரிக்கிறது அந்த தலையங்கம்.
தினத்தந்தி: 'தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்'
வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அதன் காரணமாகவும், வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரி தெரிவித்தார் என்கிறது தினத்தந்தி நாளிதழ்.
"வட மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு தான் அது எந்த திசையில் நகர்கிறது என்று தெரியும்.
இதன் காரணமாகவும், தமிழகத்தின் தென்மேற்கு பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாகவும், தமிழகத்தில் திங்கட்கிழமை (இன்று) ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். சில இடங்களில் லேசான மழை பெய்யும். சென்னையிலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் லேசான தூறல் மழை பெய்யும்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'கெளரி, தபோல்கரும் ஒரே ஆயுதத்தால்தான் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்'
பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்ட ஆயுதத்தால்தான் கெளரியும் கொல்லப்பட்டு இருக்கிறார் என்று சிபிஐ விசாரணையில் தெரியவந்து இருப்பதாக கூறுகிறது தினமணி நாளிதழ் செய்தி. 2013 ஆம் ஆண்டு ஜூம் மாதம் 20 ஆம் தேதி பூனே ஓம்கரேஸ்வர் கோயில் அருகே 67 வயதான தபோல்கர் கொல்லப்பட்டார்; 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள அவரது விட்டின் வெளியே கெளரி லங்கேஷ் கொல்லப்பட்டார் என விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
டைம்ஸ் ஆஃப் இந்தியா -- பதக்கத்தை பறிகொடுத்த தமிழக வீரர்
இந்தோனீஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் நேற்று இந்தியாவுக்கு 5 வெள்ளிப் பதக்கமும், 2 வெண்கல பதக்கமும் கிடைத்தள்ளது என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி.
பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்ட பந்தய பிரிவில் ஹிமா தாஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
காலிறுதிப் போட்டியில் தாய்லாந்து விராங்கனை நிட்சான் ஜிந்தாபாலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து. மற்றொரு காலிறுதிப் போட்டியில் தாய்லாந்து வீராங்கனை ரட்சனாக் இண்டணானை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார் சாய்னா நேவால்.
ஆண்கள் 10,000மீட்டர் பிரிவில் வெண்கலம் வென்றதாக அறிவிக்கப்பட்ட தமிழக வீரர் கோவிந்தன் லக்ஷ்மணன் பின்னர் ஓட்டப் பந்தய தடத்தை தாண்டி ஓடியதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார் என்கிறது அச்செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்