You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேரள வெள்ளம் - வீட்டுக்குள் புகுந்த முதலையால் மக்கள் அதிர்ச்சி
இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.
தினத்தந்தி: 'கேரள வெள்ளம் - வீட்டுக்குள் புகுந்த முதலை'
ஆலப்புழை அருகே, வீட்டுக்குள் முதலை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"கேரள மாநிலத்தில் பெய்த கன மழையால் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக மழையின் வேகம் குறைந்து வருகிறது. இதனால் குடியிருப்புகளை சூழ்ந்திருந்த தண்ணீர் வடிய ஆரம்பித்து விட்டது.
இதையடுத்து நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்களில் சிலர் வீடுகளுக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர். ஆலப்புழை மாவட்டத்தில் இருந்து தங்களது வீடுகளுக்கு திரும்பினர். அப்போது ஒரு குடும்பத்தினர் வீட்டுக்குள் சென்றபோது, முதலை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று வீட்டுக்குள் பதுங்கி இருந்த முதலையை நீண்ட நேரம் போராடி பிடித்தனர். அதன்பிறகே அந்த பகுதியில் உள்ளவர்கள் நிம்மதி அடைந்தனர். இதையடுத்து அந்த முதலை ஆழப்புழை பகுதியில் கடலில் விடப்பட்டது." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
'தினமணி: 'செல்ஃபி மோகத்தால் விபரீதம்'
நாமக்கல் அருகே மோகனூர் காவிரி ஆற்றுப்பாலத்தின் தடுப்புச் சுவர் மீது அமர்ந்து செல்ஃபி எடுக்க முயன்றபோது தவறிவிழுந்த சிறுவன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
"கரூரில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார். செவ்வாய்க்கிழமை காலை பாபு தனது மகனை காரில் மோகனூர்-வாங்கல் காவிரி ஆற்றுப் பாலத்துக்கு அழைத்துச் சென்றார். ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கைக் காண வந்தார். அப்போது பாலத்தின் கிழக்குப்புறத்தில் பாலத் தடுப்புச் சுவரின் (24-ஆவது இணைப்பு தூண்) மீது மகன் தன்வந்தை அமர வைத்து, அவனை இடது கையால் பிடித்தபடி பாபு செல்ஃபி எடுத்ததாகத் தெரிகிறது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சிறுவன் தன்வந்த் நிலை தடுமாறி காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் விழுந்து, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் மோகனூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு சிறுவனைத் தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர்" என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
இந்து தமிழ்: 'மீனவர்களுக்கு பாதுகாப்பாக கடற்படை கப்பல் செல்ல முடியுமா?'
நடுக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு இந்திய கடற்படை கப்பல்கள் பாதுகாப்பாக செல்ல முடியுமா என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ்.
"மீனவர்கள் நல சங்கம் சார்பில் பீட்டர் ராயன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், 'நடுக்கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இதுதொடர்பாக சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள், "அப்போது நீதிபதிகள், ''நடுக்கடலில் நாட்டிகல் மைலை அளவிடும் கருவியை தமிழக மீனவர்களின் படகுகளில் பொருத்தினால் இந்திய எல்லையை மீனவர்கள் எளிதாக தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். அதுவரை நடுக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு இந்திய கடற்படை கப்பல்கள் பாதுகாப்பாக செல்ல முடியுமா'' என கேள்வி எழுப்பினர்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
தி டைம்ஸ் ஆப் இந்தியா:’ஆசிய விளையாட்டு போட்டிகள் : முதலிடத்தில் சீனா, 7-வது இடத்தில் இந்தியா’
கடந்த 18-ஆம் தேதி இந்தோனீசியாவில் தொடங்கிய ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடர்பான செய்தியை 'தி டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழ் வெளியிட்டுள்ளது.
30 தங்கம் உள்ளிட்ட 60 பதக்கங்களை பெற்று சீனா பதக்கப் பட்டியலில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. 12 தங்கப் பதக்கம் உள்ளிட்ட 47 பதக்கங்களை பெற்ற ஜப்பான் இரண்டாம் இடத்திலும், தென் கொரியா மூன்றாவது இடத்திலும் உள்ளன என அந்த செய்தி தெரிவிக்கிறது.
இதுவரை இந்தியா 10 பதக்கங்களை வென்றுள்ளது. அதில் 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கங்கள் உள்ளடங்கும்.
செவ்வாய்க்கிழமை நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் பிரிவில் 16 வயதான சவுரப் செளத்ரி தங்கம் வென்றார். இதன் மூலம் துப்பாக்கி சுடுதல் பிரிவு ஒன்றில் தங்கம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார் என்று மேலும் அந்த செய்தி விவரிக்கிறது.
இதனிடையே, இந்தியா ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
பிற செய்திகள்:
- நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம்: டிரம்ப் மீது முன்னாள் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு
- அடல் பிஹாரி வாஜ்பேயி- 'நான் திருமணமாகாதவன், பிரம்மச்சாரி அல்ல'
- எட்டு வழிச் சாலைக்கான நிலங்களிலிருந்து உரிமையாளர்களை வெளியேற்றத் தடை
- கேரள வெள்ளம்: திட்டமிடாமல் அணைகளைத் திறந்ததே காரணமா?
- கேரள வெள்ளம்: மீட்பு பணியில் வியக்க வைக்கும் 5 கதாநாயகிகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்