You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை தமிழ் போராளிக்குழுக்களின் ஆயுதக் குவியல் ராமேஸ்வரத்தில் கண்டெடுப்பு
இலங்கையில் செயல்பட்டு வந்த தமிழ் போராளிக்குழுக்களில் ஒன்றான டெலோ அமைப்பு பயன்படுத்திய ஆயுத குவியல், ராமேஸ்வரத்தில் கழிவுநீர் தொட்டி தோண்டும் போது கண்டுபிடிக்கப்பட்டது. 10 ஆயிரம் துப்பாக்கி தோட்டாக்கள், ராக்கெட் லாஞ்சர், கண்ணிவெடிகள் என தோண்டத்தோண்ட ஆயதங்கள் கிடைத்ததால் காவல்துறையின் பாதுகாப்புடன் இப்பணி நடந்தது.
இங்கு கண்டு எடுக்கப்பட்ட துப்பாக்கி தோட்டாகளையும் வெடிமருந்துகளையும் அப்பகுதியில் மற்றொரு இடத்தில் குழி தோண்டி பாதுகாப்பாக போலீஸார் வைத்துள்ளனர். மேலும் இப்பகுதிக்கு யாரும் செல்லாமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீஸார் இரவில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், தண்ணீர் ஊற்று, பனைக்குளம், ஆற்றாங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்தியா ஆதரவோடு இலங்கையை சேர்ந்த பல்வேறு தமிழ் போராளிக்குழுக்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டது. கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் தமிழ் குழுக்கள் பல ஆண்டுகளாக ஆயுத பயிற்சி பெற்றனர்.
அந்த பயிற்சியின் போது தொலைவில் இருப்பவர்களை சுடும் பயிற்சி, கண்ணிவெடிகளை பயன்படுத்துவது, ராக்கெட் லாஞ்சர் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவது, கையெறி குண்டுகளை பயன்படுத்துவது, கடலில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட பல பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
கடந்த 1986 ஆம் ஆண்டு இந்தியாவில் பயிற்சி பெற்ற இலங்கை தமிழ் குழுக்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் பயிற்சி பெற்றவர்கள் தங்கள் பயிற்சியின் போது பயன்படுத்திய ஆயுதங்களை இலங்கைக்கு எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனைதொடர்ந்து, பயிற்சி அளிக்கப்பட்ட இடங்களில் ஆயுதங்களை புதைத்து விட்டு சென்று விட்டனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இராமேஸ்வரம் அருகே ஓலைக்குடா பகுதியில் தமிழ் இயக்கங்கள் பயன்படுத்திய அதிநவீன துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் பகுதிகளில் கழிவுநீர் தொட்டிக்காக குழித்தோண்டும் போது பெட்டிகள் இருப்பதை கண்ட உடன் மக்கள் அதனை திறந்து பார்த்துள்ளனர். அதில் துப்பாக்கி குண்டுகள் இருப்பதை பார்த்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர் ஆய்வு செய்த போது ஆயத குவியல் இருப்பது தெரியவந்தது. வெடி குண்டுகளை செயல் இழக்க வைக்கும் தனிப்படையுடன் வந்த காவல்துறையினர் குழியை பாதுகாப்புடன் தோண்ட தொடங்கினர்.
திங்கட்கிழமை இரவு 9 மணி வரையில் 10 ஆயிரம் துப்பாக்கி தோட்டாக்கள், 400 ராக்கெட் லாஞ்சர்கள், 15 பாக்ஸ் கையெறி குண்டுகள், 5 கண்ணிவெடிகள், கடல் தண்ணீர் பட்டவுடன் வெடிக்கும் குண்டுகளுடன் 4 பெட்டிகள் எடுக்கப்பட்டது.
மதுரையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வந்து தோட்டாகளையும் வெடி பொருள்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்