You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஷ்மீர் கல்வீச்சு: இறந்த தமிழ் இளைஞரின் உடலுக்கு பலரும் அஞ்சலி
காஷ்மீரில் கடந்த திங்களன்று நடந்த கல்வீச்சு சம்பவத்தில் இறந்த தமிழ் இளைஞர் திருமணி செல்வனின்(22) உடலுக்கு சென்னை பட்டாபிராம் பகுதியில் இன்று(மே 09,2018) இறுதிச்சடங்குகள் நடந்தன.
திருமணியின் நண்பர்கள், உறவினர்கள், அண்டைவீட்டார் என பலரும் அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சில அரசியல் கட்சியினரும் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
திருமணியின் நினைவுகளை பகிர்ந்துகொண்ட நண்பர்கள் பலரும் அவர் அமைதியான, இளகிய மனம் கொண்டவர் என்று கூறினார்.
பிகாம் பட்டதாரியான திருமணி கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு பிபிஓ நிறுவனத்தில் வேலை செய்துவந்ததாகவும், தனது குடும்பத்துடன் விடுமுறைக்காக காஷ்மீர் சென்றபோது உயிரிழந்தது பலருக்கும் அதிர்ச்சியை தருவதாக அமைந்தது என்றும் கூறினர்.
திருமணியின் நண்பர் நாகராஜ் பேசும்போது அவருக்கு பெரிய நண்பர்கள் வட்டம் கிடையாது என்றும் நண்பர்களுடன் வெளியூர்களுக்கு அதிகம் சென்றது கிடையாது என்றும் கூறினார். ''காஷ்மீரில் கலவரம் நடந்த சமயத்தில், திருமணி காரில் இருந்துள்ளான். பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில், வீசப்பட்ட கற்கள் திருமணி குடும்பத்தினர் பயணித்த கார் மீது விழுந்துள்ளது. சரமாரியாக கற்கள் கண்ணாடியை உடைத்துக்கொண்டு அவர்களை தாக்கியதில், பின்சீட்டில் அமர்ந்த திருமணியின் தலையில் பலத்த அடி ஏற்பட்டது. அவனுக்கு ரத்தக் கசிவு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தபோது, அவனது குடும்பத்தினர் சந்தித்த மனப்போராட்டத்தை விவரிக்கமுடியாது,'' என்று கவலையுடன் கூறினார் நாகராஜ்.
''வேலைக்குச் செல்வது, குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிடுவது என்றே திருமணி இருந்துவந்தான். அவன் நண்பர்களுடன் அதிகமாக சுற்றுலா சென்றதில்லை. அவனுடைய இழப்பு அவனின் குடும்பத்தினரைப் போலவே எங்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது,'' என்று கூறினார் நாகராஜ்.
திருமணியின் இல்லத்திலும், அவரது உடல் மயானத்திற்கு எடுத்துவரும் வழியிலும், பல நண்பர்கள் திரண்டனர். யாரிடமும் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.
''திருமணியின் இறப்பு எங்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. யாரிடமும் அவன் அதிகமாக பேசமாட்டான். பலமுறை அவனை வீட்டில் சந்தித்துள்ளேன். படிக்கும்போதும், வேலைக்கு போனபோதும், குடும்ப உறவுகளுக்கு மட்டுமே அவன் முக்கியத்துவம் அளித்தான்,'' என்று கூறினார் நண்பர் வினோத்.
திருமணியின் அண்டை வீட்டார்களிடம் பேசமுற்பட்டபோது, அவர்கள் கவலையில் இருப்பதாக கூறினார். திருமணியின் இறப்பு, அவரது பகுதியினரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்தினர் இது குறித்துப் பேசும் நிலையில் இல்லை.
பிற செய்திகள்:
- இரானுடனான அணு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக டிரம்ப் அறிவிப்பு
- ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்திய அளவில் 2ம் இடம் பெற்ற 4 வயது மகனின் தாய்
- 18 ஆண்டுகால போலீஸ் பணியில் 41 முறை பணி மாறுதல்கள் - 'அசராத' ரூபா மொட்கில்
- தனது திருமணத்தை துணிச்சலாக நிறுத்திய 12 வயது சிறுமி: போராளியாக மாறியது எப்படி?
- ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்தது எப்படி? அனுதீப்பின் அனுபவங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்