You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆந்திராவில் இறந்த ஐவரின் உடற்கூறாய்வை மீண்டும் நடத்தவேண்டும்: செயற்பாட்டாளர் கோரிக்கை
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மலைவாழ் தொழிலாளர்களின் உடல்கள் ஆந்திர மாநிலம் கடப்பா அருகே உள்ள ஒன்டி மிட்டா என்ற இடத்தில், ஒரு ஏரியில் மிதந்தது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.
அவர்கள் அனைவரும் கல்வராயன் மலையைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்கள் செம்மரம் வெட்டச் சென்றவர்களாக இருக்கலாம் என்ற ஐயம் எழுந்தது.
இந்நிலையில், இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பீப்பிள்ஸ் வாட்ச் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த ஹென்றி டிஃபேன், இறந்தவர்களின் குடும்பத்தினர் ஆந்திராவில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று உடல்களை அடையாளம் காட்டும் முன்னரே உடற்கூறாய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
உடற்கூறாய்வுக்கு முன்னதாகவே இறந்தவர்களின் உறவினர்கள் உடல்களை அடையாளம் காட்டியிருக்கவேண்டும், உடல்கள் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கவேண்டும், அப்போதுதான் அவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தால் அதற்கான தடயங்கள் கிடைக்கும். இப்போது அப்படி கிடைக்க வாய்ப்பில்லை என்றார்.
மேலும் இது குறித்துப் பேசிய அவர், இறந்து கிடந்த ஐந்து பேரில் நால்வருக்கு நீச்சல் தெரியும் என்பதால், அவர்கள் மூழ்கி இறந்திருக்க வாய்ப்பில்லை என்றும், தற்கொலை செய்துகொள்வதற்காக அவர்கள் ஏன் பக்கத்து மாநிலத்துக்குச் செல்லவேண்டும் என்றும், எனவே இந்த மரணத்தில் பலத்த சந்தேகங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இறந்தவர்களின் குடும்பங்களை தமிழ்நாடு காவல் துறை மிரட்டியிருப்பதால் அவர்கள் பேச மறுக்கிறார்கள் என்றும் ஹென்றி குறிப்பிட்டார்.
மறு உடற்கூறாய்வு எங்கு நடத்தப்படவேண்டும் என்று கோருகிறீர்கள் என்று கேட்டபோது, மறு உடற்கூறாய்வு எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம், ஆனால், ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவர்கள் அதனை நடத்தக்கூடாது, இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்த மருத்துவர்கள் அந்த உடற்கூறாய்வை நடத்தவேண்டும் என்றும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார் ஹென்றி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :