You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவை சூறையாடும் நரேந்திர மோதி - ட்விட்டரில் விளாசும் ராகுல் காந்தி #ModiRobsIndia
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி சமூக ஊடகமான ட்விட்டரில் #ModiRobsIndia என்ற ஹாஷ்டேக்கில் பிரதமர் நரேந்திர மோதியை கடுமையாக சாடி கருத்துகளை பதிவு செய்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்குமுன் இந்திய வங்கிகள் வரலாற்றிலேயே நடந்த மிகப் பெரிய மோசடிகளில் ஒன்றாகக் கருதப்படும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் வெளியாகி இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுமார் 11,360 கோடி ரூபாய் வரையிலான பணம் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளில் முறைகேடாகக் கடனாகப் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மோசடியின் மையப்புள்ளியாக இருக்கும் வியாபாரியின் பெயர் நீரவ் மோதி என்று சொல்லப்பட்டது. இந்தியாவின் மிகபெரிய வைர வியாபாரியும், பிரபல நகைக்கடைகளின் உரிமையாளருமான நீரவ் மோதி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,360 கோடி ரூபாய் ஊழல் செய்ததற்காக நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகிறார்.
இச்சூழலில் வங்கி ஊழல்களை மையப்படுத்தி #ModiRobsIndia என்ற ஹாஷ்டேக்கில் பிரதமர் நரேந்திர மோதியை ட்விட்டரில் விளாசி வருகிறார் ராகுல் காந்தி.
அண்மையில் அவர் பதிந்துள்ள ஒரு ட்வீட்டில், முதலில் லலித் பிறகு மால்யா இப்போது நீரவ் தலைமறைவு. 'நானும் சாப்பிட மாட்டேன் பிறரையும் சாப்பிட விடமாட்டேன்' என்று சொல்லும் நாட்டின் பாதுகாவலர் எங்கே? அவரின் மெளனத்திற்கான ரகசியத்தை தெரிந்துகொள்ள மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அவரது மெளனத்திற்கான காரணத்தை அவரது விசுவாசிகள் சொல்லலாமே? என்று நரேந்திர மோதியிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்குமுன், நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) அவர் பதிந்துள்ள ட்வீட் ஒன்றில், "பிரதமர் நரேந்திர மோதி தேர்வில் எப்படி தேர்ச்சி பெறுவது என்பது குறித்து 2 மணி நேரங்களுக்கு குழந்தைகளிடம் உரையாற்றுகிறார் என்றும், ஆனால் 22,000 கோடி ரூபாய் வங்கி ஊழல் பற்றி அவரால் இரண்டு நிமிடம் கூட பேசமுடியவில்லை," என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், ஏன் நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி ஒளிந்து கொண்டிருக்கிறார் என்றும் ராகுல் கேள்வியெழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவரின் இந்த ட்வீட்களை தொண்டர்கள் உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்