நாளிதழ்களில் இன்று: போக்குவரத்து தொழிலாளர்கள் மீது 'எஸ்மா' கோரி பொதுநல மனு

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி:

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நாளைத் தொடங்குகிறது. முதல் கூட்டம் என்பதால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார் என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் எதிரொலியால் மின்சார ரயிலில் கூடுதலாக 1 லட்சத்து 92 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூ.13.5 லட்சம் கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது எனவும் தினந்தந்தி செய்தி கூறுகிறது

தினமலர்:

அரசியல் கட்சி துவங்கப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், 'ரஜினி ரசிகர் மன்றம்' என்ற பெயரில் இணையதளம் மற்றும் 'பொபைல் ஆப்' துவக்கினார். இந்நிலையில், இளையதளத்தின் பெயர் ரசிகர் மன்றம் என இருப்பது நெருடலை ஏற்படுத்துவதாக சிலர் தெரிவித்ததால், இளையதளத்தின் பெயரை 'ரஜினி மக்கள் மன்றம்' என மாற்றம் செய்துள்ளனர் என தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி:

போக்குவரத்து தொழிலாளர்களின் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தம் செய்துவரும் நிலையில், சனிக்கிழமையன்று தமிழகத்தில் 12,0124 பேருந்துகள் இயக்கப்பட்டன என அரசு கூறியுள்ளது என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த அறிவிப்பு வெளியானதும், பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் மீது எஸ்மா சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் தினமணி செய்தி கூறுகிறது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா:

ஒக்கி புயலில் காணாமல் போன மீனவர்களைத் தேடுவதற்கு கடலுக்குள் சென்ற 34 குமரி மீனவர்கள் கொண்ட மீட்பு படையினர் வெறுங்கையுடன் திரும்பியுள்ளனர் என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :