உயிரோடிருந்த குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்த டெல்லி மேக்ஸ் மருத்துவமனை உரிமம் ரத்து

டெல்லி ஷாலிமார்பாகில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையின் உரிமத்தை டெல்லி மாநில அரசு ரத்து செய்து உத்தரவிட்டது.

நவம்பர் 30 ஆம் தேதியன்று, பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்தே பிறந்தது. சில மணி நேரங்களில் மற்றொரு குழந்தையும் இறந்துவிட்டதாக டெல்லி ஷாலிமார்பாகில் உள்ள மேக்ஸ் மருத்துவமனை அறிவித்தது.

இறந்ததாக கருதப்பட்ட பச்சிளம் குழந்தைகளை இறுதிச் சடங்குக்கு கொண்டு சென்றபோது அதில் ஒரு குழந்தை உயிரோடிருப்பது தெரியவந்தது.

சிகிச்சைக்கு அதிக கட்டணம் வாங்கும் தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்த இந்த சம்பவம் மருத்துவமனைகளின் தரம் குறித்த பல கேள்விகளை எழுப்பியது.

உயிரோடிருந்த குழந்தை வேறொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஐந்து நாள் கழித்து இறந்துவிட்டது.

இதுதொடர்பாக மாநில அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியவை விசாரணை நடத்தின. மருத்துவமனையும் விசாரணை நடத்தியது. இந்த நிலையில் இன்று அந்த தனியார் மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று பத்திரிகையாளரை சந்தித்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், "டெல்லியில் தனியார் மருத்துவமனைகள் இயங்குவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேமும் இல்லை. ஆனால் அவை கவனமாகவும், விதிகள் மற்றும் சட்டங்களுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். நாட்டின் தலைநகரமான டெல்லி சிறப்பானதாக எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும்.

குழந்தை இறப்பு தொடர்பாக அண்மையில் ஷாலிமார்பாக் மேக்ஸ் மருத்துவமனையில் நடந்த சம்பவம் சகித்துக்கொள்ள முடியாத ஒன்று. நடத்தப்பட்ட விசாரணையில்அங்கீகரிக்கப்பட்டதைவிட கூடுதல் படுக்கை உள்ளிட்ட பல தவறுகள் நடைபெறுவது தெரியவந்துள்ளது. எனவே டெல்லி ஷாலிமார்பாகில் அமைந்திருக்கும் மேக்ஸ் மருத்துவமனையின் உரிமத்தை டெல்லி மாநில அரசு ரத்து செய்கிறது."

"ஏற்கனவே அங்கு தங்கி சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றவும் அரசு பரிந்துரைத்துள்ளது. வேண்டுமானால் அவர்களுக்கு சிகிச்சையை முழுமையாக செய்யலாம், ஆனால் புதிதாக வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவோ அல்லது உள்நோயாளிகளாக அனுமதிக்கவோ கூடாது" என்றும் டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :