You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முத்துகிருஷ்ணன்: பாதியில் கலைந்த ஐஏஎஸ் கனவு
வரும் 16-ஆம் தேதி வீட்டிற்கு வருவதாகச் சொல்லியிருந்த முத்துகிருஷ்ணன், தற்கொலைசெய்துகொண்டதாகக் கூறப்படும் தகவலை ஏற்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் முத்துகிருஷ்ணனின் குடும்பத்தினர்.
சேலம் அரிசிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் - அலமேலு தம்பதிக்கு நான்கு குழந்தைகள். இரண்டாவதாகப் பிறந்த முத்துகிருஷ்ணன் ஒரே ஆண்குழந்தை.
"எப்போதும் படித்துக்கொண்டேயிருப்பான். யார் வம்புக்கும் போகமாட்டான். சனிக்கிழமையன்று போன் செய்தபோது, வரும் 16-ஆம் தேதியன்று வீட்டிற்கு வருவதாகச் சொன்னான். ஆனால் இப்படியாகிவிட்டதே" என்று ஊடகங்களிடம் கதறினார் அவரது தாயார் அலமேலு.
1989-இல் பிறந்த முத்துகிருஷ்ணனுக்கு, கலைவாணி என்ற மூத்த சகோதரியும் ஜெயந்தி, சுபா என இரு இளைய சகோதரிகளும் உண்டு.
பெற்றோர் இருவருமே கூலித்தொழிலாளர்கள் என்றாலும் முத்துகிருஷ்ணனை மிகவும் சிரமப்பட்டு லிட்டில் ஃப்ளவர் மேல்நிலைப் பள்ளி என்ற தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்க வைத்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான இறையன்புவைப் போல வரவேண்டுமென ஆசைப்பட்ட முத்துகிருஷ்ணன், தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் இறையன்புவின் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பார்ப்பார் என்கிறார் அவரது சகோதரியான ஜெயந்தி.
வரலாறு பாடத்தில் இளங்கலை, முதுகலை படிப்பை முடித்த முத்துகிருஷ்ணன் பிறகு பி.எட் படிப்பையும் முடித்தார். அதன் பிறகு எம். பிஃல் படிப்பிற்காக ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தவர், அதற்குப் பிறகு தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கவே அங்கு இணைந்தார்.
முனைவர் பட்டம் பெற விரும்பிய முத்துகிருஷ்ணன்
எம்ஃபில் படிப்பை முடித்திருக்கும் அவர், தற்போது முனைவர் பட்டப் படிப்பில் சேர்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில்தான் இந்த மரணம் நிகழ்ந்திருக்கிறது.
"பல்கலைக்கழகத்தில் பிரச்சனை இருப்பதாக அண்ணன் ஒருபோதும் எங்களிடம் சொன்னதேயில்லை. எப்போதுமே கலகலப்பாகத்தான் ஃபோனில் பேசுவார்" எனகிறார் ஜெயந்தி.
கடந்த சனிக்கிழமையன்று தன்னிடம் பேசிய முத்துகிருஷ்ணன் வரும் வாரத்தில் சென்னைக்கு வரவிருப்பதாகவும், தான் எழுதவிருக்கும் தேர்வு குறித்து கேட்டதாகவும் கூறும் ஜெயந்தி, அவர் குரலில் சோர்வோ, கவலையோ தென்படவில்லை என்கிறார்.
அதற்கு பிறகு ஞாயிற்றுக் கிழமையன்று குடும்பத்தினரிடம் பேசிய முத்துகிருஷ்ணன், திங்கட்கிழமையன்று யாரிடமும் பேசவில்லை.
ஹோலி கொண்டாடுவதற்காக தன் நண்பரின் வீட்டிற்குச் சென்ற முத்துகிருஷ்ணன், ஓய்வெடுப்பதற்காக ஒரு அறைக்குள் சென்றவர், வெளியே வராததால், மாலை 5 மணியளவில் அறையை உடைத்துப் பார்த்தபோது, அவர் தூக்கிலிட்டு சடலமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கலகலப்பான நபராக அறியப்பட்ட முத்துகிருஷ்ணன்
"அவர் தூக்கிலிட்டிருக்கும் புகைப்படத்தைப் பார்த்தோம். அவரது கால்கள் தரையில் இருக்கின்றன. அதனால், எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. முதல் நாள் வரை சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தவர் எதற்காக தற்கொலை செய்துகொள்ள வேண்டும்?" என்கிறார் ஜெயந்தி.
ஜேஎன்யு வட்டாரங்களில் கிருஷ் என்று அழைக்கப்பட்ட முத்துகிருஷ்ணன், கலகலப்பான நபராகவே அறியப்பட்டிருக்கிறார்.
கதை, கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்த முத்துகிருஷ்ணனின் படைப்புகள் தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களில் வெளியாகியிருக்கின்றன.
"இந்த விவகாரத்தில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. ரோஹித் வெமுலாவின் மரணம் குறித்துப் போராடிவந்த என் அண்ணன் அதே போல மரணமடைந்திருக்கிறார். அவர் தற்கொலை செய்து கொள்ளுமளவுக்குக் கோழையில்லை" என்கிறா் ஜெயந்தி.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் படிந்து வந்த தலித் மாணவரான ரோஹித் வெமுலா, தனது நண்பரது அறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் உயிரிழந்த முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் நிவாரண உதவி அளிக்கப்படுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்