You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மீண்டும் கவனம் பெறும் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால், தமிழக அரசியல் களத்தில் மீண்டும் கவனிக்கப்படும் தொகுதியாகியிருக்கிறது.
வட சென்னையில் அமைந்திருக்கும் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி, சென்னையில் பழமையான பகுதிகளில் ஒன்று. போக்குவரத்து நெரிசல், குறுகலான சாலைகள், காற்று மாசுபாடு, ஒலி மாசுபாடு, குடிநீர் பிரச்சனை என பல தீராத பிரச்சனைகளைக் கொண்ட தொகுதி அது.
2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவின் வெற்றிவேலை எதிர்த்து, தி.மு.கவின் சார்பில் சேகர் பாபு போட்டியிட்டார். சேகர் பாபு 2001 மற்றும் 2006 என இரண்டு முறை அ.தி.மு.கவின் சார்பில் போட்டியிட்டு வென்றவர் என்றபோதும், அதிமுகவின் வெற்றிவேல் அந்தத் தேர்தலில் வெற்றிபெற்றார்.
2014ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கின் காரணமாக ஜெயலலிதா தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அதற்குப் பிறகு மேல் முறையீட்டில் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஜெயலலிதா, தான் போட்டியிடுவதற்கு தேர்வுசெய்த தொகுதி ராதாகிருஷ்ணன் நகர். அவர் போட்டியிடுவதற்கு ஏதுவாக தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் வெற்றிவேல்.
27.06.2015ல் நடந்த இடைத்தேர்தலில் பெரும் எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார் ஜெயலலிதா. இந்தத் தேர்தலில் அவருக்கு 88.43 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதாவது பதிவான 1,81,420 வாக்குகளில் 1,60,432 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி. மகேந்திரன், 9710 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
இதற்கு பிறகு 2016ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் முதலமைச்சர் ஜெயலலிதா இதே தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.கவின் சார்பில் சிம்லா முத்து சோழனும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கல்வியாளர் வசந்தி தேவியும் போட்டியிட்டனர்.
2,54,558 வாக்காளர்களைக் கொண்ட அந்தத் தொகுதியில், 2016 சட்டமன்றத் தேர்தலில் 1,74,076 வாக்குகள் பதிவாகின. இதில் ஜெயலலிதா 97,218 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.கவின் சிம்லா முத்துசோழனுக்கு 57,673 வாக்குகளே கிடைத்தன.
1977க்குப் பிறகு ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் ஒரு இடைத்தேர்தல் உட்பட இதுவரை 11 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக அ.தி.மு.க 7 முறை வெற்றிபெற்றுள்ளது. தி.மு.கவும் காங்கிரசும் தலா இரண்டு முறை வெற்றிபெற்றுள்ளன.
2015ல் இருந்து 2017 வரையிலான மிகக் குறுகிய காலத்தில் மூன்றாவது முறையாக ஏப்ரல் மாதத்தில் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி.
ஆனால், கடந்த காலத்தைப் போல அல்லாமல் இந்த முறை அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனது எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் சார்பில் இந்தத் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார். அ.தி.மு.கவின் சசிகலா அணி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணி, தீபா ஆகிய மூவருக்குமே இந்தத் தொகுதியில் வெற்றிபெறுவது என்பது மிக முக்கியமானதாக இருக்கும்.
சசிகலா அணியின் சார்பில், அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்பட பலரது பெயர்கள் அடிபடுகின்றன. வரும் ஞாயிற்றுக் கிழமையன்று தங்கள் அணியின் சார்பில் போட்டியிடுவது யார் என்பது குறித்து தெளிவாக அறிவிக்கப்படும் என பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மஃபா பாண்டியராஜன் தெரிவித்திருக்கிறார்.
ஓ. பன்னீர்செல்வம் அணியை சேர்ந்தவரும், அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவருமான இ. மதுசூதனன், கடந்த 1991-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜெயலலிதாவின் அமைச்சரவையில் கைத்தறி துறை அமைச்சராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அ.தி.மு.க. மூன்று பிரிவுகளாக இருப்பதால், இந்தத் தேர்தலில் தீவிர கவனம் செலுத்திவருகிறது தி.மு.க. ஏற்கனவே போட்டியிட்ட சிம்லா முத்துசோழன், சேகர் பாபு உள்ளிட்ட பலரது பெயர்கள் தி.மு.கவில் அடிபடுகின்றன.
விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளை உள்ளடக்கிய மக்கள் நலக்கூட்டணியும் இந்தத் தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளர்களைக் களமிறக்கும் என்றே ஏதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், இந்த முறை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் பல முனைப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓ. பன்னீர்செல்வம் அணி, தீபா ஆகியோரின் அரசியல் எதிர்காலத்தில் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலும் சசிகலாவின் தலைமையை வாக்காளர்கள் ஏற்கிறார்களா என்பதை அறிய இந்தத் தேர்தல் முடிவுகள் உதவும் என்பதாலும் இந்த மூன்று தரப்புக்குமே இந்தத் தேர்தல் வாழ்வா - சாவா போராட்டமாகவே இருக்கும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்