You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க இந்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை
இந்தியாவில் விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வது குறித்து கவலை வெளியிட்டுள்ள உச்சநீதிமன்றம், அதற்கு இழப்பீடு கொடுப்பதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, அவர்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு, அந்தத் தற்கொலைகளை எப்படித் தடுப்பது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.
தலைமை நீதிபதி ஜெ.எஸ். கெஹர் மற்றும் நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், சஞ்சய் கிஷண் கவுல் ஆகியோர் கொண் அமர்வு, முக்கியப் பிரச்சனைகளுக்கு பல ஆண்டுகளாகத் தீர்வு காணப்படாத நிலையில், விவசாயிகள் தொடர்ந்து பிரச்சனையைச் சந்தித்து வருகின்றனர் என்று கூடுதல் சொலிசிடர் ஜெனரல் பி.எஸ். நரசிம்மாவிடம் தெரிவித்தது.
ஒரு பொதுநல வழக்கு குறித்த விசாரணையின்போது இதுதொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த தலைமை நீதிபதி, "தற்கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் காரணங்களுக்குத் தீர்வு காண அரசு முயற்சிக்க வேண்டும். இழப்பீடுகள் மீது அல்ல. நீங்கள் தவறான திசையில் செல்வதைப் போலத் தெரிகிறது," என்று குறிப்பிட்டார்.
பெருமளவு சாகுபடி செய்யப்படும்போது, விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். வறட்சி அல்லது வெள்ளத்தின்போது பயிர்கள் கருகுவதால் இழப்பைச் சந்திக்கிறார்கள் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.
அப்போது மத்திய அரசின் சார்பில் பேசிய கூடுதல் சொசிலிடர் ஜெனரல், பயிர் காப்பீடு மற்றும் வட்டியில்லா வேளாண் கடன் ஆகிய நடவடிக்கைகளால் விவசாயிகளுக்கு உதவி வருவதாகத் தெரிவித்தார்.
நீதிபதிகள் கருத்துக்கு வரவேற்பு
இந் நிலையில், விவசாயிகள் தற்கொலை விடயத்தில் உச்சநீதிமன்றத்தின் அறிவுரை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள காவிரி டெல்டா விவசாயிகள் உரிமை பாதுகாப்புக் குழுவின் தலைவர் மன்னார்குடி ரங்கநாதன், உச்சநீதிமன்றம் விவசாயிகளின் வேதனையை முழுமையாகப் புரிந்துகொண்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.
உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியபடி, இதற்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளைக் காண வேண்டும் என்று கோரிய ரங்கநாதன், எல்.ஐ.சி போல, விவசாயிகளுக்கென வேளாண் காப்பீட்டுக் கழகம் (ஏஐசி) ஏற்படுத்த வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.
அதேபோல், மாற்றுப் பயிர் திட்டம் தொடர்பாக வேளாண் பல்கலைக் கழகத்தின் முலம் விவசாயிகளுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் அவர் யோசனை கூறினார்.
காணொளி: வறட்சியின் பிடியில் பொய்த்த தமிழக விவசாயம்
சுரங்கத்தில் விவசாயம் - காணொளி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்