You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெயலலிதா பெயரில் உள்ள அரசு திட்டங்களை பெயர் மாற்ற ஸ்டாலின் கோரிக்கை
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் உள்ள அரசு திட்டங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என கோரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனை நேரில் சந்தித்து கடிதம் அளித்தார்.
அவர் அளித்த கடிதத்தில், ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் .இளவரசி மற்றும் வி.என்.சுதாகரன் ஆகிய நால்வரும் கூட்டுச்சதி செய்தார்கள் என்றும், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வருமானத்திற்கு மீறிய சொத்து சேர்த்தார் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குற்றவாளியின் பெயரில் உள்ள திட்டங்களை பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றார்.
அவர் மேலும், ''குற்றவாளியின் படங்களை சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள், அமைச்சர் அலுவலங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு விழாக்களில் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது என அரசு ஆணை வெளியிட வேண்டும்,'' என்றும் தெரிவித்தார் .
தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனை நேரில் சந்தித்தது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''உச்சநீதிமன்றம் குற்றவாளி என்று உறுதி செய்தவரின்" 69வது பிறந்த நாள் விழாவில் 69 லட்சம் மரம் நடும் திட்டத்தை அறிவித்து, அதை முதலமைச்சர் துவங்கி வைத்து, அந்த விழாவில் தலைமைச் செயலாளராகிய கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளும் பங்கேற்று இருப்பது அரசு நிர்வாகம் பற்றி வாக்களித்த மக்களுக்கு தவறான செய்தியை சொல்லியிருக்கிறது,'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா மருந்தகம் உள்ளிட்ட 26 திட்டங்களின் பெயர்களை பட்டியலிட்ட ஸ்டாலின், ''அரசு நிர்வாகத்தில் ஊழல் ஒழிப்பிற்கு ஊக்கம் அளிக்கும் விதத்திலும், மாநில அரசு நிர்வாகம் மேம்படும் விதத்திலும், பொது ஊழியர்கள் வருங்கால தலைமுறைக்கும், இன்றைய இளைஞர்களுக்கும் முன்னுதாரணாக திகழும் விதத்தில் "குற்றவாளி"யின் புகழ் பரப்பும் செயல்களை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும், '' என்று வலியுறுத்தியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்