You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெரும்பான்மையை நிரூபித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய பெரும்பான்மையை நிரூபித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி அரசு இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன் திமுக உறுப்பினர்கள் 88 பேரும் அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாக்கெடுப்பு நடந்தது.
வாக்கெடுப்பு முடிவுகள்
மொத்த உறுப்பினர்கள் : 234
காலி இடம் : 1
பதிவான வாக்குகள் ; 133
ஆதரவு: 122
எதிர்ப்பு: 11 ( ஓ.பன்னீர்செல்வம் அணியினர்)
திமுக , காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மொத்தம் 97 பேர் வாக்கெடுப்பு நடந்தபோது அவையில் இல்லை.
திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட பின், காங்கிரஸ் உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் ஒரே ஒரு உறுப்பினரும் திமுகவுக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்தனர்.
அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர், குரல் ஓட்டு மூலம் வாக்கெடுப்பு நடத்துவதாக பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார்.
இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்துக்கு ஆதரவாக 122 உறுப்பினர்களும், எதிர்ப்பாக ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த 11 பேரும் வாக்களித்தனர்.
பேரவைத் தலைவர் தனபால் தனது வாக்கைச் செலுத்தவில்லை.
கடந்த 16 ஆம் தேதி தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவரைத்தொடர்ந்து, 30 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள்.
அதனைத்தொடர்ந்து, எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக சட்டமன்றச் செயலர் ஜமாலூதீன் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்