You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சசிகலாவுக்கு தனி அறை இல்லை; சிறை உணவு, பச்சை பார்டருடன் 3 நீல நிறச்சேலைகள்
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலர் சசிகலாவுக்கு சிறப்பு வகுப்பு வழங்க முடியாது என்று நீதிபதி நிராகரித்துவிட்டார். அதுமட்டுமன்றி, சிறை உணவைத்தான் உண்ண வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள சிறை வளாகத்தில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஷ்வத்நாராயணா முன்னிலையில் சசிகலாவும், அவரது உறவினர் இளவரசியும் சரணடைந்தார்கள்.
உடல்நிலை காரணமாக, சரணடைவதில் இருந்து மேலும் இரண்டு வாரங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சசிகலா வைத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.
நீரிழிவு நோய் இருப்பதால், தனியாக மருத்துவரை அமர்த்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. வீட்டிலிருந்து கொண்டு வந்த மருந்துகளைப் பயன்படுத்த நீதிபதி அனுமதித்தார்.
கடந்த முறை அதே சிறையில் இருந்தபோது, முதல் வகுப்புத் தரப்பட்டதால் இந்த முறையும் அதே வகுப்பைத் தர வேண்டும் என்று சசிகலா கோரினார். ஆனால், நீதிபதி மறுத்துவிட்டார். அதுபற்றி, சிறை அதிகாரிகளிடம் பேசிப் பெற்றுக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார்.
உடல்நிலை காரணமாக, இளவரசியும் சசிகலாவும் ஒரே அறையில் தங்க அனுமதிக்க வேண்டும் என அவர்களது வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். நீதிபதி நிராகரித்தார். அதுமட்டுமன்றி, தனி அறை ஒதுக்கப்படாது என்றும் மற்ற கைதிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
3 சேலைகள்
சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் வீட்டில் இருந்து தனிக்காரில் கொண்டு வந்த ஆடைகளை சிறைக்குள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மாறாக, அவர்களுக்கு, சிறைச் சீருடையாக தலா 3 சேலைகள் வழங்கப்பட்டன. நீல நிறத்தில் பச்சை வண்ண பார்டர்களுடன் அந்த சேலைகள் உள்ளன. அதைத்தான் அவர்கள் உடுத்திக் கொள்ள வேண்டும்.
உருக்கமான நிமிடங்கள்
உறவினர்களைச் சந்தித்துப் பேச அனுமதி வேண்டும் என்று சசிகலா கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதி சம்மதித்தார். சிறை வளாகத்தில், சசிகலாவின் கணவர் நடராஜன், அவர்களது உறவினர்கள் டாக்டர் வெங்கடேஷ், விவேக், இளவரசியின் மகள், மருமகள், தம்பிதுரை உள்ளிட்டோர் சந்தித்தனர்.
அந்த நேரத்தில், சசிகலாவும் நடராஜனும் கைகளைப் பற்றிக் கொண்டு கண்ணீர் வீட்டனர். மற்றவர்களும் குலுங்கி அழுதனர். அதன் பிறகு தன்னைத் தேற்றிக் கொண்ட சசிகலா, "எனக்கென்று மரியாதை உள்ளது. நீங்கள் அழாதீர்கள், தைரியமாக இருங்கள்," என்று மற்றவர்களைப் பார்த்து சொன்னார். சுமார் 15 நிமிடங்கள் நடந்த இந்த உருக்கமான சந்திப்புக்குப் பிறகு, இளவரசியுடன் சிறைச்சாலைக்குள் சென்றுவிட்டார்.
வழி தவறிய சுதாகரன்
இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட இன்னொரு நபரான வி.என்.சுதாகரன், நீதிமன்றத்துக்கு தாமதமாக, மாலை 6.40 மணிக்கு வந்து சேர்ந்தார்.
தான் வழிதவறிச் சென்றுவிட்டதால் தாமதமாகிவிட்டது என்று கூறி நீதிபதியிடம் மன்னிப்புக் கேட்டார். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அவருக்கான நடைமுறைகளைப் பூர்த்தி செய்து, சிறைக்குள் அனுப்பினார்.