தமிழக அரசியல் சூழல்: ட்விட்டரில் தலைவர்கள், பிரபலங்கள் கருத்து

அதிமுக பொதுச் செயலாளர் வி .கே. சசிகலாவுக்கு எதிராக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்த குற்றச்சாட்டுக்களுக்கு சசிகலா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாகவும், தமிழக அரசியல் சூழல் தொடர்பாகவும் பல அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் ட்விட்டர் வலைதளத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் வி .கே. சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த குற்றச்சாட்டுக்களுக்கு சசிகலா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அதிமுகவில் நடக்கும் மோதல்கள் குறித்து 'அதிமுகவில் இது தொடருமானால் தமிழகத்தில் நிலையான அரசுக்கு வாய்ப்பில்லை' என்று பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செயல்பட அனுமதிக்கப்படவில்லை என்ற தங்கள் கட்சியின் கருத்தை தான் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளதாக திமுகவின் செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் வெளியிட்ட மற்றொரு ட்விட்டர் செய்தியில், தமிழகத்தில் ஆட்சி இல்லை என்ற நிலை உருவாகியிருப்பதால், பொறுப்பு ஆளுநர் அரசியல் சாசனப்படி ஒரு நிலையான ஆட்சி அமைவதற்கான முடிவை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களில் தனது டிவிட்டர் வலைதளத்தில் பல முக்கிய கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகர் கமல்ஹாசன் , சில வருடங்களுக்கு முன்னர் வந்த பிப்ரவரி 7-ஆம் தேதி மக்கள் கொடுங்கோன்மைக்கு எதிராக நின்று ஒரு கலைஞனுக்கு ஆதரவாக நிற்பார்கள் என்று தனக்கு புரிய வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

நேற்றிரவு வெளியிட்ட மற்றொரு ட்விட்டர் செய்தியில் , அனைவரும் உறங்கச் செல்லுங்கள். நாளை உங்களுக்கு முன்னதாக அவர்கள் எழுந்து விடுவார்கள் என பதிவு செய்துள்ளார்.

சுபவீ என அழைக்கப்படும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவரான சுப.வீரபாண்டியன், தனது ட்விட்டர் வலைதளத்தில் 'சாது மிரண்டது. சுயமரியாதை வென்றது' என கருத்து வெளியிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்