எண்ணெய் கழிவால் ஏற்பட்ட இழப்பீட்டை கணக்கிடுவதில் தாமதம்

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு தனியார் சரக்கு கப்பல்கள் மோதிய சம்பவத்தில் கடலில் கசிந்த எண்ணெய் படலங்களை அகற்றப்படும் வேளையில், இந்த சம்பவத்தில் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை உடனடியாக ஆராயவேண்டும் என்கிறார் பொருளாதார பேராசிரியர் உ .சங்கர் .

எண்ணெய் கசிவால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து மற்றும் பொருளாதார இழப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சென்னை பொருளியல் பள்ளியின் முன்னாள் தலைவர் உ .சங்கர் இழப்பீடு வழங்க ஆதாரங்களை உடனடியாக திரட்ட வேண்டும் என்றார்.

''கடந்த ஒரு வாரத்தில் பெருமளவு எண்ணெய் நீக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு நிகழ்ந்த பாதிப்பு, மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ஆகியவற்றை கணக்கிட போதிய ஆதாரங்களை ரிமோட் சென்சிங் (தொலைதூரத்தில் இருந்து தொழில்நுட்ப வசதிகளுடன் ஆராய்வது) நடத்தப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் சுற்றுசூழல் துறை, நிபுணர்கள் கொண்ட குழு விரைந்து ஆதாரங்களை திரட்டினால் மட்டுமே இழப்பீட்டை முழுமையாக கணக்கிட முடியும்,'' என்றார்.

2001ல் தமிழகத்தில் இயங்கி வந்த தோல்தொழிற்சாலைகள் ஏற்படுத்திய இழப்பீடு கணக்கிடப்பட்டது பற்றி பேசிய சங்கர், ''வேலூரை பொருத்தவரை 1991ல் இருந்து 2000 வரையிலான ஆண்டுகள் இழப்பீடு காலமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அது போல சென்னை சம்பவத்திலும் இந்த ஆண்டு முதல் இந்த சம்பவத்தால் ஏற்பட்டுள்ள தாக்கம் எந்த ஆண்டு வரை இருக்கும் என்று ஆய்வு செய்யப்பட்டு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்,'' என்றார்.

சுற்றுச்சூழல் இழப்பிற்கும்,கடல் வாழ் உயிரினங்களின் இறப்புக்கு இழப்பீடு வழங்கவே முடியாது என்றாலும் கணக்கிடும் முறைகள் மிக முக்கியம் என்றார் சங்கர். ''சம்பவம் ஏற்பட்ட இடம், மீட்பு பணிகளுக்கு முந்தைய நாள் ஆகியவற்றின் தெளிவான புகைப்படங்கள் முக்கிய ஆதாரங்கள். மீனவர்களின் தினசரி கூலி, எதிர்காலத்தில் அவர்களின் வருவாய் என்னவாக இருக்கும் என பலவற்றையும் இணைக்க வேண்டும்,'' என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்