'ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ளலாம்'

ஜல்லிக்கட்டு நடப்பதற்கு ஏதுவாக தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளதை தற்காலிக தீர்வாக கருதி, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தை போராட்டக்காரர்கள் மார்ச் 31-ஆம் தேதி வரை வரை தள்ளி வைக்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆதரவு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர்களை ஜல்லிக்கட்டு நிர்வாகிகள் சந்தித்து, தமிழகத்தில் இது வரை நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் தன்மை குறித்தும், இந்த போராட்டம் இனி எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்று விளக்கமளித்தனர்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர், காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கார்த்திகேய சேனாபதி, ஹிப்ஹாப் தமிழன் என்று அறியப்படும் ஆதி, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ராஜேஷ், அம்பலத்தரசு ஆகிய ஐவர் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டு ஆதரவு அமைப்பினர் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ''இந்திய இறையாண்மைக்குள் தான் எங்களால் வேலை செய்ய முடியும். அதற்கு பங்கம் விளைவிப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது'' என்று தெரிவித்தனர்.

மேலும், யாருக்கும் பயந்து நாங்கள் பின்வாங்கவில்லை என்றும், எங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தை போராட்டக்காரர்கள் மார்ச் 31-ஆம் தேதி வரை வரை தள்ளி வைக்க வேண்டும் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டது : ஹிப் ஹாப் ஆதி

என்னுடைய படங்களை வைத்து முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான கருத்துக்களையும், பிரதமர் மோதிக்கு எதிரான கருத்துக்களும் பரப்பப்பட்டது. இதனை, என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று ஹிப் ஹாப் தமிழா ஆதி கூறியுள்ளார்.

பீட்டாவால் கேள்வி கேட்க முடியாது

அவசர சட்டமானது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும்; ஆனால், மாநில அரசானது ஆறு மாதங்கள் வரை காத்திருக்காமல் சட்டமன்றத்தில் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று பின் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் ஆகையால் இந்த சட்டத்தை யாராலும் தடை செய்யவோ, தடை வாங்கவோ முடியாது என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தின் வெற்றி மாணவர்களுக்கே

''மாநில அரசு கொண்டு வந்த இந்த அவசரச் சட்டம் குறித்து போராட்டக்காரர்களின் மத்தியில் தவறான புரிதல் நிலவுகிறது'' என்று தெரிவித்த ஜல்லிக்கட்டு ஆதரவு அமைப்பினர் மேலும் கூறுகையில், '' ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு பிறப்பித்த அவரசச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்து தமிழக சட்டமன்றத்தில் நாளை முன் வரைவு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டு, இது சட்டமாக உருவெடுக்கும் போது, இது தொடர்பான சந்தேகங்கள் கலைந்து விடும். போராட்டக்காரர்களும், மாணவர்களும் இதனை புரிந்து கொள்வர்'' என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது மற்றும் இந்த போராட்டத்தின் வெற்றி ஆகியவற்றின் பெரும் பகுதி மாணவர்களைத் தான் சேரும் என்று ஜல்லிக்கட்டு ஆதரவு அமைப்பினர் மேலும் தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டு போராட்டம் 100 சதவீதம் வெற்றியடைந்துள்ளது என்றும் ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் போராட்டத்தை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று ஜல்லிக்கட்டு ஆதரவு அமைப்பினர் போராட்டக்காரர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்