You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செருப்பு தைப்பவருக்கு 10 ரூபாய் கூலிக்கு 100 ரூபாய் தந்த ஸ்மிருதி இரானி
நாட்டில் நிலவும் சில்லறை பிரச்சனை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியையும் பாதித்து விட்டது போலும் ! தன் செருப்பை சரி செய்த தொழிலாளிக்கு 10 ரூபாய் கூலிக்காக, சில்லறை இல்லாததால் 100 ரூபாய் வழங்கினாராம்.
நேற்று சனிக்கிழமை கோவை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இஷா ஃபவுண்டேஷனின் தலைமையகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி , பேரூர் சாலையில் செல்லும் போது, சாலை ஓரத்தில் அமைந்திருக்கும் ஒரு செருப்புத் திருத்தும் தொழிலாளியின் ஸ்டாலில் காரை நி்றுத்தி, ஸ்டாலுக்குச் சென்று தனது பிய்ந்து போன ஒரு செருப்பைச் சரி செய்யுமாறு கோரினார்.
அந்த செருப்புத் தொழிலாளி, கணேஷ் , அவரது செருப்பைத் திருத்தித் தந்தவுடன், அதற்கான ஊதியம் என்ன என்று கேட்டவுடவுடன், அவர் 10 ரூபாய் என்று சொல்ல, தன்னிடம் 10 ரூபாய் இல்லாததால், தன்னிடம் இருந்த 100 ரூபாய் தாளை எடுத்து அவரிடம் நீட்டினாராம் இரானி.
ஆனால் அந்தத் தொழிலாளி தன்னிடம் சில்லறை இல்லை என்று சொன்னதும், சில்லறை தேவையில்லை மீதிப் பணத்தை நீங்களே வைத்துக்கொள்ளலாம் என்றாராம் ஸ்மி்ருதி இரானி.
இதற்குப் பதிலாக அந்தத் தொழிலாளி, ஸ்மிருதி இரானியின் மற்றொரு காலில் அணிந்தி்ருந்த செருப்பையும் தி்ருத்தித் தருவதாகச் சொன்னார் என்றும் அதற்கு அமைச்சர் உடன்பட்டு, அத்தொழிலாளியின் ஸ்டாலில் சுமார் 10 நிமிடம் செலவழித்தார் என்றும் செய்திகள் கூறுகின்றன.
இச்சம்பவத்தில் அமைச்சர் ஸ்மிருதி இரானி அந்த செருப்புத் தொழிலாளியுடன் உரையாட பாஜகவின் தமிழ்நாடு துணைத்தலைவர் வானதி ஸ்ரீநிவாசன் மொழிபெயர்த்து உதவினாராம்.
அப்போது நடைபெற்றவை குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணியுடன் உடனிருந்த பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் முன்னணியின் தமிழக துணைத்தலைவர் எஸ்.ஜி.சூர்யா பிபிசி தமிழோசையிடம் குறிப்பிடுகையில், அமைச்சரின் பிய்ந்து போன காலணியை தைத்து முடித்த பிறகு, அமைச்சர் அளித்த 100 ரூபாய்க்கு மீதி அளிக்க, தைத்தவிரிடம் சில்லறை இல்லாத காரணத்தால், அந்த சில்லறையை மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்றார்.
இதனால் காலணி தைப்பவர் மேலும் வலுவாக இரண்டு தையல்கள் போட்டுக்கொடுத்தார் என்றும் எஸ்.ஜி.சூர்யா அப்போது குறிப்பிட்டார்.
இது தொடர்பான புகைப்படங்களையும், செய்திகளையும் எஸ்.ஜி.சூர்யா தனது சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்திருந்தார்.