You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை தமிழர்களின் கண்ணீர் கதை: "ரஷ்ய படையினர் நகங்களை பிடுங்கினர், கொடுமைப்படுத்தினர்"
- எழுதியவர், சோபியா பெட்டிசா
- பதவி, பிபிசி, கார்கீவ், யுக்ரேன்
யுக்ரேனின் லீயம் நகரை மீண்டும் தன்வசமாக்கியுள்ளது அந்நாட்டு ராணுவம். அங்கு ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்திருந்தபோது பதிவான பல வகை கொடுமைகள் குறித்த குற்றச்சாட்டுகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அதில் குறிப்பாக, இலங்கையர்கள் குழுவொன்று மாதக்கணக்கில் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த மக்களின் கதை இங்கே.
நாங்கள் இங்கிருந்து உயிரோடு வெளியேறுவோம் என்றே நினைக்கவில்லை என்கிறார் திலூஜன் பத்தினஜகன். கடந்த மே மாதம் ரஷ்ய ராணுவத்திடம் சிக்கிய ஏழு பேரில் இவரும் ஒருவர்.
ரஷ்யா, யுக்ரேன் இடையே மோதல் தீவிரம் அடைந்தபோது, யுக்ரேனின் வடகிழக்கில் உள்ள குப்யான்ஸ்க் நகரிலிருந்து 120 கி.மீ தூரத்தில் உள்ள கார்கிவ் நகரம் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கருதி அதை நோக்கிய நெடிய நடை பயணத்தை இந்த இலங்கையர்கள் தொடங்க ஆயத்தமாகினர்.
ஆனால், எதிர்கொண்ட முதலாவது சோதனைச்சாவடியிலேயே ரஷ்ய படையினரால் அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். கண்களும் கைகளும் கட்டப்பட்டு ரஷ்ய எல்லைக்கு அருகே உள்ள வொசான்ஸ்க் நகரில் உள்ள தொழிற்சாலைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.
ஒரு கைதியாக, கட்டாயப்படுத்தப்பட்ட தொழிலாளியாக, துன்புறுத்தவும் செய்யப்பட்ட நிலையை அனுபவித்த இவர்களின் நான்கு மாத கொடுங்கனவு அங்குதான் தொடங்கியது.
எச்சரிக்கை: இனி வரும் தகவல்கள் உங்களை சங்கடப்படுத்தலாம்
இந்த குழுவினர் படிப்புக்காகவோ வேலை தேடியோ யுக்ரேனுக்கு வந்தவர்கள். ஆனால், கடைசியில் கைதியாகி மிகச் சொற்ப உணவை உண்டு பிழைத்துள்ளனர். நாளொன்றுக்கு ஒரு முறை இரண்டு நிமிடங்களுக்கு மட்டுமே இவர்கள் கழிவறையை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். ஒரு சில நேரத்தில் தலைக்கு குளிக்க அனுமதிக்கப்படுவர். அதுவும் இரண்டு நிமிடங்களுக்குள்ளாக முடிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்படும்.
ஆண்கள், பெரும்பாலும் 20களில் இருந்தவர்கள் - அனைவரும் ஒரே அறையில் வைக்கப்பட்டிருந்தனர். அந்தக் குழுவில் இருந்த ஒரேயொரு பெண்ணான 50 வயது எடித் உதஜ்குமார் தனியாக வைக்கப்பட்டார்.
"எங்களை ஒரு அறையில் வைத்து பூட்டினர். யாரையும் சந்திக்க விடவில்லை. குளிக்கப் போகும்போது கூட அடிப்பர். மூன்று மாதங்களாக உள்ளேயே சிக்கியிருந்தோம்," என்கிறார் மேரி.
இலங்கையில் நடந்த ஒரு கார் குண்டுவெடிப்பில் இவரது முகம் முழுக்க தழும்புகள் ஆயின. மேரிக்கு இதய பிரச்னையும் உள்ளது. அதற்கு எந்த மருந்தையும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், தனிமையின் விளைவுதான் இந்த பிரச்னையை இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளது.
தனிமையில் நான் மிகவும் பதற்றத்துடன் இருந்தேன். எனக்கு மன நல பிரச்னைகள் உள்ளது என்று கூறி அவர்கள் எனக்கு மாத்திரைகளை கொடுத்தனர். ஆனால் அவற்றை நான் உட்கொள்ளவில்லை," என்கிறார் மேரி.
நகங்களை பிடுங்கினர்
இங்கே மற்றவர்கள் நாள்பட அனுபவித்த கொடுமைகளின் அடையாளம் மிகவும் வெளிப்படையாகவே தெரிந்தது. அதில் ஒரு ஆண் தனது ஷூவை கழற்றிக் காண்பித்தபோது, அவரது கால் நகங்கள் கட்டிங்ப்ளேயர் மூலம் பிடுங்கப்பட்டிருந்தன. இரண்டாவது நபரும் அதே மாதிரியான துன்புறுத்தலை அனுபவித்ததாக கூறப்படுகிறது.
இந்த குழு தேவையற்ற காரணங்களுக்காக தாங்கள் தாக்கப்பட்டதாக தெரிவித்தனர். ஒரு ரஷ்ய வீரர் குடித்து விட்டு தங்களை அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்று அவர்கள் கூறினர்.
"அவர்கள் என் உடல் முழுவதும் துப்பாக்கியால் தாக்குவார்கள்," என்று 35 வயதான தினேஷ் குகேந்திரன் கூறினார். ஒருவர் தன்னை வயிற்றில் குத்திய பிறகு அடுத்த இரண்டு நாட்களுக்கு வலியால் அவதிப்பட்டேன். பிறகு அந்த நபர் என்னிடமே பணம் கேட்டார்," என்கிறார் அவர்.
"நாங்கள் மிகவும் கோபத்தோடும் வருத்தத்தோடும் ஒவ்வொரு நாளும் அழுதோம். அனைத்தையும் கடந்து எங்களை பிடிப்புடன் வைத்திருந்தது பிரார்த்தனையும் குடும்பத்தின் நினைவுகளும்தான்" என்கிறார் 25 வயதான திலுக்ஷன் ராபர்ட்கிளைவ்.
ரஷ்யா மறுப்பு
இதேவேளை, ரஷ்ய படையோ சிவில் மக்களை இலக்கு வைக்கவில்லை அல்லது போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லை என்று கூறி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறது. ஆனால், ரஷ்ய ஆக்கிரமிப்பு படைகளால் இழைக்கப்பட்டதாக கூறப்படும் கொடுமைகள் பற்றிய மற்ற தகவல்களை போலவே இலங்கையர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளும் உள்ளன.
லீயம் அருகே உல்ள காட்டில் உள்ள புதைகுழியில் இருந்து உடல்களை யுக்ரேன் தற்போது தோண்டி எடுத்து வருகிறது. அவற்றில் சில சித்ரவதையின் அடையாளங்களை கொண்டுள்ளன.
இந்த நிலையில், யுக்ரேனிய அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி, "கார்கிவ் பகுதியின் பல்வேறு ஊர்கள் மற்றும் நகரங்களில் 10க்கும் மேற்பட்ட சித்திரவதை அறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.
இத்தகைய சூழலில்தான் ஏழு இலங்கையர்கள் சுதந்திரம் அடைந்தது போல உணர்ந்துள்ளனர். வோவ்சான்ஸ் உள்ளிட்ட கிழக்கு யுக்ரேனின் பகுதிகளை அந்நாட்டு ராணுவம் இந்த மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் மீட்டு வருகிறது.
இதையடுத்து மீண்டும் இந்த இலங்கையர்கள் கார்கிவ் நோக்கி நடக்கத் தொடங்கியுள்ளனர். தனிமை, செல்பேசி இல்லாத நிலை போன்றவற்றால் தங்களுடைய குடும்பத்தை தொடர்பு கொள்ளவும் இவர்களுக்கு வழி ஏதுமிருக்கவில்லை.
ஆனால், கைகொடுத்த அதிர்ஷ்டம் போல, வழியில் பார்த்த யாரோ ஒருவர் இவர்களை அடையாளம் கண்டு, காவல்துறைக்கு தகவல் தந்தார். அதன் பிறகு ஒரு அதிகாரி தமது செல்பேசியை இவர்களுக்கு வழங்கினார்.
குழுவில் இடம்பெற்றவர்களில் ஒருவரான 40 வயதாகும் ஐங்கரன் கணேசமூர்த்தி தன் மகளையும் மனைவியையும் செல்பேசி திரையில் பார்த்தபோது கண்னீர் வடித்தார். அவரைத் தொடர்ந்து அடுத்தவர், அடுத்தவர் என ஒவ்வொருவரும் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசியபோது அந்த இடமே கண்ணீரால் பெருக்கெடுத்தது.
கடைசியாக செல்பேசி வழங்கிய அந்த காவல் அதிகாரியை இந்த குழுவினர் கட்டிப்பிடித்து தங்களுடைய உணர்ச்சி மயமான நன்றியை வெளிப்படுத்தினர்.
இப்போது இந்தக் குழு கார்கிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது. நீச்சல் குளம், உடற்பயிற்சியகம் அடங்கிய மறுவாழ்வு மையத்தில் படுத்துறங்கும் இவர்களுக்கு புதிய ஆடைகள் கிடைத்துள்ளன.
"இப்போது நான் மிக, மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று புன்னகைக்கிறார் திலூக்ஷன்.
இந்தப் போரால் யுக்ரேன் முடங்கிப் போயிருக்கலாம். ஆனால், இவர்களைப் போன்ற பார்வையாளர்கள், ரஷ்யாவால் தாங்கள் அடைந்த இன்னல்களை பகிரும் அதே வேளையில், இந்த நாட்டுடன் குறிப்பிடத்தக்க ஒருவித பிணைப்பை உருவாக்கிக் கொண்டுள்ளனர்.
இலங்கை அரசு பதில் என்ன?
யுக்ரேனில் இலங்கையர்கள் அனுபவித்த கொடுமைகள் தொடர்பாக இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவிடம் பிபிசி சிங்கள சேவை கேட்டது. அதற்கு அவர், "இந்த ஏழு இலங்கையர்களும் சட்டவிரோதமான முறையில் ஐரோப்பாவிற்கு குடியேற முயற்சித்தவர்கள்," என்று கூறினார். இலங்கையின் வடகிழக்கு பிராந்தியங்களில் வசிப்பவர்களான இந்தக் குழுவினர், கடந்த மார்ச் மாதம் ரஷ்ய படையினரால் பிடிக்கப்பட்டதாக அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார். எவ்வாறாயினும், இலங்கையர்கள் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அவர்கள் தற்போது யுக்ரேனிய புனர்வாழ்வு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரத்தில் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கும், டெல்லியில் உள்ள யுக்ரைனிய தூதரகத்திற்கும் பிபிசி சிங்கள சேவை மின்னஞ்சல் மூலம் கேள்விகளை அனுப்பி, அவற்றின் பதிலுக்காக காத்திருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்