You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான் பெண்கள் ஹிஜாப் போராட்டம்: மாசா அமினி மரணத்தால் முடியை வெட்டி எதிர்ப்பு தெரிவிப்பு
ஹிஜாப் அணிதல் உள்ளிட்ட ஆடைக் கட்டுப்பாடுகளை பின்பற்றாததால் இரான் கலாசார காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஓர் 22 வயது இளம் பெண்ணின் மரணம் அந்நாட்டில் கடுமையான போராட்டங்களைத் தூண்டியுள்ளது.
மாசா அமினி என்ற 22 வயது இரானிய பெண், இஸ்லாமிய அடிப்படைவாத காவல் குழுவால் கைது செய்யப்பட்டார். இரானில் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக இயங்கி வரும் காவல் அமைப்பு அது. அதாவது அடிப்படைவாத அமலாக்கக் காவல்துறை என்று புரிந்து கொள்ளலாம்.
இஸ்லாமிய மத நெறிமுறகளை மீறினால் இந்த காவல்துறை நடவடிக்கை எடுக்கும். அப்படித்தான், கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாசா அமினியும் கைது செய்யப்பட்டார்.
ஹிஜாப் குறித்து அவர் அளித்த விளக்கங்களுக்காகவும் கருத்துகளுக்காகவும் அவர் கைது செய்யபட்டதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாசா இறந்தார். அவருக்கு திடீரென இதய கோளாறு ஏற்பட்டு இறந்ததாகக் டெஹ்ரான் காவல்துறை தெரிவித்தது.
ஆனால், மாசாவின் பெற்றோர் இதை மறுக்கின்றனர். தங்கள் மகள் ஆரோக்கியமாக இருந்ததாகவும் இதுவரை அப்படி எந்த கோளாறும் அவருக்கு ஏற்பட்டதில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பேசிய மாசாவின் தந்தை "என் மகளின் உடநிலை குறித்து காவல்துறை சொல்லும் கருத்துகளை நான் தனிப்பட்ட முறையில் மறுக்கிறேன்" என்று சீர்திருத்தங்களுக்கு ஆதரவான எம்தெதாத் எனும் ஊடகத்திடம் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
அதேபோல, மாசா கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றப்படும்போதே அவரை காவல்துறையினர் அடித்ததாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறியுள்ளார்.
கூந்தல் முழுமையாக மறையும்படி ஹிஜாப் அணியாததாக் கூறி கைது செய்யப்பட்ட அவர், வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் இறக்கும் முன்பு கோமா நிலையில் இருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
இந்த நிலையில்தான், இந்த சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக தங்கள் கூந்தலை கத்தரித்துக் கொண்டும், ஹிஜாபை எரித்தும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் இரானிய பெண்கள்.
ட்விட்டரில் மாசா அமினி என்ற ஹேஷ்டேகின் கீழ் தங்கள் கண்டனத்தை கருத்துகளாகவும், வீடியோவாகவும் அவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக, "லாக்கப் மரணம்" என்று இதைக் குற்றம்சாட்டும் சிலர், "காவல்துறையே கொலை செய்தால் யாரை அழைப்பீர்கள்" என்று புகைப்படங்களை பகிர்ந்து ட்வீட் செய்துள்ளனர்.
கட்டாய ஹிஜாப் முறைதான் இதற்குக் காரணம் என்று குறிப்பிடும் சிலர், 'இந்த பாலினப் பாகுபாடு காட்டும் ஆட்சியாளர்களால்' தாங்கள் சலிப்படைந்து விட்டதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
அதுமட்டுமன்றி இந்த விவாகரத்தில் இரானிய அதி உயர் தலைவர் அலி காமனெயி மீதும் சிலர் நேரடியாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
குர்து இனத்தைச் சேர்ந்தவரான மாசா அமினியின் இறுதிச்சடங்கில் கூடிய இரானிய குர்திஸ்தான் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், அங்கு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்திலும் இரானிய காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இதையடுத்து, "இதுதான் உண்மையான இரான்" என்றும், "கட்டாய ஹிஜாப் மற்றும் இந்த அடிப்படைவாத காவல் குழுவை ஏற்றுக்கொள்ளாதீர்கள்" என்றும் இரானிய ஊடகவியலாளர் மாசி அலிககாட் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், இறுதிச் சடங்கில் நடந்த போராட்டத்தின்போது, 'சர்வாதிகாரிக்கு சாவு' என்று பொருள்படும் விதமாக 'டெத் டூ டிக்டேட்டர்' என்று அதி உயர் தலைவர் அலி காமனெயியைக் குறிப்பிட்டு முழக்கங்களை எழுப்பியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது. அப்போதும் ஒரு சிலர் தங்கள் ஹிஜாபைக் கழற்றினர்.
மேலும் இந்த அடிப்படைவாத அமலாக்க காவல்துறை குறித்து பேசிய, காமனெயியின் பழைய உரைகளின் பகுதிகள் சமூக வலைத்தளங்களில் மீண்டும் பரப்பப்படுகின்றன. அந்த வீடியோவில் "இஸ்லாமிய அரசின் கீழ் பெண்கள் அனைவரும் இஸ்லாமிய உடைக் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். அதை உறுதி செய்வதே இந்த காவல் குழுவின் வேலை" என்று அவர் பேசியுள்ளார்.
ஹிஜாப் உள்ளிட்ட மத விவகாரங்களுக்காக நடைபெறும் கைது சம்பவங்கள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மாசா அமினியின் மரணம் இந்த விவாகரத்தை போராட்டமாக மாற்றியுள்ளது.
முன்னதாக, இந்த மரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், மாசா அமினி தாக்கபட்டதாக எந்த அறிக்கைகளும் இல்லை என்றும் இரான் உள்துறை அமைச்சர் அப்டொல்ரா ரஹ்மானி ஃபஸ்லி அரசு தொலைக்காட்சிக்கு தெரிவித்திருந்தார்.
இரானில் சுமார் 8 முதல் 10 லட்சம் குர்து இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மீது நீண்டகாலமாகவே தாக்குதல் நடைபெற்று வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அடிப்படைவாத ஆட்சியாளர்களுக்கும் நாட்டின் பெரும்பகுதி இளம் கூட்டத்துக்கும் இடையிலான போராட்டமாக இது மாறியுள்ளது.
இதுதொடர்பாக இரானிய ஊடகவியலாளர் மாசி அலிககாட், ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்