You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யுக்ரேன் போரால் உலகம் உணவு சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் - எச்சரித்த ஐ.நா
- எழுதியவர், மட் மர்ஃபி
- பதவி, பிபிசி செய்தியாளர்
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் வரும் மாதங்களில் உலக அளவில் உணவு நெருக்கடி ஏற்படும் என ஐ.நா. எச்சரித்துள்ளது.
இந்த போர் காரணமாக, ஏழை நாடுகளில் விலைவாசி உயர்வால் உணவு பாதுகாப்பின்மை மோசமடைந்திருப்பதாக, ஐ.நா. தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
யுக்ரேனிலிருந்து ஏற்றுமதிகள் போருக்கு முந்தைய நிலைக்கு மீட்டெடுக்கப்படாவிட்டால், பல ஆண்டுகளாக நீடிக்கும் பஞ்சத்தை சில நாடுகள் எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோளம், கோதுமை உள்ளிட்ட தானியங்கள் யுக்ரேனிய துறைமுகங்கள் வாயிலாக பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த நெருக்கடி காரணமாக விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
இது உலக அளவில் விநியோகத்தைக் குறைத்து, மாற்று பொருட்களின் விலை உயர வழிவகுத்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த விலைகளைவிட, உலக அளவில் உணவுப்பொருட்களின் விலைகள் கிட்டத்தட்ட 30 சதவீதம் உயர்ந்துள்ளதாக, ஐ.நா. தெரிவித்துள்ளது.
"பசி, பஞ்சம் ஏற்படும்"
மே 18, புதன்கிழமை அன்று நியூயார்க்கில் பேசிய குட்டரஸ், இந்த நெருக்கடி, "கோடிக்கணக்கான மக்களை உணவுப் பாதுகாப்பின்மைக்குள்ளும், அதைத் தொடர்ந்து ஊட்டச்சத்து குறைபாடு, பசி மற்றும் பஞ்சம் ஆகியவற்றுக்குள்ளும் தள்ளும் ஆபத்து இருக்கிறது," என தெரிவித்தார்.
"நாம் ஒன்றாக செயல்பட்டால், போதுமான உணவு இப்போது நம் உலகில் உள்ளது. ஆனால், நாம் இப்போதே இந்த பிரச்னையை தீர்க்காவிட்டால், வரும் மாதங்களில் உலகளாவிய உணவு பற்றாக்குறையை நாம் சந்திக்க நேரிடும்" எனவும் அவர் கூறியுள்ளார்.
யுக்ரேனின் உணவு உற்பத்தி மற்றும் ரஷ்யா, பெலாரூஸின் உரங்கள் உற்பத்தியை உலக சந்தையில் மீண்டும் ஒருங்கிணைக்காமல் இந்த உணவு நெருக்கடிக்கு வேறொரு சிறந்த தீர்வை ஏற்படுத்த முடியாது என அவர் எச்சரித்துள்ளார்.
உணவுப்பொருட்கள் ஏற்றுமதியை இயல்புநிலைக்கு மீட்டெடுக்க ரஷ்யா, யுக்ரேன், மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் "நெருங்கிய தொடர்பில்" தான் இருப்பதாகவும் குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
"பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் நிதி தாக்கங்களுக்கு அனைத்து தரப்புகளிலிருந்தும் நல்லெண்ணம் தேவை" என அவர் கூறியுள்ளார்.
உணவு பாதுகாப்பின்மையை சரிசெய்யும் திட்டங்களுக்கு உலக வங்கி மேலும் 12 பில்லியன் டாலர் (9.7 பில்லியன் பவுண்ட்) நிதியுதவியை அறிவித்த அதே நாளில் குட்டரஸ் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த நிதியுதவி மூலம் அடுத்த 15 மாதங்களில் இத்தகைய திட்டங்களுக்காக கிடைக்கப்பெற்றுள்ள மொத்த தொகை 30 பில்லியன் பவுண்ட் ஆக உள்ளது.
"ரஷ்யா தொடங்கிய தானிய போர்"
ரஷ்யா மற்றும் யுக்ரேன் உலகளவில் கோதுமை விநியோகத்தில் 30 சதவீதத்தை உற்பத்தி செய்கின்றன. போருக்கு முன்பு உலகின் 'ரொட்டிக் கூடை' என பார்க்கப்பட்ட யுக்ரேன், அதன் துறைமுகங்கள் வாயிலாக 4.5 மில்லியன் டன் அளவில் மாதந்தோறும் வேளாண் உற்பத்தியை ஏற்றுமதி செய்துவந்தது.
ஆனால், யுக்ரேன் மீது பிப்ரவரி மாதத்தில் ரஷ்யா படையெடுப்பை தொடங்கியபோது, ஏற்றுமதி சீர்குலைந்து, விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. கடந்த சனிக்கிழமை (மே 14) கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தபின் அதன் விலைவாசி இன்னும் உயர்ந்தது.
யுக்ரேனில் முந்தைய அறுவடையில் இருந்து வந்த சுமார் 20 மில்லியன் டன் அளவு தானியங்கள் யுக்ரேனில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ள ஐ.நா. அவை விடுவிக்கப்பட்டால் உலக சந்தைகளில் அழுத்தத்தைக் குறைக்கலாம் என தெரிவித்துள்ளது.
ரஷ்ய படையெடுப்புக்கு முன்னதாகவே, உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்துவந்த நிலையில், ரஷ்யா இன்னும் கடினமான சூழலுக்கு தள்ளியுள்ளதாக, ஜெர்மன் வெளியுறவுதுறை அமைச்சர் அன்னலேனா பேர்போக் புதன்கிழமை குற்றம்சாட்டினார்.
"தானியப் போரை ரஷ்யா தொடங்கியுள்ளது. உலகளாவிய உணவு நெருக்கடியை அது தூண்டியுள்ளது," என அவர் தெரிவித்துள்ளார். "மில்லியன் கணக்கான மக்கள், குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மக்கள் பட்டினி ஏற்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் ரஷ்யா இதை செய்துள்ளது" என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, "மிகப் பெரியளவில் உலகளாவிய உணவு நெருக்கடியை சமகாலத்தில்" உலகம் எதிர்கொண்டு வருவதாக, அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் "தேர்ந்தெடுக்கப்பட்ட போர்" மூலம் இச்சூழல் மோசமாகிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்