இம்ரான் கான் அரசுக்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு - தப்பிப் பிழைப்பாரா?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம், அவரது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான சோதனையாகப் பார்க்கப்படுகிறது. அந்த தீர்மானம் மீது ஞாயிற்றுக்கிழமை விவாதத்துடன் கூடிய வாக்கெடுப்பு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் டெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சித் தலைவருமான இம்ரான் கான், தனக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தேவையான எண்ணிக்கை ஆதரவு குறைந்தபோதும் மனம் தளரவில்லை என்று கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.

இது தொடர்பாக தொலைக்காட்சியில் அவர் ஆற்றிய உரையின்போது பெரும்பான்மை ஆதரவுக்கான எண்ணிக்கை குறைந்து போனாலும், "பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன். கடைசி பந்துவரை ஆடுவேன்" என்று கூறினார். நம்பிக்கை வாக்கெடுப்பை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்வேன் என்றும் அவர் சூளுரைத்தார்.

மேலும் அவர், பாகிஸ்தானின் சக்திவாய்ந்த ராணுவம் தனக்கு, நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ளுங்கள் அல்லது முன்கூட்டியே தேர்தலை நடத்துங்கள் அல்லது பிரதமர் பதவியில் இருந்து விலகுங்கள் என மூன்று தேர்வுகளை வழங்கியதாகத் தெரிவித்தார்.

சரி, இனி இம்ரான் கான் அரசு நடைமுறையில் என்ன சவால்களை எதிர்கொள்கிறது என பார்ப்போம்.

இம்ரானுக்கு என்ன சவால்?

பிரதமர் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சித் தலைவரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சித் தலைவருமான ஷபாஸ் ஷெரீஃபால் மார்ச் 28 அன்று தாக்கல் செய்யப்பட்டது.

69 வயதான இம்ரான் கான், ஒரு புதிய பாகிஸ்தானை உருவாக்க வேண்டும் என்ற முழக்கத்தோடும், சில வாக்குறுதிகளோடும் 2018 இல் ஆட்சிக்கு வந்தார்.

ஆனால், விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பது, போன்ற அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்க்கத் தவறியதால் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறார்.

பல தசாப்தங்களாக வேரூன்றியிருந்த ஊழலைத் துடைப்பதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த அவர், விண்ணை முட்டும் பணவீக்கம், முடக்கப்பட்ட கடன் போன்ற நிர்வாகச் சுமைகளால் ஆட்சியை நடத்த கூட்டணி கட்சிகளின் ஆதரவை தக்கவைக்கவே போராடினார்.

பாகிஸ்தானை பொறுத்தவரை அரசியல் அதிகாரத்திற்கு முக்கிய ஆதாரமாக ராணுவ பலம் இருந்துவரும் நிலையில், இம்ரான் கான் ராணுவத்தின் ஆதரவையும் இழந்துவிட்டார் என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி இருக்கும்?

இனி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு எப்படி செயல்படுகிறது? என பார்ப்போம்.

பாகிஸ்தான் அரசியலமைப்பின் கீழ், 342 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் பெரும்பான்மை பலம் அடிப்படையில் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அந்த வகையில் பிரதமர் ஆக வேண்டுமானால், அந்த பதவிக்கான வேட்பாளருக்கு 172 அல்லது அதற்கு மேற்பட்ட எம்.பிக்களின் வாக்குகள் தேவை.

ஆட்சி அமைத்த பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டுமானாலும் , இதே எண்ணிக்கை பலம் பிரதமருக்கு இருக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகளின் முயற்சியை முறியடிக்க, இம்ரான் கானுக்கு 172 வாக்குகள் தேவை. ஆனால், தனது சொந்தக் கட்சியான பி.டி.ஐ-ல் இருந்து பல உறுப்பினர்கள் விலகிச் சென்றது அவரை ஆழமான சிக்கலில் தள்ளியிருக்கிறது.

வாக்கெடுப்புக்கு பிறகு என்ன நடக்கும்?

இம்ரான் கான் வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தால்கூட தற்போதைய நாடாளுமன்றத்தின் ஐந்தாண்டு பதவிக்காலம் ஆகஸ்ட் 2023இல் முடிவடையும் வரை தொடர்ந்து செயல்படலாம். அதன் பிறகு 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும்.

அதுவரை புதிய பிரதமராக பணியாற்றுபவரை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்படும். அப்போது நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்ட எந்தக் கட்சியும் தமது தரப்பு வேட்பாளர்களை முன்னிறுத்தலாம். எவ்வாறாயினும், புதிய பிரதமர் 2023ஆம் ஆண்டு வரை காத்திருக்காமல் உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த அழைப்பு விடுக்கலாம்.

ஒருவேளை எந்தவொரு வேட்பாளருக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் சில அரசியலமைப்பு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இம்ரான் கானுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன?

சொந்த கட்சியில் உள்ள அதிருப்தியாளர்கள் தனக்கு எதிரான தீர்மானத்தை ரகசியமாக ஆதரிக்கும் நிலையை தடுக்கும் நோக்குடன், வாக்கெடுப்பு நடத்தப்படும் நாளில், தனது சொந்த கட்சியான் PTI -இன் எம்.பிக்கள் யாரும் நாடாளுமன்றத்துக்கு வர வேண்டாம் என்று இம்ரான் கான் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.

உறுப்பினர்கள் அவைக்கு வராமல் இருப்பதால் அவர் வெற்றி பெற தமது ஆதரவு பலத்தை நிரூபிக்க வேண்டியதில்லை. அதேசமயம், எதிர்கட்சிகளுக்கு தேவைப்படும் 172 வாக்குகளை அவை பெறாமல் இருக்க தேவையான உத்தியை அவர் கையாளலாம்.

இதற்கிடையே பாகிஸ்தான் நீதிமன்றத்திலும் இம்ரான் கான் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். தனக்கு எதிராக திரும்பக் கூடிய அதிருப்தி எம்பிக்கள் மீது வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க உத்தரவிடும்படி அந்த மனுவில் இம்ரான் கான் கோரியிருக்கிறார்.

பதவிக்காலத்தை முழுமையாக வகிக்காத பிரதமர்கள்

பாகிஸ்தான் அரசியலில் பிரதமராக இருப்பவர்களுக்கு என ஒரு வரலாறு உண்டு. அது அந்த நாட்டில் இதுவரை எந்தப் பிரதமரும் ஐந்தாண்டுகள் பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்ததில்லை.

கடந்த 50 ஆண்டுகளில் பாகிஸ்தானில் எந்தவொரு பிரதமரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டது இல்லை. 1989இல் பெனாசீர் பூட்டோ, 2006இல் ஷெளகத் அஜீஸ் ஆகியோருக்கு எதிராக எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தபோது அதில் அவர்கள் வென்றுள்ளனர். இவர்களின் வரிசையில் தற்போது எதிர்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பு சவாலை எதிர்கொள்ளும் மூன்றாவது பிரதமர் ஆகியிருக்கிறார் இம்ரான் கான்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :